தேர்தல் ஆணையர் நியமன விவகாரம் : சுப்ரீம் கோர்ட்டை சீண்டும் மோடி அரசு!

தேர்தல் ஆணையர் நியமன விவகாரம் : சுப்ரீம் கோர்ட்டை சீண்டும் மோடி அரசு!

ம் நாட்டின் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையக் குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் புதிய மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், ‘பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரதமரால் முன்மொழியப்படும் கேபினட் அமைச்சர் கொண்ட குழு, தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் ஆணையக் குழுவை தேர்வு செய்யும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திருத்தப்பட்ட மசோதா மூலம் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையக் குழு உறுப்பினர்களின் பணி, செயல்பாடுகள், வரைமுறை ஆகியவை வகுக்கப்பட்டுள்ளன. மேலும், கேபினட் செயலாளர் தலைமையில் தேர்தல் அனுபவம் கொண்ட ஐந்து பேரை உள்ளடக்கிய குழு பெயர்ப் பட்டியலை முதலில் தயாரிக்கும். அதன் பிறகு பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், பிரதமரால் முன்மொழியப்பட்ட கேபினட் அமைச்சர் ஆகியோர் கொண்ட குழு, கேபினட் செயலாளரால் பரிந்துரைத்த பெயரைக் கொண்டு தலைமை தேர்தல் அதிகாரியை தேர்வு செய்யும் வகையில் இந்த சட்டம் திருத்தப்பட்டுள்ளது. மேலும், தலைமைத் தேர்தல் அதிகாரியின் சம்பளம், கேபினட் செயலாளருடைய சம்பளத்துக்கு இணையாக இருக்கும் என்றும், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணைய உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் எது முதலில் வந்தடைகிறதோ அதன் அடிப்படையில் புதிய பணி நியமனம் செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய ஜனநாயகத்தின் முக்கிய அங்கமான தேர்தலை நடத்தும் பொறுப்பு இந்திய தேர்தல் ஆணையத்திடமே உள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியும் கண்காணிப்பிலும்தான் நாடாளுமன்ற, சட்டப்பேரவை, குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர் பதவிகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படுகிறது. மாநகராட்சி, பஞ்சாயத்து தேர்தலுக்கும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஏன் என்றால், உள்ளாட்சி தேர்தலை நடத்தும் பொறுப்பு தனியாக இயங்கும் மாநில தேர்தல் ஆணையத்திடம் உள்ளது.

கடந்த 1950ஆம் ஆண்டு, இந்திய தேர்தல் ஆணைம் அமைக்கப்பட்டதில் இருந்து 1989ஆம் ஆண்டு வரை, இது ஒரு உறுப்பினர் கொண்ட அமைப்பாகவே இருந்தது. ஆனால், 1989ஆம் ஆண்டுக்கு பிறகு, மேலும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்டு இந்திய தேர்தல் ஆணையம் மூன்று பேர் கொண்ட அமைப்பாக மாற்றப்பட்டது. இருப்பினும், நடுவில் மீண்டும் ஒரு உறுப்பினர் கொண்ட அமைப்பாக மாற்றப்பட்டு பின்னர் மீண்டும் மூன்று பேர் கொண்ட அமைப்பாக மாற்றி அமைக்கப்பட்டது. தலைமை தேர்தல் ஆணையர், இரண்டு தேர்தல் ஆணையர்கள் ஆகியோர் பிரதமரின் பரிந்துரையில் குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்டு வந்தனர்.

இதற்கிடையே, தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படுவதில் சீர்திருத்தம் கோரி பல்வேறு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த அரசியல் சாசன அமர்வு, “பிரதமர், மக்களவை எதிர்கட்சி தலைவர் (அல்லது தனிப்பெரும் எதிர்க்கட்சியின் தலைவர்), இந்திய தலைமை நீதிபதி ஆகிய மூன்று பேர் கொண்ட கமிட்டி வழங்கும் பரிந்துரையின் பேரில் குடியரசு தலைவர் தேர்தல் ஆணையர்களை நியமிப்பார்” என தெரிவித்தது. நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக சட்டம் இயற்றும் வரை, இந்த நடைமுறையே தொடரும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் மோடி அரசு புதிய மசோதாவை தாக்கல் செய்து ஜனநாயகத்துக்கு வேட்டு வைத்துள்ளது.

ஏற்கெனவே கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளை நியமிக்காமல் மத்திய அரசு தாமதம் செய்து வருவதாக சுப்ரீம் கோர்ட்டும், கொலீஜியம் அமைப்பு வெளிப்படை தன்மையற்று இருப்பதாக மத்திய அரசும் குற்றஞ்சாட்டி வந்தன. இதை தொடர்ந்து, டெல்லியில் அரசு அதிகாரிகளை நியமிக்கும் விவகாரத்தில் மாநில அரசுக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. அமலாக்கத்துறை இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு வழங்கிய விவகாரத்தில் மத்திய அரசிடம் கடிந்து கொண்டது. இந்த நிலையில், அதே நீதித்துறையை சீண்டும் விதமாக சீஃப் ஜட்ஜை புறக்கணித்து மத்திய அரசு மசோதா ஒன்றை கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!