மாய பிம்பம் – விமர்சனம்!

மாய பிம்பம் – விமர்சனம்!

த்தமும் சதையுமான வன்முறைப் படங்கள் திரையரங்குகளை ஆக்கிரமித்தாலும், மென்மையான காதல் கதைகளுக்குத் தமிழ் சினிமாவில் எப்போதும் தனி இடமுண்டு. அந்த வகையில், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்டு, தற்போது திரைக்கு வந்துள்ள ‘மாய பிம்பம்’ ரசிகர்களைக் கவர்ந்ததா? என்பதைப் பார்ப்போம்.

கதைக்களம்

2005-06 காலகட்டத்தைப் பின்னணியாகக் கொண்ட கதை. கடலூர் மற்றும் சிதம்பரத்தைச் சுற்றியே திரைக்கதை பயணிக்கிறது. மருத்துவக் கல்லூரி மாணவனான ஜீவா (ஆகாஷ் பிரபு), ஒரு காலைப் பொழுதில் ஆட்டோவில் செல்லும்போது சுமதி (ஜானகி) என்பவரைச் சந்திக்கிறான். இருவருக்கும் இடையே காதல் அரும்புகிறது.

ஜீவாவுக்குத் துணையாக மூன்று நண்பர்கள். அவர்கள் எப்போதும் பெண்களை எப்படிக் ‘கரெக்ட்’ செய்வது என்ற ஆராய்ச்சியிலேயே பொழுதைக் கழிக்கிறார்கள். இதில் ஒரு நண்பன் காமக் கொடூரன். ஒரு சூழலில், நாயகி சுமதியின் தாய் ஒரு பாலியல் தொழிலாளி என்ற உண்மை தெரியவர, அவளது நண்பர்கள் ஜீவாவை உசுப்பேற்றுகிறார்கள். “சுமதியும் அப்படிப்பட்டவளாகத்தான் இருப்பாள், அவளைத் தனி அறைக்கு அழைத்துச் செல்” என்று அவர்கள் போடிக் கொடுத்த பிளான், ஒரு விபரீதத்தில் முடிகிறது. அதன் விளைவு என்ன? ஜீவா ஏன் சிறை சென்றான்? என்பதே மாயபிம்பம் படக் கதை.

நடிப்பு மற்றும் தொழில்நுட்பம்

  • ஜானகி (சுமதி): பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றம். அறிமுகப் படம் என்ற பதற்றமின்றி, ஏமாற்றத்தையும் காதலையும் கண்களாலேயே கடத்தி பாராட்டுப் பெறுகிறார்.

  • ஆகாஷ் பிரபு (ஜீவா): காமத்திற்கும் காதலுக்கும் இடையிலான குழப்பம், பின்னர் ஏற்படும் குற்ற உணர்ச்சி என முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

  • நண்பர்கள்: ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண்குமார் என நால்வரும் எதார்த்தமான நடிப்பைத் தந்துள்ளனர். குறிப்பாக ராஜேஷ் பாலாவின் நகைச்சுவை ரசிக்க வைக்கிறது.

  • இயக்கம்: கே.ஜே. சுரேந்தர் தனது கதையை நம்பி படத்தை இயக்கி, தயாரித்துள்ளார். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் வேகம் சேர்த்திருக்கலாம்.

  • ஒளிப்பதிவு & இசை: எட்வின் சகாயின் கேமரா கடலூர், சிதம்பரத்தின் அழகைப் பதிவாக்கியுள்ளது. நந்தாவின் இசை கதையின் உணர்வுகளுக்குப் பலம் சேர்த்துள்ளது.

நிறைகளும் குறைகளும்

நிறைகள்:

  • நாயகன் – நாயகி இடையிலான எதார்த்தமான கெமிஸ்ட்ரி.

  • 2000-களின் தொடக்க காலத்து வாழ்வியலைப் பிரதிபலிக்கும் காட்சிகள்.

  • அழுத்தமான கிளைமாக்ஸ் மற்றும் ஜானகியின் நடிப்பு.

குறைகள்:

  • 20 ஆண்டுகளுக்கு முன்பே வரவேண்டிய படம் என்பதால், மேக்கிங்கில் ஒரு தொய்வு தெரிகிறது.

  • நண்பர்களின் ‘பெண்களைப் பற்றிய’ உரையாடல்கள் ஒரு கட்டத்திற்கு மேல் அலுப்பைத் தருகின்றன.

  • ஜானகியின் தாய் ஒரு பாலியல் தொழிலாளியாக இருக்க அதைப் பற்றியோ அவளது மகளின் நிலை பற்றியோ அக்கம் பக்கத்தில் யாருமே கண்டு கொள்ளாமல் இருப்பதும் ஒட்டவில்லை.
  • நாயகி சட்டென்று முடிவை மாற்றிக்கொள்ளும் விதம் திரைக்கதைக்காகத் திணிக்கப்பட்டது போல் உள்ளது.

‘மாய பிம்பம்’ ஒரு நேர்மையான காதல் முயற்சி. படத்தில் இன்னும் கொஞ்சம் தற்காலத்திற்கு ஏற்ற மாற்றங்களைச் செய்திருந்தால், இது கொண்டாடப்பட வேண்டிய சினிமாவாக இருந்திருக்கும். இருப்பினும், பழைய காலத்து மென்மையான காதலை விரும்பும் ரசிகர்களுக்கு இது ஒரு நல்ல அனுபவம்.

மதிப்பெண்: 2.75 / 5

Related Posts