ஆட்சி முடியும் சூழலில் கூட வெறுப்பை விதைப்பதை மட்டுமே முழு நேர வேலையாக செய்யும் மோடி!

ஆட்சி முடியும் சூழலில் கூட வெறுப்பை விதைப்பதை மட்டுமே முழு நேர வேலையாக  செய்யும் மோடி!

‘’தென்னிந்திய மாநிலங்களில் கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. பள்ளிவாசல்கள் சர்ச்கள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை’’ என பிரதமர் மோடி வாய் திறந்துள்ளார்!! ‘’இவர் உண்மையிலேயே பிரதமர்தானா?’’ என்ற சந்தேகம் எனக்கு வருகின்றது!!

கோவில்களிலும் கூட சாய்பாபா கோயில்களிலோ மேல்மருவத்தூர் அம்மா, ஜக்கி வாசுதேவ் , காஞ்சி சங்கராச்சாரியார் உள்ளிட்டவர்கள் நடத்துகின்ற கோவில்களிலோ அரசு நிர்வாகம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. கோயில் குறித்து அவர் ஏதோ பேசிவிட்டு போகட்டும். அவராச்சு அவர் மதமாச்சு! அதில் உண்மை உள்ளதோ இல்லையோ அது குறித்து எனக்கு தேவையுமில்லை அவசியமும் இல்லை. காரணம் நான் அந்த மதத்தைச் சேர்ந்தவன் அல்ல.எனவே எனக்கு அதில் எதுவும் கருத்து சொல்ல உரிமையும் இல்லை.

ஆனால் பள்ளிவாசல்கள் குறித்து அவர் சொல்லியிருப்பது பச்சை பொய்! கோயில்களுக்கு இந்து அறநிலையத்துறை போல பள்ளிவாசல் மற்றும் தர்ஹாக்களுக்கு வஃபு வாரியம் என்ற அரசு துறை உண்டு! இந்து அறநிலையத்துறை அமைச்சர் போல இதற்கும் ஒரு அமைச்சர் உண்டு!

தற்போது இந்து அறநிலையத்துறைக்கு அண்ணன் சேகர்பாபு இருப்பது போல வஃபு துறை அமைச்சராக அண்ணன் மஸ்தான் இருக்கிறார். இது போக இதற்கென செயலாளராக தனி ஐ ஏ எஸ் அதிகாரி துவங்கி வாரியத்திற்கு தலைவர் உறுப்பினர்கள் வரை உண்டு. இவர்கள்தான் தமிழகத்தின் அத்தனை பள்ளிவாசல் தர்ஹாக்களை நிர்வகிக்கின்றனர்.

2001 ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா முதலில் அன்வர் ராஜாவை அமைச்சராக்கினார். பிறகு ஏதோ ஒரு காரணத்தால் அவரை நீக்கிய ஜெயலலிதா அவருக்கு பதிலாக எந்த ஒரு இஸ்லாமியரையும் அமைச்சராக நியமிக்காமல் அப்போது அமைச்சராக இருந்த் வ.து.நடராஜன் என்பரை வஃபு அமைச்சராக்கினார். பிறகு அவரிடம் இருந்து அந்தப் பொறுப்பை எடுத்து விட்டு நத்தம் விஸ்வநாதனை வஃபு அமைச்சராக்கினார். இந்து அறநிலையத்துறைக்கு யாரேனும் ஒரு இஸ்லாமியரை அல்லது கிருஸ்துவரை அமைச்சராக்கினால் மோடி பொறுப்பாரா?

மோடியை விட்டுத் தள்ளுங்கள்.. இங்குள்ள நண்டு சிண்டுகள் கூட பொறுக்குமா? ஆனால் ஜெயலலிதா வஃபு அமைச்சராக சகோதர சமூகத்தைச் சேர்ந்தவர்களை அமைச்சராக்கிய போது ‘’செரி அவர்களும் நம் சகோதரர்கள் தானே’’ என்று பொறுத்து தான் போனோம். இன்றைய முதல்வர் தளபதியார் மட்டுமே இது குறித்து அப்போது கண்டித்துப் பேசினார். ‘’அமைச்சரவையில் இஸ்லாமியர்களைப் புறக்கணித்து வஃபு வாரியத்தை மற்றவர்கள் நிர்வாகத்தின் கீழ் விடுவது சரியல்ல என அவர் மட்டும்தான் பேசினார். எனக்குத் தெரிந்து தளபதி அவர்களைத் தவிர எந்த ஒரு அரசியல் தலைவரும்.. அது காங்கிரஸோ கம்யூனிஸ்ட்டோ, பாமகவோ, விசிகவோ யாருமே இதைக் கேட்கவில்லை!!

ஆகவே திரு.மோடி அவர்களே, தமிழக பள்ளிவாசல் மற்றும் தர்ஹாக்கள் அத்தனையும் 100% அரசின் நிர்வாகத்தின் கீழ்தான் இருக்கிறது. அதை நிர்வகிக்கும் தலைமை பொறுப்பில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் இருந்த நிலையையும் கூட நாங்கள் கடந்து வந்துதான் இருக்கிறோம். ஆட்சி முடியும் இந்த சூழலில் கூட வெறுப்பை விதைப்பதை மட்டுமே முழு நேர வேலையாகக் கொள்ளாமல் போகப் போகின்ற நேரத்தில் ஏதேனும் பிரயோஜனமாக செய்து விட்டுப் போக முயலுங்கள்.

எம் எம் அப்துல்லா
உறுப்பினர் – தமிழ்நாடு அரசு வஃபு வாரியம்

error: Content is protected !!