மாதவிடாய் வலியும், விடுமுறையும் – தொடரும் ரணச் சர்ச்சை
மாதவிடாய் நாட்களில் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை தீர்க்க அரசு தரப்பில் சில முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக, பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மாநிலங்களவையிலும் இந்த கோரிக்கை பிரதிபலித்தது.
இது குறித்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) உறுப்பினர் மனோஜ் குமார் ஜா, ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய ஒன்றிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, ‘பெண்களுக்கு பணியிடங்களில் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்குவது தேவையற்றது. குறிப்பாக மாதவிடாய் மற்றும் மாதவிடாய் சுழற்சி என்பது ஒரு குறைபாடு அல்ல. அது பெண்களின் வாழ்வில் இயல்பானது, மாதவிடாயை சந்திக்கும் ஒரு பெண்ணாகவே இதை கூறுகிறேன். குறைந்த அளவிலான பெண்களே கடுமையான மாதவிடாய் வலியால் பாதிக்கப்படுகிறார்கள். இவை பெரும்பாலும் மருந்துகள் மூலம் சரிசெய்ய கூடியவையே. பெண்களுக்கு பணியிடங்களில் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்குவது தேவையற்றது ’ என்றார்.
இதேபோல், கடந்த வாரம் மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி, “அனைத்து பணியிடங்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்குவதற்கான எந்த முன்மொழிவும் அரசாங்கத்தின் பரிசீலனையில் இல்லை” என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் மாதவிடாய் வலி என்பது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமாக இருக்கும். அந்தச் சமயத்தில் ஒரு பெண் விடுப்பு எடுக்க வேண்டும் என்பதையோ, வேண்டாம் என்பதையோ, அந்தப் பெண்தான் முடிவு செய்ய வேண்டும்.உங்களுக்கு வேண்டாம் என்பதால் அனைவருக்கும் வேண்டாம்’ என்று சொல்ல முடியாது என எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் ஐரோப்பிய நாடுகளில், மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குவது குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் இது தொடர்பான கோரிக்கைகள் பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே சீராக வந்தாலும் வராவிட்டாலும் பெண்களுக்கு அசௌகர்யத்தை கொடுக்கக்கூடியது மாதவிடாய். உலகளவில் சீரற்ற மாதவிடாயால் அவதிப்படும் பெண்களுக்கு பல்வேறு உடல்நலப்பிரச்னைகள் ஏற்படுவதாக கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ’மாதவிடாய் சுழற்சி’ என்பது மாதவிடாய் ஆரம்பித்த முதல் நாளிலிருந்து அடுத்த மாதம் மாதவிடாய் ஆரம்பிக்கும் முதல்நாள் வரை கணக்கிடப்படுகிறது. பொதுவாக இந்த சுழற்சி 28 நாட்களுக்கு ஒருமுறை என கணக்கிடப்பட்டாலும், நாட்கள் சற்று முன்னும் பின்னுமாக இருப்பதையும் சீரான மாதவிடாயாகவே மருத்துவர்கள் எடுத்துக்கொள்கின்றனர். ஆனால் பல பெண்களுக்கு மாதவிடாய் தவறுவதுடன், சில மாதங்களுக்கு வராமலே போவதால் அவர்கள் உடல் மற்றும் மனதளவில் அவதிக்குள்ளாகிறார்கள்.
மேலும் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் உபாதைகள் எப்போதும் ஒரேமாதிரி இருப்பதில்லை. நபருக்கு நபர் வேறுபடும். மாதவிடாய் சமயத்தில் பெண்களுக்கு ஏற்படும் வலிகளை மருத்துவச் சொற்களில் ‘டிஸ்மெனோரியா’ (Dysmenorrhea) என்கின்றனர். ஒற்றைத் தலைவலி, அடிவயிற்றில் வலி, முதுகு வலி, வாந்தி, கால் வலி என வெவ்வேறு பிரச்னைகள் பெண்களுக்கு ஏற்படும். மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலி, உபாதைகளில் இருந்து தப்பித்துக்கொள்ள சில பெண்கள் மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றனர். இது தவறான அணுகுமுறை. வலிக்கான மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிடுவதால் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
அத்துடன் `மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வயிற்று வலிக்கு சோடா, குளிர்பானங்கள் போன்றவற்றைக் குடிக்கும் பழக்கம் சில பெண்களுக்கு இருக்கிறது. குளிர் பானங்கள் குடிப்பதால் உடனடியாக மூளைக்குச் சற்று புத்துணர்வு கிடைக்கும். குளிர்பானத்தில் இருக்கும் சர்க்கரை உடலுக்கு உடனடி ஆற்றல் தரும். அனைத்துக் குளிர்பானங்களிலும் வாயு சேர்க்கப்படுவதால் (Carbonated drinks) தற்காலிகமாக வயிறு உப்புசத்தை நீக்கும். ஆனால், குளிர்பானங்கள் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும், அதில் சேர்க்கப்படும் வாயுவால் வயிற்றுப் புண் (Stomach Ulcer) ஏற்படும். இதைப் பெண்கள் பருகும்போது எலும்பு பாதிக்கப்பட்டு, எலும்பு தொடர்பான நோய்கள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, மாதவிடாய் நாள்களில் முடிந்தவரை ஓய்வு மற்றும் சத்தான உணவுகள் எடுத்துக்கொண்டாலே வலிகளில் இருந்து தீர்வு பெறலாம்” என்கிறார்கள் டாக்டர்கள்
இன்னும் சில மருத்துவர்கள் மாதவிடாய் வலிகளில் சில நாம் நினைப்பது போன்று சாதாரணமானது அல்ல என்று கூறுகின்றனர். இச்சூழலில் அதை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம். பெண்களின் கருப்பையின் உள் பகுதி எண்டோமெட்ரியம் என்று அழைக்கப்படுகிறது. இது மாதவிடாய் காலத்தில் பிறப்புறுப்பு வழியாக உதிரப்போக்காக வெளியேறும். மேலும் எண்டோமெட்ரியோசிஸில், கருப்பையைத் தவிர, கருப்பைகள், ஃபலோபியன் குழாய்கள், யோனி அல்லது குடல் போன்ற இடங்களில் இந்த புறணியின் துண்டுகள் உருவாக தொடங்குகின்றன. இதனால் சில பாதிப்புகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த நிலைமையை முன்கூட்டியே கண்டறிந்து கொண்டால் இதன் பாதிப்பை குறைக்க முடியும். பலர் மாதவிடாய் கால வலியை சாதாரணமான மாதவிடாய் வலி என்று நினைத்து அலட்சியம் செய்கிறார்கள். இயல்பான மாதவிடாய் வலிக்கும் வலிமிகுந்த எண்டோமெட்ரியோசிஸிற்கும் வேறுபாடுகள் உள்ளது.எண்டோமெட்ரியோசிஸ் அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கலாம். மேலும், எண்டோமெட்ரியோசிஸின் வலி அளவு எப்போதும் அசௌகரியத்தின் உச்சமாக இருக்கலாம்.
‘
அண்மையில் இவைகளை எல்லாம் சுட்டிக் காட்டி இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில் மாதவிடாய் நாட்களில் மாணவிகள் மற்றும் பணி செய்யும் பணிப் பெண்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் தானாக முன்வந்து விடுப்பு வழங்கி வருவதாகவும், இதனை அரசுகளும் பின்பற்றும் வகையில் பொதுவான ஒரு உத்தரவாக நாடு முழுவதும் பின்பற்றக்கூடிய ஒன்றாக பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய் சந்திர சூட் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரம் கொள்கை முடிவு சார்ந்தது என்பதால், நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட முடியாது எனவும், அதே நேரத்தில் மனுவின் கோரிக்கை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தை மனுதாரர் நாடலாம் என அறிவுரை கூறி வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.