மாதவிடாய் குப்பி (Menstrual Cup) குறித்த விழிப்புணர்வு – வழங்கல் துவக்க விழா!
இன்று (14.09.2023), சென்னை – நந்தனத்தில், தமிழச்சி தங்கபாண்டியன் முன்னைடுப்பில், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம், EnnVee Solutions Pvt Ltd, HLL Lifecare Ltd இணைந்து நடத்திய மாதவிடாய் குப்பி (Menstrual Cup) குறித்த விழிப்புணர்வு – வழங்கல் துவக்க விழாவில், குறைந்த வருவாய் கொண்ட பெண்களுக்கு மாதவிடாய் குப்பி வழங்கும் திட்டத்தை முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை நந்தனத்தில் மாதவிடாய் குப்பி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும், அதனை தென்சென்னைக்குட்பட்ட குறைந்த வருவாய் பெண்களுக்கு வழங்கும் திட்டத்தின் தொடக்க நிகழ்வும் நடைபெற்றது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலு, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திட்டத்தை முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் முன்னிலையில் தென் சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தொடங்கி வைத்தார். மீண்டும் பயன்படுத்தத்தக்க வகையிலான அறிவியல்ரீதியான மாதவிடாய் குப்பி புரட்சிகரமான திட்டமாக கருதப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தென்சென்னை தொகுதியில் 1,500 பேருக்கு 3 மாத காலம் படிப்படியாக மாதவிடாய் குப்பிகள் வழங்கப்படவுள்ளன. மாநகராட்சியின் பிற பகுதிகளுக்கும் இத்திட்டத்தை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய தமிழச்சி தங்கபாண்டியன் பேசியது:
குறைந்த வருவாய் கொண்ட பெண்களுக்கு நாப்கின்களுக்கு மாற்றாக மாதவிடாய் குப்பி அறிமுகப்படுத்தியுள்ளோம். நாப்கின்கள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கிறது. தமிழ்நாடு, கேரளா, வடமாநிலங்களில் திட்டத்தை ஹெச் எல் எல் நிறுவனம் கொண்டு சேர்த்திருக்கிறது. தென்சென்னை தொகுதியில் 1,500 பேருக்கு 3 மாத காலம் படிப்படியாக எம் கப்கள் வழங்கப்படும். மாநகராட்சியின் பிற பகுதிகளுக்கும் திட்டத்தை எடுத்துச்செல்ல ஆசைப்படுகிறோம்.
இவரை தொடர்ந்து பேசிய சென்னை மேயர் பிரியா பேசியது:
ஒரு காலத்தில் துணி பயன்படுத்தினார்கள். நாப்கினில் உள்ள ரசாயனத்தால் யூட்ரஸ் கேன்சர் வருவதாக சொல்கிறார்கள். அதற்கான தீர்வாக M Cup இருக்கும். நாப்கின் வேஸ்ட் என்பது சென்னை மாநகராட்சிக்கு சவாலானதாக உள்ளது. இவ்வாறு மேயர் பிரியா கூறினார்.