மிஸ்டர் எக்ஸ்:- சினிமா விமர்சனம்!

மிஸ்டர் எக்ஸ்:- சினிமா விமர்சனம்!

ந்திய உளவு அமைப்பான ‘ரா’ (RAW), அணு ஆயுதம், சர்வதேச சதி என ஒரு பிரம்மாண்டமான களத்தைத் தேர்ந்தெடுத்து, அதை ஆங்கிலப் படங்களுக்கு நிகராகச் சொல்ல முயன்றிருக்கிறது இந்த ‘மிஸ்டர் எக்ஸ்’. ஆனால், அந்த முயற்சி வெற்றி பெற்றதா? பார்ப்போம்.

கதைக்கரு: இந்தியாவின் அணு ஆயுதத் தயாரிப்புக்கான மிக முக்கியமான மூலப்பொருளைப் பல ஆண்டுகளாகப் பாதுகாத்து வருகிறார் ‘ரா’ உளவாளி சரத்குமார். எதிர்பாராதவிதமாக அவர் ரஷ்ய ராணுவத்திடம் சிக்க, அந்தப் பொருள் பாகிஸ்தானுக்குக் கைமாறும் சூழல் உருவாகிறது. சரத்குமாரையும் அந்த ரகசியப் பொருளையும் மீட்க, மஞ்சு வாரியர் தலைமையிலான குழு களமிறங்குகிறது. முதல் முயற்சி தோல்வியில் முடிய, சிறையில் இருக்கும் மற்றொரு உளவாளியான ஆர்யாவை வெளியே கொண்டுவந்து மீண்டும் ஒரு மிஷன் தொடங்கப்படுகிறது. இந்தச் சர்வதேச சதுரங்க வேட்டையில் ‘மிஸ்டர் எக்ஸ்’ யார்? சதி முறியடிக்கப்பட்டதா என்பதே கிளைமாக்ஸ்.

நடிப்பு எப்படி? உளவாளி கதாபாத்திரத்திற்குத் தேவையான கட்டுக்கோப்பான உடலமைப்புடன் ஆக்‌ஷன் காட்சிகளில் ஆர்யா அதிரடி காட்டுகிறார். ஆனால், நடிப்பில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ‘தி ராக்’ பட ஷான் கானரி பாணியில் வடிவமைக்கப்பட்ட சரத்குமார், தனது அனுபவ முத்திரையைப் பதிக்கிறார். கிளைமாக்ஸில் அவர் கொடுக்கும் ட்விஸ்ட் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பை விதைக்கிறது.

வில்லனாக வரும் கௌதம் கார்த்திக், தனது தோற்றத்திற்குப் பொருந்தாத அந்தப் பாத்திரத்தில் நடிக்கக் கடுமையாக மெனக்கெட்டிருப்பது தெரிகிறது. மஞ்சு வாரியர், ரய்சா, அதுல்யா ரவி, காளி வெங்கட் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே இருந்தாலும், வலுவில்லாத திரைக்கதையால் அவர்கள் ‘வந்து போனார்கள்’ என்ற அளவிலேயே இருக்கிறார்கள்.

தொழில்நுட்பம்: படத்தின் மிகப்பெரிய பலம் தொழில்நுட்பக் கலைஞர்கள். அருள் வின்சென்ட்டின் ஒளிப்பதிவு வெளிநாட்டு லொக்கேஷன்களை ஹாலிவுட் தரத்தில் காட்டியுள்ளது. திபு நினன் தாமஸின் பின்னணி இசை அதிரடி காட்சிகளுக்குத் தேவையான வேகத்தைத் தருகிறது. ஸ்டண்ட் சில்வாவின் சண்டைப் பயிற்சி மற்றும் ராஜீவனின் கலை இயக்கம் எனத் தயாரிப்புச் செலவு திரையில் பிரம்மாண்டமாகத் தெரிகிறது.

இயக்கம் மற்றும் திரைக்கதை: இயக்குநர் மனு ஆனந்த், உண்மைச் சம்பவங்களைத் தழுவி இந்தக் கதையை உருவாக்கினாலும், திரைக்கதையில் ‘லாஜிக்’ மீறல்களைக் கோட்டை விட்டிருக்கிறார். உளவாளிகள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குச் சுற்றுலாப் பயணிகள் போல மிக எளிதாகப் பயணிப்பதும், அணு ஆயுதப் பொருட்களைச் சாதாரணமாகக் கையாள்வதும் கதையின் நம்பகத்தன்மையைக் குலைக்கிறது.

“புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொண்ட” கதையாக, ஆங்கிலப் படங்களின் சாயலை அப்படியே கொண்டுவர முயன்று, நம் ஊர் யதார்த்தத்தைத் தொலைத்திருக்கிறார்கள். ‘ராணா’ என்ற கண்ணுக்குத் தெரியாத குற்றவாளிக்கும், ஒரு கிராமத்து மனிதருக்கும் இருக்கும் தொடர்பு போன்ற பல காட்சிகள் பலவீனமாக உள்ளன.

பாட்டம் லைன்:

பிரமாண்டமான செலவு, தொழில்நுட்ப உழைப்பு எனப் படம் பலமாகத் தொடங்கினாலும், ஆழமில்லாத திரைக்கதையால் ‘மிஸ்டர் எக்ஸ்’ எடுபடவில்லை. லாஜிக் பார்க்காமல் வெறும் ஆக்‌ஷன் மட்டும் போதும் என்பவர்களுக்கு இந்தப் படம் ஒருமுறை பார்க்கலாம்.

மார்க்: 2.25/5

Related Posts