மனித குலத்திற்கு எதிரான பெரும் குற்றம்: எப்ஸ்டீன் விவகாரத்தில் ஐ.நா.வின் அதிரடி அறிக்கை!

மனித குலத்திற்கு எதிரான பெரும் குற்றம்: எப்ஸ்டீன் விவகாரத்தில் ஐ.நா.வின் அதிரடி அறிக்கை!

லகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ விவகாரத்தில், தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு அளித்துள்ள அறிக்கை, சர்வதேச அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதிகார மையங்களின் உச்சத்தில் இருப்பவர்கள் தங்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி எத்தகைய கொடூரங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதை இந்த அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

அமெரிக்க நிதி மேலாளர் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட ரகசிய ஆவணங்கள் (Epstein Files) அண்மையில் வெளியாகின. இது குறித்து ஆய்வு செய்த ஐ.நா.வின் மனித உரிமை நிபுணர்கள் குழு, இதில் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டுகள் வெறும் பாலியல் அத்துமீறல்கள் மட்டுமல்ல, அவை ‘மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்’ (Crimes Against Humanity) என்ற சட்ட வரம்பிற்குள் வரக்கூடியவை என்று எச்சரித்துள்ளது.

இந்த விவகாரத்தில் வெளிவந்துள்ள தகவல்கள் ஒரு மிகப்பெரிய ‘சர்வதேச குற்றக் கும்பல்’ (Global Criminal Enterprise) இயங்கியதை உறுதிப்படுத்துவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்தப்பட்டு, பாலியல் அடிமைகளாக விற்கப்பட்டதும், சித்திரவதை செய்யப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது. இது ஒரு தனிநபரின் குற்றம் அல்ல, மாறாக உலகளாவிய அளவில் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட ஒரு மாபெரும் மனித வேட்டை என்று ஐ.நா.வின் அறிக்கை சாடுகிறது.

அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

  • அதிகார துஷ்பிரயோகம்: இவ்வளவு பெரிய குற்றங்கள் பல ஆண்டுகளாகத் தடையின்றி நடந்ததற்கு, அதிகார மையங்களில் உள்ளவர்களின் ஊழல் மற்றும் ஆணாதிக்க மனநிலையே காரணம்.

  • பாரபட்சமற்ற விசாரணை: “சட்டத்திற்கு மேல் யாரும் கிடையாது; எவ்வளவு செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும், அவர்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட வேண்டும்” என நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

  • சர்வதேச விசாரணை: இது பல நாடுகளைத் தொட்டுச் செல்லும் குற்றச் சங்கிலி என்பதால், அனைத்து நாடுகளும் இணைந்து சுதந்திரமான மற்றும் நேர்மையான விசாரணையை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி: குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தருவது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான இழப்பீடு மற்றும் மறுவாழ்வு வழங்கப்பட வேண்டும் என்பதும் இந்த அறிக்கையில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

“இந்த விவகாரத்தை அப்படியே கடந்து செல்வது என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம்” என்று தெரிவித்துள்ள ஐ.நா. நிபுணர்கள், இனியும் இத்தகைய குற்றங்கள் நடக்காதவாறு சர்வதேச சட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Posts

error: Content is protected !!