ஒரே நாளில் ஏழு வாகனங்களில் அருளும் ஏழுமலையான்: திருமலையில் ரத சப்தமி பெருவிழா!

ஒரே நாளில் ஏழு வாகனங்களில் அருளும் ஏழுமலையான்: திருமலையில் ரத சப்தமி பெருவிழா!

புண்ணிய பூமியான பாரத தேசத்தில், கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக, வேண்டுவோருக்கு வேண்டுவன அளிக்கும் வரப்பிரசாதியாகத் திருமலை திருப்பதி வேங்கடவன் எழுந்தருளியுள்ளார். “வேங்கடேசா சமோ தேவோ ந பூதோ ந பவிஷ்யதி” – அதாவது வேங்கடேசனுக்கு நிகரான ஒரு தெய்வம் கடந்த காலத்திலும் இருந்ததில்லை, எதிர்காலத்திலும் இருக்கப் போவதில்லை எனும் வாக்கிற்கேற்ப, நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வைபவம் திருமலையில் அரங்கேறுகிறது. விண்ணுலகமே மண்ணுலகிற்கு வந்துவிட்டது போன்ற பிரம்மாண்டமும், பக்தியும் நிறைந்த அந்தத் திருமலையில், சூரிய நாராயண மூர்த்தியின் அவதார தினமாகப் போற்றப்படும் ‘ரத சப்தமி’ திருநாள் மிகவும் விசேஷமானது. சூரிய ஜெயந்தி என்றும், மினி பிரம்மோற்சவம் என்றும் அழைக்கப்படும் இந்த மகத்தான நாளில், திருமலையின் மாட வீதிகளில் ஸ்ரீ மலையப்ப சுவாமி ஏழு வெவ்வேறு வாகனங்களில் பவனி வந்து பக்தர்களுக்குக் காட்சியளிப்பது, ஒரு வருடம் முழுவதும் பெருமாளைச் சேவித்த புண்ணியத்தைத் தரக்கூடியது.

ரத சப்தமி: மகத்துவமும் பின்னணியும்

புனிதமான மாக மாதத்தின் சுக்ல பக்ஷ சப்தமி திதியில் ரத சப்தமி கொண்டாடப்படுகிறது. வேதங்களின்படி, இந்த உலகிற்கு ஒளியையும் அறிவையும் வழங்கிய சூரிய பகவான் தோன்றிய தினமே ரத சப்தமி. திருமலையில் இந்த நாள் ‘மினி பிரம்மோற்சவம்’ என்றே அழைக்கப்படுகிறது. பொதுவாகப் பத்து நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் சாரத்தை, ஒரே நாளில் ஏழு வாகனச் சேவைகள் மூலம் பக்தர்கள் தரிசிக்கும் வகையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இதனைச் சிறப்புடன் நடத்துகிறது.

மலையப்ப சுவாமியின் வாகனச் சேவைகள் – கால அட்டவணை:

ஜனவரி 25-ஆம் தேதி அதிகாலை தொடங்கி இரவு வரை மாட வீதிகளில் நடைபெறும் வாகனச் சேவைகளின் விபரங்கள் இதோ:

  • அதிகாலை 5.30 – 8.00: சூர்ய பிரபா வாகனம் (காலை 6.45 மணிக்குச் சூரிய உதயத்தின் போது சுவாமிக்குச் சூர்ய கிரணங்கள் அபிஷேகம் செய்யும் அற்புதக் காட்சி).

  • காலை 9.00 – 10.00: சின்ன சேஷ வாகனம்.

  • காலை 11.00 – மதியம் 12.00: கருட வாகனம் (மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வாகனச் சேவை).

  • பிற்பகல் 1.00 – 2.00: ஹனுமந்த வாகனம்.

  • பிற்பகல் 2.00 – 3.00: சக்ர ஸ்நானம் (புனிதமான புஷ்கரணியில் நடைபெறும் தீர்த்தவாரி).

  • மாலை 4.00 – 5.00: கல்பவ்ரிக்ஷ வாகனம்.

  • மாலை 6.00 – இரவு 7.00: சர்வபூபால வாகனம்.

  • இரவு 8.00 – 9.00: சந்திர பிரபா வாகனம்.

பக்தர்களுக்கான ஏற்பாடுகள் மற்றும் சேவை மாற்றங்கள்

இந்த விழாவைக் காண நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. மாட வீதிகளில் காத்திருக்கும் பக்தர்களுக்குத் தொடர்ச்சியாக உணவு, பால் மற்றும் குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சேவை ரத்து விபரம்: பக்தர்களின் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், அனைவரும் தரிசனம் பெறவும் ஏதுவாக, அன்றைய தினம் நடைபெறும் கல்யாணோத்ஸவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோத்ஸவம் மற்றும் சஹஸ்ர தீபாலங்கார சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், சுப்ரபாதம், தோமல சேவை மற்றும் அர்ச்சனை ஆகியவை வழக்கம்போலக் கோயிலின் உள்ளே ஏகாந்தமாக நடைபெறும்.

கலியுக தெய்வத்தின் இந்த ஏழு வாகனக் கோலங்களை ஒரே நாளில் தரிசிப்பது ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் ஒரு தெய்வீக அனுபவமாகும்.

நிலவளம் ரெங்கராஜன்

Related Posts