பதஞ்சலி லேகிய கும்பலிடமிருந்து நிரந்தர நிவாரணம் தேவை!

பதஞ்சலி லேகிய கும்பலிடமிருந்து நிரந்தர நிவாரணம் தேவை!

தஞ்சலி நிறுவனம் தங்களது ஆயுர்வேத மருந்துகள் விளம்பரங்களில் ரத்த அழுத்தம், உடல் பருமன், ஆஸ்துமா, டயபடீஸ் போன்ற நோய்களை குணப்படுத்தும் என்று விளம்பரங்கள் வெளியிட்டது பற்றி நான் முன்பே எழுதி இருந்தேன் அந்த விளம்பரங்களுக்கு எதிராக இந்திய மருத்துவ இணையம் (IMA) வழக்குத் தொடுத்திருந்தது. அந்த வழக்கில் ஆஜரான பதஞ்சலி நிறுவன அதிகாரிகள் ‘இனிமேல் அப்படிப்பட்ட விளம்பரங்களை வெளியிட மாட்டோம்,’ என்று எழுத்து மூலமான உறுதிமொழி கொடுத்து வழக்கில் இருந்து தப்பித்தார்கள். ஆனால் அந்த விளம்பரங்கள் நின்றபாடில்லை. சிறிய மாற்றத்துடன் அவை இன்னமும் தொடருகின்றன. என்ன இந்த நோய்களை குணமாக்கும் என்பதற்கு பதில் ‘நிரந்தர நிவாரணம்’ தரும் என்று விளம்பரப்படுத்துகிறார்கள்.

Cure என்பதற்கு பதில் Permanent Relief எனும் சொற்றொடரை பயன்படுத்துகிறார்கள். இதைக் குறித்தும் IMA புகார் அளிக்கவே, உச்ச நீதிமன்றம் கோபம் கொண்டு பதஞ்சலி மீது தானாகவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கைப் போட்டிருக்கிறது. விசாரணையில் ஆஜரான அந்த நிறுவனத்தின் வழக்கறிஞரிடம் நீதிபதி சீறியிருக்கிறார்: ‘அது என்னய்யா “நிரந்தர நிவாரணம்”? ஒண்ணு பேஷண்ட் செத்துப் போகணும். இல்லே குணமாகனும். இந்த ரெண்டுல ஒண்ணுதானே நிரந்தர நிவாரணம்?’ என்று கேட்டிருக்கிறார்!

இப்படிப்பட்ட தில்லாலங்கடி விளம்பரங்கள் ஒரு பக்கம் இருக்க, பதஞ்சலி நிறுவனமும் அதன் ஆன்மீக ஆலோசகர் பாபா ராம்தேவும் தொடர்ந்து நவீன மருத்துவம் குறித்து அவதூறுப் பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும் IMA குற்றம் சாட்டி வருகிறது. இவர்கள் விளம்பரங்களில் எல்லாம் நவீன மருத்துவத்தில் பக்க விளைவுகள் இருப்பதாகவும் ஆனால் பதஞ்சலி கொடுக்கும் ஆயுர்வேத மருந்துகள் பக்க விளைவுகள் அற்றவை என்றும் கூற்றுகளை முன்வைக்கிறார்கள். இப்படி விமர்சனங்கள் செய்வதில் பாபாதான் ஹைலைட். ‘அல்லோபதி’ என்று (தவறாக) குறிப்பிடப்படும் நவீன மருத்துவ முறைகளை ‘தோற்றுப் போன மருத்துவம்’ என்று முன்னர் பாபா ராம்தேவ் குற்றம் சாட்டிப் பேசி இருக்கிறார். [3] அது சர்ச்சையாகவே பின்னர் அவர் மன்னிப்பும் கேட்டது தனிக் கதை. கொரோனா காலத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை வந்த போது, ‘ஆக்சிஜனை ஏன் சிலிண்டரில் தேடுகிறாய்? பிரபஞ்சம் முழுக்க ஆக்ஸிஜன் நிரம்பி இருக்கிறதே? உங்கள் மூக்கிலேயே இரண்டு சிலிண்டர்கள் உள்ளனவே,’ என்றெல்லாம் பேசிய வரலாறு அவருக்கு இருக்கிறது! அப்படிப்பட்ட ஒரு அறிவாளி வழிகாட்டி நடத்தும் நிறுவனம் நவீன மருத்துவத்தை விமர்சனம் செய்து விளம்பரங்கள் வெளியிட்டு வருகிறார்கள்.

இந்த நிறுவனத்தின் ப்ராடக்ட்டுகள் குறித்து நான் 2016ல் இருந்தே எழுதி வந்திருக்கிறேன். பதஞ்சலி என்பது ஒரு சிட்டுக்குருவி லேகிய கம்பனி. அவ்வளவுதான். முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டிய கும்பல் இது. பாஜக மேலிடத்துடன் பாபாவுக்கு இருக்கும் நெருக்கம் மட்டுமே அவர்களை இந்த அளவு வளர விட்டிருக்கிறது. கூடவே ‘ஆயுர்வேதம், சித்தா போன்றவை அல்லோபதி(!)யை விட மேம்பட்டவை’ என்று இந்திய மக்களிடம் பொதுவாக நிலவும் மூட நம்பிக்கையும் இவர்கள் வளர்ச்சிக்கு இன்னொரு காரணம்.

இனிமேலாவது உச்ச நீதிமன்றம் இவர்களை கட்டுக்குள் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும். பதஞ்சலி லேகிய கும்பலிடம் இருந்து இந்திய மக்களுக்கு ‘நிரந்தர நிவாரணம்’ கிடைக்கும்படி ஒரு உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்று கனம் கோர்ட்டார் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

– ஸ்ரீதர் சுப்ரமணியம்

error: Content is protected !!