மறைந்த தோழர்.சங்கரைய்யாவின் இறப்பிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய மருத்துவ பாடங்கள்!

மறைந்த தோழர்.சங்கரைய்யாவின் இறப்பிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய மருத்துவ பாடங்கள்!

மிழக பொது சுகாதாரத்துறை தற்போதைய காய்ச்சல் அதிகரித்து வரும் சூழலில்,ஆய்வு ஒன்றை செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புளூ காய்ச்சலின் தாக்கம் தாக்கம் செப்டம்பர் முதல் ஜனவரி வரை அதிகரித்து காணப்படும். இதில் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் தான் புளூ பாதிப்பு உச்சத்தை எட்டும். இவை தெளிவாக இருந்தும்,தோழர். சங்கரைய்யா விசயத்தில் உரிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதா?எனும் கேள்வி எழுகிறது. யார் மூலம் அவருக்கு புளூ தொற்று ஏற்பட்டு,சளி,காய்ச்சலுடன்,ஆக்ஸிஜன் அளவு குறைந்தது? ஒரு வேளை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் எடுத்திருந்தால் (அவரும்,அவரை பார்க்க வருபவர்களும் முகவுறை அணிந்திருந்தால்,நோய் பாதிப்பு தடுக்கப்பட்டிருக்கலாம்?!)அவருக்கு புளூ பாதிப்பு ஏற்பட்டிருப்பதை தடுத்திருக்க முடியுமா?.

பொதுசுகாதாரத்துறை இயக்குநர். .செல்வ விநாயகம் கூறுகையில், தமிழகத்தில் தற்போதைய மழைக் காலத்தில் புளூ,டெங்கு போன்ற பாதிப்புகள் அதிகம் இருப்பதை சுட்டிக்காட்டுகிறார். இதையொட்டி காய்ச்சல், உடம்பு வலி, இருமல்,சளி பிடித்த 300 பேர்களை ஆய்வு செய்ததில் (ஒரு அரசு,ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்து இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு,பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.)ஏறக்குறைய 150 பேருக்கு புளூ தொற்று A பாதிப்பு(H3N2,H1N1) இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பொதுவாக புளூA தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும்.  புளூ சிகிச்சை என வரும் போது பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப (லேசான பாதிப்பு-Category-A,நடுத்தரபாதிப்பு-Category-B,மோசமானபாதிப்பு-Category-C)சிகிச்சை மாறுபட்டாலும்,பாதிக்கப்பட்டோர் பிறருக்கு நோய் பரவாமல் இருக்க,தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது மருத்துவ விதி. (முதல்வர்.ஸ்டாலின் அவர்களுக்கும் புளூ பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.)

தற்போது 300 பேர்கள் மத்தியில் செய்த ஆய்வில்,ஏறக்குறைய 150 பேர்கள் மத்தியில் புளூ பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. பலருக்கு டெங்கு பாதிப்பும் இருந்தது. தவிர,ரைனோ வைரஸ்,ரெஸ்பிரேட்டரி சின்சைட்டியல் வைரஸ் பாதிப்பும் சிறு அளவில் இருந்தது. அரிதாக கொரோனா பாதிப்பும் இருந்தது. தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளோ, தேவையான விழிப்புணர்வுடன் இருந்து,தாமதிக்காமல் ஆரம்ப நிலையில் நோயை கண்டறிய வேண்டும் என வலியுறுத்துவது முரண்பாடுகளுடன் இருப்பதாகத் தோன்றுகிறது.  ஏனெனில் எந்த ஒரு அரசு மருத்துவமனையிலும், புளூ வைரஸ் பாதிப்பை உறுதிபடுத்தும் பரிசோதனை வசதிகள் இல்லை.!

ஆராய்ச்சி ஆய்வகங்களில்(அண்ணா சாலையில் உள்ள பொதுசுகாதாரத்துறை ஆய்வகத்தில்)மட்டுமே புளூ பரிசோதனை வசதிகள் உள்ளன. அரசு இராஜிவ்காந்தி மருத்துவமனையில் கூட புளூவை உறுதிபடுத்தும் வசதிகள் இல்லை! ஒரு வேளை,அதனால் தான் தோழர்.சங்கரைய்யா அவர்களை தனியார் மருத்துவமனையில் சேர்க்கும் சூழல் ஏற்பட்டதா?

பொதுவுடமைவாதிகள் அரசு மருத்துவமனைகளில், புளூ பரிசோதனை வசதிகள் இல்லாததற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டாமா? ஏறக்குறைய 50% காய்ச்சல் பாதித்த சென்னை மக்களுக்கு புளூ பாதிப்பு இருந்தது ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டும்,புளூ பரிசோதனை வசதிகள் அரசு மருத்துவமனையில் இல்லாதிருப்பதை பொதுவுடமைவாதிகளாவது கண்டிக்க முன் வர வேண்டாமா?

பொதுவாக, பொதுவுடமைவாதிகள் நோய்வாய்ப்படும் போது,அரசு மருத்துவமனைகளில் தான் தங்களை அனுமதித்துக் கொண்டு சிகிச்சை பெறுவர்.  தோழர். சங்கரைய்யாவை பொறுத்தமட்டில், தனியார் மருத்துவமனையில் ஏன் அவர் அனுமதிக்கப் படவேண்டும்?அரசு மருத்துவமனையில் ஏன் அவர் அனுமதிக்கப்படவில்லை? ஒருவேளை தரமான சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் கிடைக்காது என்பதாலா? புளூவை கண்டறியும் பரிசோதனை வசதிகள் அங்கு இல்லை என்பதாலா?

தரமான சிகிச்சை தனியார் மருத்துவமனையில் கிடைக்கும் எனும் எதிர்பார்ப்போடு தனியார் மருத்துவமனையில் அவர் உரிய நேரத்தில் அனுமதிக்கப்பட்டும்,சிகிச்சை பலனின்றி அவர் இறக்க காரணம் என்ன?  வயது மூப்பு, நோய் எதிர்ப்பு சக்திக் குறைவு போன்றவை இருக்கும் போது புளூ வைரஸ் உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,தேவையான, உரிய மருத்துவ சிகிச்சை கொடுத்தாலும், புளூ வைரஸ் பாதிப்பிலிருந்து மீளுவது கடினம் என்பதை நாம் மறுக்க முடியாது என்பதை உணர வேண்டியுள்ளது.

உண்மையில் அரசு தோழர்.சங்கரைய்யா அவர்களின் இறப்பிற்கு பரிகாரம் செய்ய நினைத்தால்,

1)புளூ பரிசோதனை வசதிகளை அரசு மருத்துவமனைகளில் செய்ய உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.(தமிழகத்தில் புளூ காய்ச்சல் அதிகரித்து வரும் தற்போதைய சூழலில்)

2)சாதாரண மக்கள் புளூ சிகிச்சைக்கு தனியாரிடம் செல்லாமல்,அரசு மருத்துவமனைகளை நாடிச் செல்லும் வகையில் சிகிச்சையின் தரத்தை மேம்படுத்தி மக்களின் சுகாதாரச் செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் வகையில் அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பை மேம்படுத்த விரைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.மக்களிடம் அத்தகைய நம்பிக்கையை உருவாக்க வேண்டும்.

அதுவே,”ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” எனும் பேரறிஞர்.அண்ணாவின் கூற்றை மெய்ப்படுத்தும் வகையில் அமையும்.

 சிந்தித்து செயல்பட்டு தோழர்.சங்கரைய்யா அவர்களின் நினைவைப் போற்றுவோம்.

மரு.வீ.புகழேந்தி. 

error: Content is protected !!