கண்ணே கலைமானேவின் வெற்றி, தோல்வி பற்றி கவலையில்லை! – உதயநிதி பேச்சு

கண்ணே கலைமானேவின் வெற்றி, தோல்வி பற்றி கவலையில்லை! – உதயநிதி பேச்சு

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாரிசு ரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கியிருக்கும் படம் ‘கண்ணே கலைமானே’. உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். வரும் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

“நான் சீனு ராமசாமி சாரின் முதல் படத்திலிருந்தே அவரின் ஒரு பெரிய ரசிகன். அவரது திரைப் படங்கள் எப்போதுமே பிரமிப்பூட்டுகின்றன. மிக யதார்த்தமான சினிமாக்களை கொடுப்பதும், அதன் மூலமே அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் ஒரு சில இயக்குனர்களே உள்ளனர். அவர்களில் சீனு ராமசாமி சார் மிக முக்கியமானவர்” என்றார் நடிகர், எழுத்தாளர் ஷாஜி.

“இன்று காலை படத்தை பார்த்த பிறகு, கமலகண்ணனின் கதாபாத்திரத்திற்கு உதயநிதி அண்ணா மிக அழகாக உயிர் கொடுத்திருக்கிறார் என்பதை நான் உணர்ந்தேன். பாரதி கதாபாத்திரத்தில் தமன்னா பக்கத்து வீட்டு பெண் போல ஒரு இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். இது பாக்ஸ் ஆபிஸ், வசூல் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட ஒரு படம், மாறாக அனைவரின் இதயங்களையும் வென்று, அவர்களின் எப்போதும் பிடித்த விருப்பமான படங்களின் பட்டியலில் இருக்கும். சீனு ராமசாமி சார், எதிர்காலத்தில் இதுபோன்ற நல்ல திரைப்படங்களை தொடர்ந்து தருவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார் வில்லன் நடிகர் நாகேந்திரன்.

“ஒரு நல்ல திரைப்படத்தின் அடையாளம், அதை பார்த்த பிறகு மெளனமாகவும் ஆழ்ந்த சிந்தனை யுடனும் நீங்கள் உணர்வீர்கள். கண்ணே கலைமானே அப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை தரும். துயரமான முடிவுகள் தான் மிகவும் தாக்கத்தை உருவாக்கும், ஆனால் கண்ணே கலைமானே மிகவும் மென்மையான உணர்வுகளின் மூலமே அந்த பாதிப்பை நமக்கு தருகிறது” என்றார் நடிகர், இயக்குனர் சக்தி சரவணன்.

45 நாட்களில் மொத்த படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டோம். சீனு ராமசாமி  படங்கள் எப்போதுமே தனித்துவமான இடங்களின் பின்னணியை கொண்டிருக்கும். கண்ணே கலைமானே பசுமையான பின்னணியையும், மேலும் படம் முழுவதும் அழகான தருணங்களையும் கொண்டிருக்கும். எனக்கு பயமாக இருந்தபோதெல்லாம், சீனு ராமசாமி சார் அவரது வார்த்தைகள் மூலம் என்னை ஊக்கப்படுத்தினார். இளம் வயதில் இருந்தே நான் யுவன் ஷங்கர் ராஜா சாரின் மிகப்பெரிய ரசிகன். பெண் கதாபாத்திரங்களுக்கு இந்தப் படத்தில் மிகப்பெரும் முக்கியத்துவம் இருக்கிறது என்று நான் நம்புகிறேன்” என்றார் ஒளிப்பதிவாளர் ஜலந்தர் வாசன்.

சீனு சார் மற்றும் நான் இணையும் மூன்றாவது படம் இது. வழக்கமாக, எங்கள் முந்தைய ட்யூன் களை நாங்கள் உபயோகிப்போம், ஆனால் இதில் நிறைய புதுமை தேவைப்பட்டது. உதயநிதி நடித்த படங்களிலேயே இதுதான் எனக்கு மிகவும் பிடித்த படம். இது பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும்” என்றார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.

இரண்டாவது முறையாக சீனு ராமசாமியுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்டம். இந்த படத்தில் உள்ள எல்லா கதாபாத்திரங்களும் கவிதை மாதிரி இருக்கும். இது தமன்னாவின் 50வது படம், அவருக்கு என் வாழ்த்துக்கள். பெண் சக்தி வாய்ந்தவர்கள், ஆனால் அன்பானவர், கனிவானவர்கள் என்பதை பற்றி படம் பேசுகிறது” என்றார் நடிகை வசுந்தரா.

ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்னர், இந்த படத்துடனும், மொத்த குழுவுடனும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. இன்று காலை, வேறு ஒரு புதிய படத்தை பார்ப்பது போல் இருந்தது. நான் மிகவும் திருப்தியடைந்தேன். சீனு ராமசாமி சார் படத்தில் பல உணர்வுகளைக் கையாண்டிருக்கிறார். சப்டைட்டில் இல்லாமல் இந்த படத்தை பார்த்தால் கூட ஒருவர், இந்த படத்தின் உணர்வுகளை புரிந்து கொள்ளவும், அதை விரும்பவும் முடியும் என நான் நம்புகிறேன். இன்னமும் பாரதி கதாபாத்திரம் எனக்குள் இருக்கிறது. வழக்கமாக, நாம் ஒன்றாக வேலை செய்யலாமா என்று எந்த ஒரு ஹீரோவிடமும் நான் கேட்பதில்லை. ஆனால் நான் இப்போது உங்களின் அடுத்தடுத்த படங்களில் நடிக்க என்னை பரிசீலனை செய்யுங்கள் என சீனு ராமசாமியிடம் கோரிக்கை வைக்கிறேன். யுவன் ஷங்கர் ராஜா என் சினிமா வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கிறார். பாடல்களும் படத்தில் கதாபாத்திரங்கள் போல தான் இருக்கும். ஒளிப் பதிவாளர் ஜலந்தர்  என்னை மிகவும் அழகாக காட்டியிருக்கிறார். இந்த படத்தை தயாரித்த உதயநிதிக்கு என் நன்றி, சீனு  குறுகிய காலத்திற்குள் இத்தகைய ஒரு அழகிய படத்தை எடுத்திருப்பதை பார்க்க எனக்கு ஆச்சரியமாக இருந்தது” என்றார் நடிகை தமன்னா.

“இதற்கு முன்பு என் பல படங்களின் பல பத்திரிகையாளர் சந்திப்பில் நான் பல விஷயங்களைப் பேசினேன். ஆனால் இன்று இது ஒரு நல்ல படம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்த படத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொருவருக்கும் நான் நன்றியை கூறுகிறேன். ஒட்டுமொத்த தொழில் நுட்ப குழுவும் மிகச்சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர் என ஒவ்வொருவரும் மிகச் சிறந்த விஷயங்களை அளித்திருக்கிறார்கள். என் குழந்தை பருவ தோழி யாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வசுந்தரா நடித்திருக்கிறார், மிகவும் சவாலான கதாபாத்திரம் அது. குறைந்தபட்சம் வருடத்திற்கு ஒரு முறை சீனு ராமசாமி  படங்களில் தமன்னா நடிக்க வேண்டும் என நான் பரிந்துரை செய்கிறேன். இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் மிகவும் ஊக்கம் அளிக்கும் மற்றும் பெண்களை பிரதிபலிக்கும் ஒரு கதாபாத்திரமாக இருக்கும். பாரதி கதா பாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்துள்ளார். படத்தின் இறுதியில் எனக்கும் வடிவுக்கரசி அம்மா வுக்கும் ஒரு உணர்ச்சிகரமான காட்சி இருக்கிறது. அது மறக்க முடியாதது. முழு படப்பிடிப்பும் முடிந்த பிறகு தான் பாடல்கள் இசையமைக்கப்பட்டன. இது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. கண்ணே கலைமானேவின் வெற்றி அல்லது தோல்வி பற்றி எனக்கு கவலை இல்லை, ஆனால் நான் இன்னும் ஒரு படத்தில் சீனு சார் உடன் இணைந்து பணியாற்று வேன். மனிதன் மற்றும் நிமிர் படங்களுக்கு பிறகு எந் கேரியரில் இந்த படம் பாராட்டப்படும் ஒரு படமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார் நடிகர் உதயநிதி ஸ்டாலின்.

அடுத்த படத்தில் நீங்க இருக்கீங்க என போலி வாக்குறுதியை அளிக்கும் பல இயக்குனர்களுக்கு மத்தியில், முந்தைய படங்களின் படப்பிடிப்பில் சீனு சார் சொன்ன மாதிரி இந்த படத்தில் எனக்கு ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியிருக்கிறார். அதுவும் தம்பி உதயநிதி ஸ்டாலினின் திரைப்படத்தின் ஒரு பகுதியாக என்னை ஒப்பந்தம் செய்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. நான் அவரது திரைப்படங்களின் ஒரு பெரிய ரசிகை. சினிமாவில் மிகவும் எளிமையானவர் என பலரையும் குறிப்பிட்டு சொல்வதை நான் பார்த்திருக்கிறேன், ஆனால் மிகப்பெரிய ஒரு பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்தாலும் எளிமையாக இருக்கும் உதயநிதி தம்பி தான் அந்த வார்த்தைக்கு மிகவும் பொருத்தமானவர். படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியை அவரால் செய்ய முடியுமா என எனக்கு சந்தேகம் இருந்தது, ஆனால் அவர் என்னை ஆச்சர்யப்படுத்தினார். படத்தின் இறுதி காட்சியில் அவர் என்னிடம் ‘அப்பத்தா’ எனக் கூற வேண்டும், அந்த காட்சியில், இயல்பாக என் கண்ணில் இருந்து கண்ணீர் வந்தது. படத்தின் ஒரு காட்சியில் கிளிசரின் பயன்படுத்தாமலேயே தமன்னா அழுகிற காட்சி மிக சிறப்பாக வந்திருக்கிறது. நடிகர், நடிகைகளிடமிருந்து சிறந்ததை பெற சீனு சாரால் மட்டுமே முடியும்” என்றார் நடிகை வடிவுக்கரசி.

தர்மதுரைக்கு பிறகு ஒரு நல்ல கதையுடன் என்னால் யாரையும் ஒப்புக் கொள்ள வைக்க முடியவில்லை. அவ்வளவு பெரிய வெற்றிப்படத்தை கொடுத்தும் விஜய் சேதுபதி திரும்பி வந்து ஒரு வாய்ப்பினை வழங்கும் வரை எனக்கு எந்த ஒரு நல்ல வாய்ப்பும் கிடைக்கவில்லை. ஆனால் விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த படங்களால் உடனடியாக படப்பிடிப்பை துவங்க முடியவில்லை, அந்த நேரத்தில் தான் வேறு கதைகளை எழுதும் வாய்ப்பு அமைந்தது. பின்னர் நான் ரெட் ஜெயண்ட் மூவிஸ் அலுவலகத்துக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களைக் கொண்ட ஒரு திரைப்படத்தை ஏற்றுக் கொண்டதற்காக உதயநிதி சாருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஒரு அற்புதமான நடிகர், ஒரு 10 யதார்த்தமான படங்களில் அவர் நடித்தால் போதும், அவரை யாராலும் அசைக்க முடியாது. தொடக்கத்தில், எங்களுக்குள் சில மாறுபட்ட கருத்துகள் இருந்தன, ஆனால் படிப்படியாக நாங்கள் அதை சரி செய்தோம். ஒரு தயாரிப்பாளராக, அவர் அதிக பட்ஜெட் எடுத்துக் கொள்ள சொல்வார், ஆனால் நான் இதை ஒரு குறிப்பிட்ட பட்ஜெட்டில் முடிக்க விரும்பினேன். என் திரைப்படம் யாரையும் ஏமாற்றாது என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். தமன்னா ஒரு நல்ல ஆன்மாவை கொண்டவர், அவர் காட்சிகளை புரிந்து கொண்டு, உணர்ச்சி ரீதியாக மிகச்சிறப்பாக நடிப்பவர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் நடை, உடை பற்றிய ரெஃபரன்ஸ் ஒன்று படத்தில் இருக்கும். ஏனெனில் அவருடைய கதாபாத்திரம் மிகவும் வலுவான சிந்தனையுள்ள ஒரு சக்திவாய்ந்த பெண்ணின் கதாபாத்திரம்” என்றார் இயக்குனர் சீனு ராமசாமி.

error: Content is protected !!