அன்னையர் தினம் 2026: ஒரு உன்னத உணர்வின் பின்னால் இருக்கும் நெகிழ்ச்சி வரலாறு!
அம்மா… வார்த்தையிலும் வாழ்க்கையிலும் மிகச்சிறந்த சொல். எதிர்பார்ப்பில்லா உறவின் அடையாளம். அம்மா என்பது வெறும் வார்த்தை அல்ல, வாழ்வின் சாரம். எல்லாருடைய வாழ்விலும் தாயின் பங்கு அளப்பரியது. அன்னை என்ற சொல்லின் வலிமை மிகப்பெரியது. அன்னையின் பாசத்திற்கு மயங்காதவர் இவ்வுலகில் எவருமிலர். மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் அன்னையர் தினம், 2026-ல் இன்று மே 10-ல் வந்துள்ளது. அண்மைகாலமாக நாம் அனைவரும் அன்னையர் தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகிறோம். அன்றைய தினம் வாழ்த்துகள் சொல்வதும், பரிசு பொருள்கள் கொடுப்பதும் ஒரு வழக்கமாகி விட்டது. ஆனால், இந்தத் தினம் எப்படி உருவானது என்பது ஒரு நெகிழ்ச்சியான வரலாறு.
ஆன் ரீவ்ஸ் ஜார்விஸ்: சமூகப் பணியில் ஒரு தாயின் தடம்
அன்னையர் தினத்தின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஆன் ரீவ்ஸ் ஜார்விஸ். 19-ஆம் நூற்றாண்டில் ‘அன்னையர் தின வேலைக் குழுக்களை’ உருவாக்கிய இவர், போர்க் காலத்தில் காயமடைந்த வீரர்களுக்குச் சிகிச்சை அளிக்கவும், சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அரும்பாடுபட்டார். அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்த அவர் ‘அன்னையர் நட்பு தினத்தை’ உருவாக்க விரும்பினார். அவரது மறைவிற்குப் பிறகு, மகள் ஆன்னா ஜார்விஸ் தனது தாயின் தியாகத்தைப் போற்றும் வகையில் ஒரு தனி நாளை உருவாக்க உறுதியேற்றார். 1908-ஆம் ஆண்டு, தனது தாயின் நினைவாக மேற்கு வர்ஜீனியாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் முதல் அதிகாரப்பூர்வ அன்னையர் தின நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தினார்.

வெள்ளை கார்னேஷன் மலர்களும் உட்ரோ வில்சனின் அங்கீகாரமும்
அன்னையர் தினம் என்பது ஒவ்வொருவரும் தனது சொந்த தாய்க்குச் செய்யும் தனிப்பட்ட நன்றிக்கடனாக இருக்க வேண்டும் என்பது ஆன்னாவின் எண்ணமாக இருந்தது. இதற்காக அவர் தூய்மையின் அடையாளமாக வெள்ளை நிற ‘கார்னேஷன்’ மலர்களைப் பயன்படுத்தினார். ஆன்னா ஜார்விஸின் இடைவிடாத முயற்சியால், 1914-ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன், மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை அதிகாரப்பூர்வமாக ‘அன்னையர் தினமாக’ அறிவித்து கையெழுத்திட்டார். ஆனால் காலப்போக்கில், இது வாழ்த்து அட்டைகள் மற்றும் பரிசுகள் விற்கும் ஒரு வியாபார சந்தையாக மாறியது ஆன்னாவிற்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. “நான் இதை ஒரு புனிதமான நாளாக உருவாக்க நினைத்தேன், ஆனால் இது இன்று வியாபாரமாகிவிட்டது” என்று அவர் வருந்திப் போராட்டங்களைக் கூட நடத்தினார்.
படைப்பின் ஆதாரமாகத் திகழும் பெண்மை
தாயின் அன்பு, அரவணைப்பு மற்றும் தியாகத்தை அங்கீகரிக்கும் ஒரு உன்னதமான நாளாக இது இன்றும் நீடிக்கிறது. உண்மையில் இந்த அன்னையர் தினம் என்பது நம்மைப் பெற்றெடுத்த தாயை மட்டும் நினைவுகூர்வதல்ல, படைப்பின் ஒவ்வொரு அம்சத்திற்குமே நன்றி செலுத்துவதற்கான நேரம். ஏனெனில் ஆழமாகப் பார்த்தால், இந்தப் படைப்பில் உள்ள ஒவ்வொரு பொருளுமே நம் இருப்பிற்கான காரணியாக இருப்பதைப் பார்க்கமுடியும். அன்னையர் தினம் என்பது பழங்காலத்திலிருந்தே நம் நாட்டின் பெண் வடிவ கடவுளுக்கு உரிய வசந்த விழாவாக கொண்டாடப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். தாயாக, சகோதரியாக, தாரமாக, தோழியாக, பாட்டியாக, ஆசானாக பல்வேறு முகங்களைக் கொண்ட அவளுக்கு அன்னை என்ற முகமே உன்னதமான அடையாளமாகும்.
நன்றிக்கடன் தீர்க்க முடியாத பேராசை
இது வெறும் கொண்டாட்டம் அல்ல; அன்னையர் நமக்கு அளித்த உயிர், அன்பு, கருணை, வாழ்க்கை உள்ளிட்ட அனைத்துக்கும் நன்றி சொல்வதற்கான உன்னத முயற்சி. தொடுவானத்தை எப்படி தொட முடியாதோ, அதேபோல் அன்னைக்கான நன்றிக்கடனையும் நம்மால் அடைக்கவே முடியாது. அந்தக் கடனை நம்மால் தீர்க்க முடியாது என்பது தெரிந்தும், எப்படியாவது அதைச் சாதித்து விட மாட்டோமோ என்ற விடா முயற்சி தான் நம்மை அதை நோக்கித் தள்ளுகிறது. எனவே, இன்றைய நாளில் அன்னையர் தினத்தை பெயரளவில் கொண்டாடுவதோடு நின்றுவிடாமல், வாழ்நாளெல்லாம் உழைத்துத் தேயும் நம் அன்னையரை மனதார மகிழ்ச்சிப்படுத்தும் நாளாகக் கொள்வோம். ஒவ்வொரு வினாடியும் அன்னையை வணங்கிக் கொண்டு, நன்றிக் கடன் செலுத்திக் கொண்டே இருப்போம்.
அன்னையர் வாழ்க


