பெண்களே..- வீட்டு வேலைகளுக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் முற்றுப்புள்ளி வையுங்கள்!
ஆண்களை விட அதிகமாக, பெண்கள் `பெர்ஃபெக்ஷனிஸ்ட் (perfectionist)’ ஆக இருக்க வேண்டும் என்று கடுமையாக முயலுகிறார்கள். எந்தப் பணியைச் செய்தாலும் திருத்தமாகச் செய்ய வேண்டும் என்று தீவிரமாக இருப்பார்கள். சின்னக் குறைபாடு கூட வந்து விடக் கூடாது என்று அளவுக்கு அதிகமாக மெனக் கெடுவார்கள். செய்து முடித்த பின்பும் அதில் முழு திருப்தி இருக்காது. இன்னும் கொஞ்சம் சரியாகச் செய்திருக்கலாம் என்ற ஆதங்கம் மனதில் இருக்கும். குறிப்பாக வீட்டு வேலைகளில் இந்த மனநிலை அதிகமாக இருக்கும். `அன்னைக்கு சொந்தக்காரங்க வந்திருந்தப்ப வச்ச பாயாசத்தில இனிப்பு குறைச்சலாப் போச்சு, இன்னும் கொஞ்சம் சர்க்கரை போட்டிருந்தா சூப்பரா இருந்திருக்கும்’ , `வாஷிங் மெஷின்ல போட்டதால, வெள்ளைச் சட்டை காலர்ல அழுக்கே போகல, அதை மட்டும் கையால துவைச்சிருக்கலாம்’ `பொண்ணுக்கு இன்னும் நல்லா சொல்லிக் குடுத்திருந்தா, கணக்குல சென்ட்டம் எடுத்திருப்பா, இப்ப 97 தான் எடுத்திருக்கா’ , `பாத்திரத்தை ஒழுங்கா வெளக்கியிருந்தா, பால் திரிஞ்சு போயிருக்காது, அரை லிட்டர் பால் வேஸ்ட்’ இத்யாதிகள்…!
இணையருடன் வாழும் பெண்கள், ஒற்றைப் பெற்றோராக இருக்கும் பெண்கள், தனித்து வாழ்வோர் என்று பெரும்பாலும் அனைத்துத் தரப்புப் பெண்களும் ஏதோ ஒருவகையில் இந்த நிறைவற்ற தன்மையுடன் வாழ்கிறார்கள். அதைச் சரிப்படுத்தி `பெர்ஃபெக்ஷனிஸ்ட்’ ஆக எத்தனிக்கும் போராட்டம் தினமும் நடக்கிறது… ஏன் இப்படி?காலங்காலமாக ஆணாதிக்கச் சமுதாயமும், எல்லா மதங்களும் பெண்களை இரண்டாம் தரக் குடிமகன் என்ற நிலையிலேயே வைத்திருக்கின்றன. ஆணுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க உழைப்பதும், அவன் சொத்தைப் பாதுகாப்பதற்காக அவனுக்கு வாரிசுகளைப் பெற்றுத் தருவதும், வளர்ப்பதும், குடும்பத்தைப் பேணுவதும்தான் பெண்ணின் தலையாய கடமைகளாக வரையறுத்து வைத்திருக்கின்றன. பெண்ணுக்கும் இதனை மூளைச்சலவை செய்து வைத்திருக்கின்றன.
தன் வாழ்க்கை பற்றி அவளைச் சிந்திக்க விடாமல், வீட்டு வேலையை இப்படி செய்தால்தான் நீ நல்ல பெண், குழந்தைகளை இப்படி கவனித்துக் கொண்டால்தான் நீ சிறந்த தாய், கணவனை இப்படி கவனித்துக் கொண்டால்தான் நீ நல்ல மனைவி, இப்படி இப்படியெல்லாம் நடந்து கொண்டால் தான் சரியான குடும்பப் பெண் என்று `வேப்பிலை அடித்து’ அவளை உருவேற்றி வைத்திருக்கின்றன. அதிலிருந்து அவள் கொஞ்சங்கூட விலகி விடக்கூடாது என்று ஒட்டுமொத்தச் சமுதாயமும் கண்காணித்துக் கொண்டே இருக்கிறது. சிறுமியாக இருக்கும் போதே பெண்ணை `டிசைன்’ செய்யும் பணியைக் குடும்பமும், சமுதாயமும் துவக்கி விடுகின்றன. இதில் பெரிய பங்கு அம்மாவுக்கும், சுற்றியிருக்கும் மற்ற பெண்களுக்கும் இருக்கிறது. அவர்களை மட்டும் குற்றம் சொல்லிப் பயனில்லை, அவர்களும் இந்த ஆணாதிக்கச் சமுதாயத்தின் வார்ப்புதானே ! சிறுமி, வளரிளம் பெண், வளர்ந்த பெண் என்று எல்லாப் பருவங்களிலும் பெண் திருத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறாள். `போதாது, போதாது’ என்ற குரல் அவள் செவிகளில் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.
கல்யாணமாகி, ஹோம் மேக்கராக இருக்கும் பெண் வீட்டில் நாளெல்லாம் உழைத்தாலும், `அப்படியென்ன பெரிசா செஞ்சிட்டே, எல்லாப் பெண்களும் செய்யறதுதானே..’ என்று சொல்லி அவள் உழைப்பு அங்கீகரிக்கப் படுவதில்லை. வேலைக்குப் போகும் பெண்ணின் பாடு இன்னும் மோசம். வேலைக்குப் போவதால், வீட்டு வேலைகளைச் சரி வரச் செய்வதில்லை, பிள்ளைகளை, குடும்பத்தைச் சரியாகக் கவனிப்பதில்லை என்று அவள் செய்யும் எல்லாவற்றிலும் குறை கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறது இந்தச் சமூகம். `நாம் போதுமான அளவு உழைக்கவில்லையோ…’ என்ற சஞ்சலத்திலேயே உழல்கிறார்கள் பெண்கள். அவர்களுக்கு நிறைவானதொரு மனநிலை வாய்ப்பதில்லை… !(போதாக்குறைக்கு, வீட்டில் தன் உழைப்புக்கு அங்கீகாரம் மறுக்கப்படுவதால் அதைப் பெறுவதிலேயே பெண்ணின் கவனம் முழுக்கப் போய்விடுகிறது. தன்னுடைய விருப்பங்கள், தனக்கான `ஸ்பேஸ்’ தன்னுடைய இலக்கு என்று தனக்கான வாழ்க்கை என்று ஒன்று இருப்பதையே மறந்து விடுகிறார்கள்.)
அன்புத் தோழியரே, எவ்வளவு உழைத்தாலும் காலமெல்லாம் நீங்கள் சமுதாயத்தால் திருத்தப்பட்டுக் கொண்டுதான் இருப்பீர்கள். அதை விட்டுத் தள்ளுங்கள். கொஞ்சம் சுய பரிசோதனை செய்து கொள்வோம்? `100 சதவீத பர்ஃபெக்ஷன்’ என்று இந்த உலகத்தில் ஒன்று கிடையாது. உங்கள் உழைப்பு அபரிமிதமானது என்று உணருங்கள். நீங்கள் செய்யும் பணி மகத்தானது என்று அறிந்து கொள்ளுங்கள். போதும் ! வீட்டு வேலைகளுக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் முற்றுப்புள்ளி வையுங்கள். என்னால் இவ்வளவு தான் முடியும் என்று சொல்லி, அந்த அளவிற்கு மட்டுமே செய்யப் பழகுங்கள். ஆசுவாசமாக அமர்ந்து, உங்கள் விருப்பங்களை நினைவு கூர்ந்து, உங்களுக்கான `ஸ்பேஸை’ எடுத்துக் கொள்ளுங்கள். குற்ற உணர்வில்லாமல் உங்களை நேசிக்க ஆரம்பியுங்கள். உங்கள் வாழ்க்கையை வாழுங்கள். நிறைய அன்பு !