இம்மானுவேல் சேகரனாருக்கு பரமக்குடியில் மணிமண்டபம்!

இம்மானுவேல் சேகரனாருக்கு பரமக்குடியில் மணிமண்டபம்!

வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் பங்கெடுத்து சிறை சென்றவரும், சமூக சேவை மேற்கொள்வதற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்காகவும் தனது இராணுவப் பணியை துறந்தவரும், பன்மொழிப் புலவருமான இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பிதோ:

‘தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில் தேவேந்திர குல வேளாளர் கல்வியாளர் குழு, தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம், இம்மானுவேல் சேகரனாரின் மகள் சூரிய சுந்தரி பிரபா ராணி மற்றும் அன்னாரது பேரன் சக்கரவர்த்தி ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து இக்கோரிக்கையினை வலியுறுத்தினர்.

தியாகி இம்மானுவேல் சேகரனார் 1924–ம் ஆண்டு அக்டோபர் 9 அன்று பிறந்தார். இவரது சொந்த ஊர் முதுகுளத்தூர் வட்டம், செல்லூர் கிராமம் ஆகும். இவர் 1942-–ல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறைவாசம் சென்றார். மேலும் ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்காகவும் போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில், தியாகி இம்மானுவேல் சேகரனாரின் சமூக பங்களிப்பினைப் போற்றும் வகையில் அவரது பிறந்தநாள் நூற்றாண்டினையொட்டி அன்னார் நல்லடக்கம் செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுமார் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் இம்மானுவேல் சேகரனாருக்கு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டப்படும்’. இவ்வாறு மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!