தேசிய மாம்பழ தினமின்று!

ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 22ஆம் தேதி, இந்தியாவின் தேசிய பழமான மாம்பழத்தைக் கொண்டாடும் விதமாக, தேசிய மாம்பழ தினமாக (National Mango Day) அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள்,தினத்தில், மக்கள் மாம்பழங்களைப் பகிர்ந்து கொள்வது, மாம்பழம் சார்ந்த உணவுகளைத் தயாரிப்பது, தோட்டங்களுக்குச் சென்று மாம்பழங்களை ரசிப்பது போன்ற கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர். இந்த நாள், மாம்பழத்தின் அறுவடை காலத்தின் உச்சகட்டத்திலும் வருவதால், அதன் சுவையை முழுமையாக அனுபவிக்க ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது. அதாவது மாம்பழத்தின் இனிமையான சுவை, ஊட்டச்சத்து மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தைப் போற்றும் ஒரு வாய்ப்பாகும்.
மாம்பழத்தின் தொன்மையான வரலாறு
மாம்பழங்களுக்கு ஒரு நீண்ட மற்றும் வளமான வரலாறு உண்டு. சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் மாம்பழங்கள் முதன்முதலில் வளர்க்கப்பட்டன. இது வெறும் ஒரு பழமாக மட்டுமல்லாமல், இந்திய நாட்டுப்புறக் கதைகள் மற்றும் மத சடங்குகளுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. புத்தருக்கு ஒரு மாம்பழத் தோட்டம் பரிசாக வழங்கப்பட்டதும் வரலாற்றில் பதிவாகியுள்ளது.
ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழி பேசும் நாடுகளில் பயன்படுத்தப்படும் ‘மாம்பழம்’ (Mango) என்ற சொல் பெரும்பாலும் மலாய் வார்த்தையான ‘மன்னா’ (Manna) என்பதிலிருந்து பெறப்பட்டது. போர்த்துகீசியர்கள் மசாலா வர்த்தகத்திற்காக 1498 ஆம் ஆண்டில் கேரளாவுக்கு வந்தபோது, இந்தப் பழங்களை ‘மங்கா’ (Manga) என்று ஏற்றுக்கொண்டனர்.
உலகம் முழுவதும் மாம்பழத்தின் பரவல்
மாம்பழ விதைகள் முளைக்கும் காலம் குறைவாக இருந்ததால், ஆரம்பத்தில் உலகின் பிற பகுதிகளுக்கு இந்தப் பழத்தைப் பரப்புவது கடினமாக இருந்தது. இதனால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே அவை வளரும் என்பது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக, மேற்கு அரைக்கோளத்தில் 1700 ஆம் ஆண்டு வரை மாம்பழ மரம் அறிமுகப்படுத்தப்படவில்லை. பின்னர், பிரேசிலில் இந்த விதைகள் நடப்பட்டதன் மூலம் மாம்பழங்கள் 1740 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகளுக்குள் நுழைந்து, அங்கிருந்து உலகம் முழுவதும் பரவத் தொடங்கின.
தமிழ் இலக்கியத்திலும் ‘பழங்களின் அரசன்’
தமிழ் இலக்கியத்தில் முக்கனிகளில் ஒன்றாக மாம்பழம் குறிப்பிடப்படுகிறது. மா, பலா, வாழை என வரிசைப்படுத்தப்படும் முக்கனிகளில், மாம்பழத்திற்கு மயங்காதவர்களே இருக்க முடியாது என்று சொல்லலாம். வயது வித்தியாசமின்றி அனைவரும் விரும்பிச் சாப்பிடும் அளவுக்கு அதன் சுவை பெரும்பாலானவர்களுக்குப் பிடிக்கும். அதனால்தான் மாம்பழங்கள் ‘பழங்களின் அரசன்’ என்றும் அழைக்கப்படுகின்றன.
மாம்பழத்தின் சிறப்பு அம்சங்கள்:
- ஊட்டச்சத்து நிறைந்த பழம்: மாம்பழம் வைட்டமின்கள் (குறிப்பாக வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ), நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஒரு சத்தான பழம். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செரிமானத்திற்கு உதவவும், கண் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது.
- பல்வகை சுவை: அல்போன்சா, பங்கனப்பள்ளி, மல்கோவா, நீலம், கிளிமூக்கு, செந்தூரா எனப் பல நூறு வகையான மாம்பழங்கள் இந்தியாவில் விளைகின்றன. ஒவ்வொரு வகைக்கும் ஒரு தனித்துவமான சுவையும், மணமும் உண்டு.
- பயன்பாடுகள்: மாம்பழம் வெறும் பழமாக மட்டுமல்லாமல், ஜூஸ், மில்க் ஷேக், ஜாம், ஊறுகாய், பாயசம், புட்டு, இனிப்புகள் எனப் பலவிதமான உணவுப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. பழுக்காத மாங்காய், சட்னி மற்றும் கறி வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
- பொருளாதார முக்கியத்துவம்: மாம்பழ சாகுபடி, இந்தியாவில் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
தேசிய மாம்பழ தினத்தில், மாம்பழத்தின் இந்த நீண்ட வரலாற்றையும், அதன் உலகளாவிய வெற்றியையும், நமது கலாச்சாரத்தில் அதன் அழியா இடத்தையும் கொண்டாடுவோம். இந்த அற்புதமான பழத்தின் சுவையையும், ஆரோக்கிய நன்மைகளையும் அனுபவிக்க இது ஒரு சிறந்த வாய்ப்பு.
டாக்டர். ரமாபிரபா