’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ – விமர்சனம்

’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ – விமர்சனம்

கோலிவுட்டின் நகைச்சுவை ஜாம்பவான் வடிவேலுவுக்கு ரெட் கார்ட் கொடுத்ததில் இருந்து தமிழ் படவுலகில் காமெடிக்கான வெற்றிடமே உள்ளது என்பதில் சந்தேகமில்லை. பேரைச் சொல்லாமல் போட்டோவைக் காட்டினாலே குபுக்கென்று சிரிப்பு வரவழைக்கும் நடிகர்களில் தலையானவர் வடிவேலு. நம். தமிழ் சினிமா காமெடி நடிகர்களில் வடிவேலு அடைந்த உச்சம் புது தினுசு. தமிழ் கூறும் நல்லுலகில், அத்தனை வயதுக்காரர்களும் பாரபட்சமில்லாமல் வடிவேலுவின் ‘பஞ்ச்’ பேசாமல் ஒரு நாளைக் கூட கழிப்பதே இல்லை. அப்பேர்பட்ட கோடம்பாக்க வட்டச்செயலாளர் வண்டு முருகனின் லொள்ளுகளில் ஒன்றான நாய் சேகர் டைட்டிலுடன் வடிவேலு ரீ எண்ட்ரி ஆகி கவர முற்பட்டிருக்கும் படத்தின் விமர்சனங்களை புறந்தள்ளி விட்டு ஒரு முறை தாராளமாகப் பார்க்கலாம் என்பதே உண்மை.

படத்தின் கதை என்னவென்றால் பெரியவர் வேலராமமூர்த்தி, பைரவர் கோயிலொன்று போய் தனக்கு புத்திரப் பாக்கியம் வேண்டுமென்று கோருகிறார். அப்பொழுது அங்கு வரும் சித்தர் வேலராமமூர்த்தியிடம் ஒரு நாயை கொடுத்து இந்த நாயை வைத்துக் கொண்டால் உங்களுக்கு சகல பாக்கியமும் கிடைக்கும் என்று சொல்லி போய் விடுகிறார். நாய் வந்த நேரம் வேலராமமூர்த்தி தம்பதிக்கு மகனாக வடிவேலு பிறக்கிறார். இதையடுத்து செல்வ செழிப்புடன் வளர்கிறது வடிவேலுவின் குடும்பம். அந்த நேரம் பார்த்து வீட்டில் வேலைக்காரனாக வாலண்டியராக வந்த ராவ் ரமேஷ் நாயை கடத்திச் சென்று மிகப்பெரிய செல்வந்தராக மாறிவிடுகிறார்.

இதையடுத்து வருடங்கள் கடக்க சமகாலத்தில் இருக்கும் வடிவேலு வளர்ந்த பிறகு அவர்கள் வறுமையில் கஷ்ட்டப்படுவதோடு, நாய்களை திருடி பிழைப்பு நடத்துகிறார் அச்சூழலில் குடும்பத்தை தழைக்க வந்த அதிசய நாயை ஒருவன் திருடிசென்றதால்தான் இந்த வறுமை ஏற்பட்டது என்று அவரது பாட்டி சொல்ல, திருடப்பட்ட தங்களது அதிசய நாயை தேடி செல்லும் வடிவேலு அதை கண்டுபிடித்து மீட்டாரா? இல்லையா? என்பதை காமெடியாக சொல்வது தான் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’.

கதையின் நாயகனாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் வரும் வடிவேலு. பார்வையாளர்கள் பார்த்துப் பார்த்து ரசித்து குலுங்கி சிரித்த தனது தனித்துவ உடல் மொழியை வார்த்திருக்கிறார். அவருக்கான அறிமுகக் காட்சிகளே ரசிக்க வைக்கிறது. வழக்கமான தனக்கே உரிய பாடிலாங்குவேஜில் ஸ்டைலாக நடந்து வருவது, வசனமற்ற காட்சிகளிலும் தனது முகபாவனையால் சிரிக்க வைப்பது, இங்கிலீஷ் பேசும் அந்த ஸ்டைல், டம்மியான தன்னை மாஸாக காட்ட நினைத்து பல்பு வாங்குவது என ஈர்க்க முயன்று இருக்கிறார்.. ஆனால் வடிவேலு தோன்றினாலே சிரிக்க ஆயத்தமாகும் ரசிகர்கள், பல இடங்களில் அமைதியாக இருப்பது பெரிய ஏமாற்றம்தான்..

ஆனால் ஆனந்த்ராஜ் வரும் போதெல்லாம் சிரிப்பலை எட்டிப் பார்க்கிறது. டுபாக்கூர் கூட்டாளிகளுடன் அவர் நடத்தும் ‘கடத்தல்’ தர்பார் பல இடங்களில் ரசிக்க வைக்கிறது. ரெடின் கிங்க்ஸ்லீ வழக்கமான தனது பாணியில் சில இடங்களில் புன்முறுவலையும், ஒரு சில காட்சிகளில் வாய்விட்டு சிரிக்கவும் வைக்கிறார். ஷிவாங்கி செட் ப்ராபர்டி போல் வந்து போகிறார் . தவிர முனிஷ்காந்த், லொள்ளு சபா ஷேஷூ, கேபிஒய் ராமர், கேபிஓய் பாலா, லொள்ளு சபா மாறன், மனோபாலா வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள்

விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவில் அனைத்து காட்சிகளும் கலர்புல்லாக இருப்பதோடு, பிரமாண்டமாகவும் இருக்கிறது

சந்தோஷ் நாராயணைன் இசையில் பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைத்தாலும், அவர் சரியான இடத்தில் இடம்பெறாததால் படத்தில் திணிக்கப்பட்டது போல் இருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு வைகைப்புயல் வடிவேலு கம்பேக் கொடுத்து ரசிகர்களை எதிர்பார்ப்பில் எகிற வைத்த இயக்குநர் சுராஜ். முழுக்க முழுக்க காமெடியை மட்டுமே மையப்படுத்தி திரைக்கதை அமைத்து வழக்கமாக வடிவேலுடன் பயணிக்கும் நடிகர்களை தவிர்த்துவிட்டு தற்போதைய டிரெண்டுக்கு ஏற்றவாறு புதிய நடிகர்களை பயன்படுத்தியிருக்கும் புத்தியை கதையிலும் , திரைக்கதையிலும் அழுத்தம் காட்டி இருந்தால் எடுப்பட்டிருக்கும்

மொத்தத்தில், ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ – பார்க்கலாம்

மார்க் 3/5

Related Posts