32°C

“கான் சிட்டி” டிரெய்லர் வெளியீடு & பத்திரிகையாளர் சந்திப்பு விபரம்!

admin Published: June 21, 2026 12 நிமிட வாசிப்பு Running News
எழுத்து:

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “கான் சிட்டி” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தின் டிரெய்லர் பத்திரிகை ஊடக நண்பர்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து படக்குழுவினர் திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

1. நடிகர்கள் மற்றும் கலைஞர்களின் உரைகள்

நடிகர் மதன்

“மேடைக்கு வருவதற்கு முன்பே எனக்கு நிறைய பில்ட்அப் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த பில்ட்அப் எல்லாமே இந்தப் படத்திற்குத் தகுதியானதுதான். ஏனென்றால் இது அப்படியொரு நல்ல திரைப்படம்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்தப் படத்தின் கதையிலும், அதில் சொல்லப்படும் கருத்துகளிலும் நிறைய புத்திசாலித்தனமான விஷயங்கள் இருக்கின்றன. டிரைலரே எவ்வளவு நகைச்சுவையாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கிறது என்பதை அனைவரும் அறிவீர்கள். ஆனால் படம் அதைவிட இன்னும் சிறப்பாகவும், ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானதாகவும் இருக்கும். சுமாரான படங்களுக்குக் கூட பத்திரிகையாளர்கள் நல்ல ஆதரவு கொடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்கிறீர்கள். இது மிகவும் சிறப்பான திரைப்படம். இந்தப் படத்தையும் மக்களிடம் இன்னும் பிரமாண்டமாக கொண்டு சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.”

நடிகர் லல்லு

“இயக்குநர் ஹரிஷை இன்று இந்த மேடையில் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு புதிய இயக்குநராக சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் பயணத்தைத் தொடங்கியவர். அந்தக் கனவை நனவாக்குவதற்காக அவர் பல ஆண்டுகள் கடினமாக உழைத்துள்ளார். இன்று அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கான் சிட்டி’ திரைப்படம் வெளியாகவிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

அர்ஜூன் தாஸ் ஏற்கனவே ‘கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற முக்கியமான படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அவருடன் இணைந்து பயணித்த அனுபவமும் சிறப்பானது. இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய திரையரங்கு வெற்றியாக அமையும் என்று நம்புகிறேன். இது ஒரு சிறந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. குடும்பத்துடன் திரையரங்கிற்கு வந்து ரசித்து பார்க்கக்கூடிய திரைப்படமாக இது இருக்கும்.”

நடிகர் VTV கணேஷ்

“’கான் சிட்டி’ எனக்கு மிகவும் வித்தியாசமான அனுபவமாக அமைந்த படம். இதற்கு முன்பு இதுபோன்ற கதைக்களத்தில் நான் நடித்ததில்லை. பொதுவாக புதிய இயக்குநர்களுக்கு நான் எப்போதும் முன்னுரிமை கொடுப்பேன். ஏனெனில் அவர்களிடம் புதிய சிந்தனைகள் இருக்கும். ஹரிஷ் கதையை சொல்ல வந்தபோது, முதலில் நான் கேட்டது ‘தயாரிப்பாளர் யார்?’ என்பதுதான். இன்று ஒரு படத்தை ஆரம்பிப்பது எளிது, ஆனால் அதை முடித்து திரையரங்குகளுக்கு கொண்டு வந்து சேர்ப்பது மிகப் பெரிய சவாலான விஷயம். ஹரிஷ் அந்த நம்பிக்கையையும் தைரியத்தையும் எனக்கு கொடுத்தார்.

படத்தில் உருவாக்கப்பட்டுள்ள ‘கான் சிட்டி’ உலகம் மிகவும் சுவாரஸ்யமானது. அது சாதாரண நகரம் அல்ல. அதன் உள்ளே என்ன நடக்கிறது, அங்கே இருக்கும் மனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதைக் கற்பனை மற்றும் நகைச்சுவுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர். சில உண்மை சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டு அந்த உலகத்தை உருவாக்கியிருக்கிறார். ஒரு நாள் முன்னதாகவே என் பணிகளை முடித்து அனுப்பிய அளவுக்கு இயக்குநரின் திட்டமிடல் இருந்தது.”

நடிகர் அருள்தாஸ்

“இக் குழுவில் பெரும்பாலானோர் இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். வெளியிலிருந்து பார்க்கும்போது ஒரு கல்லூரி ஆண்டு விழா குழுவைப் போல தோன்றலாம். ஆனால் அவர்கள் அனைவரும் அனுபவம் மிக்க, திறமையான தொழில்முறை கலைஞர்கள். இயக்குநர் ஹரிஷைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், கதைக்குத் தேவையானதை மட்டும் எடுத்து, நேரத்தை வீணாக்காமல் பணியாற்றினார். இன்றைய டிஜிட்டல் காலத்தில் ஒரே காட்சியை பல கோணங்களில் படமாக்குவது வழக்கமாகிவிட்டது, ஆனால் ஹரிஷ் தேவையில்லாத காட்சிகளை எடுக்காமல் துல்லியமாக வேலை செய்தார்.

நான் எந்தப் படத்தில் நடித்தாலும் கதாபாத்திரம் பெரியதா, சிறியதா என்பதைப் பார்ப்பதில்லை; முக்கியத்துவம் இருக்கிறதா என்றுதான் பார்ப்பேன். இந்தப் படத்தில் நான் ஒரு மின்வாரிய அதிகாரி (EB Officer) கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அது மிகவும் சுவாரஸ்யமான பாத்திரமாக அமைந்துள்ளது. இந்தக் குழு தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தை பிடிக்கும்.”

இமான் அண்ணாச்சி

“படப்பிடிப்பு தளத்திற்கு முதன்முதலில் வந்தபோது கேமராமேன் முதல் உதவி இயக்குநர்கள் வரை அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். அந்த சூழலைப் பார்த்தபோது ஒரு கல்லூரி வளாகத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இயக்குநரிடமே நான் கேட்டேன், ‘இந்தக் கதாபாத்திரத்திற்கு என்னைத் தேர்வு செய்தது சரியான முடிவா?’ என்று. அதற்கு அவர், ‘இந்தக் கதாபாத்திரத்தை எழுதும்போதே உங்களை மனதில் வைத்துத்தான் எழுதியிருக்கிறேன்’ என்று சொன்னார். அந்த வார்த்தை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளித்தது.

அர்ஜூன் தாஸ் குறிப்பிட்ட சில காட்சிகளுக்காக எடுத்துக்கொண்ட முயற்சியும் பொறுமையும் பாராட்டத்தக்கது. எந்தவொரு தோற்றத்தையும் முழுமையாக ஏற்று நடிப்பவர். ‘கான் சிட்டி’ திரைப்படம் ஒரு பவர்ஃபுல் எண்டர்டெயினராக ரசிகர்களை கவரும்.”

நடிகர் சதானந்த் (அறிமுக நடிகர்)

“இது எனது முதல் திரைப்படம், முதல் மேடை அனுபவம். கடந்த மூன்றரை ஆண்டுகளாக இயக்குநர் ஹரிஷை எனக்குத் தெரியும். ஒரு நாள் திடீரென்று என்னை அழைத்து, ‘இந்த ஸ்கிரிப்ட்டில் ஒரு கதாபாத்திரம் இருக்கிறது, நீ நடிக்கிறாயா?’ என்று கேட்டார். அப்படித்தான் என் பயணம் தொடங்கியது.

நடிப்பில் எனக்கு உதவியாக ஒரு தனிப்பட்ட பயிற்சியாளர் இருந்தார். படப்பிடிப்புக்கு முன்பு ஒரு வார காலம் வசனங்களைப் பயிற்சி செய்து தயாரானேன். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் சில நேரங்களில் புதிதாக வசனங்கள் கொடுக்கப்பட்டு, சில நிமிடங்களிலேயே நடிக்க வேண்டிய சூழல் இருந்தது. அது சவாலாக இருந்தாலும் சிறந்த அனுபவம். அர்ஜூன் தாஸ் சார், இமான் அண்ணாச்சி சார், யோகி பாபு அண்ணா உள்ளிட்ட மூத்த கலைஞர்கள் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தனர். யோகி பாபு அண்ணா அன்பாகப் பழகி என் தன்னம்பிக்கையை அதிகரித்தார்.”

குழந்தை நட்சத்திரம் அகிலன்

“என் பெயர் அகிலன். ‘கான் சிட்டி’ திரைப்படத்தில் நான் ஒரு மிகவும் சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அந்தக் கதாபாத்திரம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இயக்குநர் ஹரிஷ் அங்கிளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.”

நடிகை வடிவுக்கரசி

“பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள். நீங்கள் அனைவரும் இந்தப் படத்திற்காக இங்கே வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘கான் சிட்டி’ என்ற விளக்கை ஏற்றி வைத்திருப்பது படக்குழு என்றால், அதை மக்களிடம் பிரகாசமாக கொண்டு சேர்க்கும் பொறுப்பு ஊடகங்களுக்கே சொந்தமானது.

இந்தப் படத்தில் நடிக்க என்னை அணுகியபோது இயக்குநர் ஹரிஷ் மிகவும் நேர்மையாகப் பேசினார். ‘இந்தக் கதாபாத்திரத்தை உங்களை மனதில் வைத்து எழுதவில்லை, ஆனால் இப்போது நீங்கள் இதைச் செய்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்’ என்று வெளிப்படையாகச் சொன்னார். அந்த நேர்மை எனக்கு மிகவும் பிடித்தது. கதையை கேட்டவுடன் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவரும் இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். எனக்கு உடல்நலப் பிரச்சினைகள் இருந்தபோதும் இந்தப் படத்தில் நடித்தேன். படப்பிடிப்பு முடிந்த மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் அந்தக் காலகட்டத்திலும் படக்குழுவினர் என்மீது காட்டிய அக்கறையை நான் மறக்க முடியாது. அர்ஜூன் தாஸ் எப்போதும் எனக்கு தேவையான உதவிகளை செய்து, மிகவும் அக்கறையுடன் பார்த்துக் கொண்டார். ‘கான் சிட்டி’ வெறும் பொழுதுபோக்கு திரைப்படம் மட்டுமல்ல; வாழ்க்கையில் பணம், ஆசை, முடிவுகள் ஆகியவற்றைப் பற்றி சிந்திக்க வைக்கும் அம்சங்களும் இதில் உள்ளன.”

நடிகர் யோகி பாபு

“அர்ஜூன் தாஸுடன் எனக்கு நல்ல நட்பு இருக்கிறது. தொடர்ந்து அவருடன் படங்களில் பணியாற்றி வருகிறேன். ஒரு ஹீரோவுக்கு நல்ல நண்பன் இருந்தாலே போதும், ஹீரோயின் கூட தேவையில்லை என்று நான் அடிக்கடி நகைச்சுவையாக சொல்வேன். அந்த அளவுக்கு எங்களுடைய நட்பு நெருக்கமானது.

ஹரிஷை நான் இன்றல்ல, பல வருடங்களாக அறிவேன். பல படங்களில் பணியாற்றிய காலத்திலிருந்தே அவருடைய உழைப்பையும், சினிமா மீதான அர்ப்பணிப்பையும் பார்த்திருக்கிறேன். இன்று அவர் இயக்குநராக உருவாகி, அவரைப் பற்றி அனைவரும் இவ்வளவு பாராட்டிப் பேசுவதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது ஆரம்பம் மட்டுமே. இதைத் தொடர்ந்து பெரிய நடிகர்களுடன், பெரிய படங்களை இயக்கி இன்னும் உயரங்களுக்கு செல்ல வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். ‘கான் சிட்டி’ திரைப்படம் ரசிகர்களை மகிழ்விக்கும், குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய ஒரு சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும்.”

நடிகை அன்னா பென்

“நான் தமிழ் பேச முயற்சி செய்கிறேன். ஏதேனும் தவறு இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். இது எனது இரண்டாவது தமிழ் திரைப்படம். ‘கொட்டுக்காளி’ படத்தில் மீனா என்ற கதாபாத்திரத்திற்கு முற்றிலும் எதிர்மாறான ஒரு வேடத்தில் தான் ‘கான் சிட்டி’ படத்தில் நடித்திருக்கிறேன். இதுவரை நான் நடித்திராத ஒரு புதிய பரிமாணத்தில் இருக்கும் கதாபாத்திரம் என்பதால் அது எனக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது.

அர்ஜூன் தாஸுடன் பலமுறை இணைந்து பணியாற்ற முயற்சி செய்திருந்தேன், இந்தப் படத்தின் மூலம் அது நிறைவேறியுள்ளது. வடிவுக்கரசி மேம் ஒரு லெஜெண்ட். தமிழ் வசனங்களைப் பேசுவதில் எனக்கு ஆரம்பத்தில் இருந்த பயத்தை போக்கவும் உதவினார். யோகி பாபு சார் பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவர் என்னுடைய ஆயுளை பத்து வருடம் அதிகரித்திருப்பார் என்று நினைக்கிறேன்; ஏனெனில் அவர் எப்போதும் அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார். இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசை மிகப்பெரிய பலம். மேலும், இந்தப் படத்தில்தான் நான் முதன்முறையாக நடனமாடியிருக்கிறேன்.”

நடிகர் அர்ஜூன் தாஸ்

“முதலில் இயக்குநர் ஹரிஷுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆரம்பத்திலிருந்தே மிகத் தெளிவான திட்டமிடலுடன், முழு நம்பிக்கையுடனும், உறுதியுடனும் இந்தப் படத்தை முன்னெடுத்து வந்திருக்கிறார். இந்தப் படத்தை இவ்வளவு பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சேர்க்க தயாரிப்பாளர்கள் எடுத்த முயற்சி மிகப் பெரியது. நகரம் முழுவதும் போஸ்டர்கள், பேனர்கள் என இப்படத்திற்காக அவர்கள் செய்துள்ள புரமோஷன் என்னை மிகவும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

‘கான் சிட்டி’ ஒரு குடும்பத்துடன், நண்பர்களுடன், உறவினர்களுடன் சேர்ந்து ரசிக்கக்கூடிய திரைப்படம். இதில் உணர்ச்சிகளும் இருக்கின்றன, நகைச்சுவையும் இருக்கிறது, அதே நேரத்தில் மனதைத் தொடும் ஒரு அழகான கதையும் இருக்கிறது. நம்பிக்கையுடன் திரையரங்குகளுக்கு வாருங்கள். படம் பார்த்துவிட்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.”

2. தொழில்நுட்பக் கலைஞர்களின் உரைகள்

கலை இயக்குநர் ராஜ்கமல்

“’கான் சிட்டி’ திரைப்படத்தின் உலகத்தை உருவாக்குவதற்காக நாங்களும் எங்கள் குழுவினரும் மிகுந்த உழைப்பை செலுத்தியுள்ளோம். குறிப்பாக இந்தப் படத்தில் செட் அமைப்புகள் அதிகமாக இருந்ததால், அதற்காக பெரிய அளவில் திட்டமிட்டு வேலை செய்ய வேண்டியிருந்தது. என்னுடைய குழுவினர் அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினர்.”

உடை வடிவமைப்பாளர் நவா

“பல்வேறு கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு நிறைய உடை வடிவமைப்புகள் மற்றும் பல்வேறு தோற்றங்களை உருவாக்கியுள்ளோம். அர்ஜூன் தாஸ் அண்ணாவுடன் மீண்டும் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, அவர் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். அதேபோல் வடிவுக்கரசி அம்மாவுடன் பணியாற்றிய தருணங்கள் மறக்க முடியாதவை. இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், கலை இயக்குநர் ராஜ்கமல், ஒளிப்பதிவாளர் அரவிந்த், ஸ்டண்ட் மாஸ்டர் சந்தோஷ் உள்ளிட்ட ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரும் தங்களது சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர்.”

நடன இயக்குநர் சந்தோஷ்

“சமீபத்தில் வெளியான பாடல்களின் காட்சியமைப்புகள் மற்றும் நடன வடிவமைப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இயக்குநர் ஹரிஷ் ஒவ்வொரு பாடலுக்கும் தனித்துவமான மற்றும் சுவாரஸ்யமான ஐடியாக்களை பகிர்ந்து கொண்டு வழிநடத்தினார். வடிவுக்கரசி அம்மாவுடன் பணியாற்றிய அனுபவமும் மிகவும் இனிமையானது. பாடல்களில் வரும் சிறிய அசைவுகள் மற்றும் லிப்-சிங்க் காட்சிகளைக் கூட மிகவும் துல்லியமாகச் செய்தது அவரது அனுபவத்தை வெளிப்படுத்தியது.”

எடிட்டர் அருள் மோசஸ்

“’கான் சிட்டி’ திரைப்படம் அனைவரின் வாழ்க்கையுடனும் எளிதாக தொடர்புபடுத்திக்கக்கொள்ளக்கூடிய ஒரு கதையை பேசுகிறது. இந்தப் படம் திரையரங்கில் வெளியாகும் என்னுடைய முதல் படைப்பாக இருப்பதால், இது எனக்கு மிகவும் சிறப்பானதாகும். இந்தப் படத்தில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்கு முக்கிய காரணமாக இருந்த விஜய் அண்ணாவுக்கும், என்னுடைய மென்டர் செல்வா அண்ணாவுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதன் (ஃபாக்ஸி)

“நம்மைப் போன்ற மிடில் கிளாஸ் பின்னணியில் இருந்து வந்து, இன்று ஒரு இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் ஹரிஷ் அண்ணா இந்த நிலையை அடைந்திருப்பதை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. அர்ஜூன் தாஸ், யோகி பாபு, அன்னா பென் உள்ளிட்ட திறமையான கலைஞர்களுடன் பணியாற்றியது சிறந்த அனுபவம். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் சார் படத்திற்கு அற்புதமான இசையை வழங்கியுள்ளார்.”

பாடலாசிரியர் மோகன் ராஜன்

“இயக்குநர் ஹரிஷ் முதன்முதலில் இந்தக் கதையை என்னிடம் ஒரு தேநீர் கடை பெஞ்சில் அமர்ந்து கனவுகளோடு பேசிய நாட்கள் நினைவுக்கு வருகின்றன. அர்ஜூன் தாஸ் சார், இந்தக் கதையைக் கேட்டவுடன் சொன்ன முதல் ‘ஓகே’தான் இன்று இந்தப் படம் இந்த மேடையில் நிற்பதற்குக் காரணம்.

இப்படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் உள்ளன. அவை கதையோடு இயல்பாக இணைந்து பயணிக்கும். குறிப்பாக சில பாடல்களை பழைய தமிழ் தத்துவப் பாடல்களின் உணர்வில் உருவாக்கியுள்ளோம். அதற்கான ஐடியாவை வழங்கிய ஹரிஷுக்கு நன்றி.”

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்

“பொதுவாக நான் மிகவும் டென்ஷன் ஆகும் மனிதன். ‘கான் சிட்டி’ குறித்து ஹரிஷ் முதலில் என்னிடம் பேசியபோது, ‘இதை உண்மையில் செய்ய முடியுமா?’ என்ற கேள்விகள் எனக்குள் இருந்தன. ஆனால், அவர் கதை சொன்னபோது எந்த அளவுக்கு நம்பிக்கையுடன் பேசினாரோ, இறுதியில் படத்தைப் பார்த்தபோது அதே விஷயம் ஒரு அங்குலம் கூட மாறாமல் திரையில் இருந்தது. தனது சொந்த முதலீட்டுடன் களம் இறங்கியவர் ஹரிஷ்; அவர் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன்.

அர்ஜூன் தாஸிடம் ஒரு தனித்துவமான மனசாட்சியும் நேர்மையும் இருக்கிறது. படத்தில் இன்னும் வெளியாகாத இரண்டு பாடல்கள் இருக்கின்றன. பழைய தமிழ்மாவின் தத்துவப் பாடல்களின் ஆன்மாவை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற ஹரிஷின் எண்ணத்தின் அடிப்படையில் உருவான அந்த இரண்டு பாடல்கள் எனது 13 ஆண்டுகால இசைப்பயணத்தில் மிகவும் முக்கியமானவை, எனக்கு ஒரு தனிப்பட்ட பெருமை.”

3. தயாரிப்பாளர்களின் உரைகள்

தயாரிப்பாளர் சித்து நாயர் (Maali & Manvi Movie Makers)

“ஒரு இணைத் தயாரிப்பாளராக இது எனக்கும் முதல் திரைப்பட அனுபவம். ஹரிஷ் கதையை விவரிக்கத் தொடங்கினார். முதல் பாதி கதையைச் சொல்லவே சுமார் 45 நிமிடங்கள் எடுத்துக்கொண்டார். நான் பட்ஜெட் பற்றி பேச முயன்றபோது, ‘இன்னும் இரண்டாம் பாதி இருக்கிறது, அதையும் கேட்ட பிறகு பேசலாம்’ என்றார். கதையைக் கேட்டபோது நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். படம் என்னுடைய எதிர்பார்ப்புகளைத் தாண்டி வந்துள்ளது.”

தயாரிப்பாளர் அருண் பிரजीत மனோகரன் (Klout Studios)

“கடந்த பல ஆண்டுகளாக திரைப்படங்களில் Executive Producer ஆக பணியாற்றி வருகிறேன். ஹரிஷ் கதையை முழுமையாகச் சொன்ன பிறகு, நான் திட்டமிட்டு வைத்திருந்த பல விஷயங்களை மறந்துவிட்டு உடனடியாக ‘நான் இந்தப் படத்தில் இருக்கிறேன்’ என்று கூறிவிட்டேன். பணம் என்ற விஷயம் மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்று. அதைப் பற்றியே படம் மிகவும் சுவாரஸ்யமாக பேசுகிறது. அர்ஜூன் தாஸும் நானும் சுமார் பன்னிரண்டு ஆண்டுகளாக நண்பர்கள். இந்தப் படம் அர்ஜூன் தாஸின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாக இருக்கும்.”

டெல்டா ஸ்டுジオஸ் முத்துக்குமார் ஐயப்பன்

“படத்தைப் பார்த்த பிறகு எங்களுக்கு மிகவும் நம்பிக்கை ஏற்பட்டது. குறிப்பாக பிரிவியூ காட்சி பார்த்த மறுநாள் காலையிலேயே இந்தப் படத்தின் மீது முழு நம்பிக்கை உறுதியானது. ஹரிஷின் உழைப்பும், படத்தின் தரமும் எங்களை மிகவும் கவர்ந்தது. இந்தப் படத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்.”

4. இயக்குநர் உரை

இயக்குநர் ஹரிஷ் துரைராஜ்

“முதலில் இந்த மேடையில் நான் நன்றி சொல்ல வேண்டிய மிக முக்கியமான இரண்டு பேர் குனா ப்ரோ போஸ்ட் ஆபீஸ் மற்றும் விஜய் ப்ரோ (சில்வர் ட்ரீ ஸ்டுடியோஸ்). இவர்கள் இருவரும் இல்லையென்றால் ‘பவர்ஹவுஸ் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனமும், ‘கான் சிட்டி’ திரைப்படமும் உருவாகியிருக்காது. ஒளிப்பதிவாளர் ஃபாக்ஸி, எடிட்டர் அருள் மோசஸ், கலை இயக்குநர் ராஜ், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், நடன இயக்குநர் சந்தோஷ் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவின் அர்ப்பணிப்பால் வெறும் 55 நாட்களில் இந்தப் படத்தை முடிக்க முடிந்தது.

வடிவுக்கரசி அம்மாவின் நடிப்பு படம் பார்த்த அனைவராலும் பாராட்டப்படுகிறது. இந்தக் கதாபாத்திரத்தில் அவரை தேர்வு செய்தது எனது வாழ்க்கையின் மிகச் சரியான முடிவுகளில் ஒன்று. அன்னா பென் கதாபாத்திரம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும். யோகி பாபு அண்ணா கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் படம் இயக்க வேண்டும் என்று தொடர்ந்து ஊக்கப்படுத்தியவர். அர்ஜுன் தாஸ் சார் இந்தப் படத்திற்கு சம்மதம் சொல்லவில்லை என்றால் ‘கான் சிட்டி’ உருவாகியிருக்காது.

இறுதியாக என் மனைவிக்கு நான் சிறப்பு நன்றி சொல்ல வேண்டும். நான் மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிய காலத்திலேயே என்னை நம்பி திருமணம் செய்து கொண்டார். கடந்த ஐந்து ஆண்டுகளாக என்னுடைய கனவுக்காக என்னுடன் இருந்து அனைத்து கஷ்டங்களையும் தாங்கி வந்திருக்கிறார். ஜூன் 26ஆம் தேதி ‘கான் சிட்டி’ திரைப்படம் வெளியாகிறது. குடும்பத்துடன் திரையரங்குகளில் பார்த்து ஆதரிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.”

5. திரைப்படம் குறித்த சுருக்கமான விபரங்கள்

  • தயாரிப்பு: பவர் ஹவுஸ் பிக்சர்ஸ்

  • இயக்கம்: அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ்

  • நடிகர்கள்: அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி, VTV கணேஷ், அருள்தாஸ், இமான் அண்ணாச்சி, மதன், லல்லு, சதானந்த் மற்றும் குழந்தை நட்சத்திரம் அகிலன்.

  • கதைக்களம்: கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு எளிய குடும்பத்தின் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக ஒரு ‘பணம் அச்சிடும் மெஷின்’ (Money Printing Machine) கிடைப்பதை மையமாகக் கொண்டு, அதன்பிறகு நடக்கும் பரபரப்பான மற்றும் நகைச்சுவையான சம்பவங்களை எதார்த்தமாக விவரிக்கிறது.

  • படப்பிடிப்பு தளங்கள்: மங்களூர், சென்னை மற்றும் மும்பை.

  • டிஜிட்டல் (OTT) உரிமை: பிரபல முன்னணி நிறுவனமான Netflix கைப்பற்றியுள்ளது.

  • திரையரங்கு வெளியீடு: ஜூன் 26ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.