தமிழ் குரல் / AI Voice
இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவரும், புரட்சி செய்தவருமான நேதாஜி பாஷ் சந்திர போஸின் மரணம் இதுவரை மர்மமாகவே இருந்துவருகிறது. அவரது மரணம் தொடர் பான மர்ம முடிச்சுகளை அவிழ்க்க மத்திய அரசு 3 விசாரணை கமிஷன்களை அமைத்தது. 1956-ல் அமைக்கப்பட்ட ஷா நவாஸ் கமிட்டியும், 1970-ல் அமைக்கப்பட்ட கோஸ்லா கமிட்டியும் தாக்கல் செய்த அறிக்கையில் 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி ஜப்பான் கட்டுப்பாட்டில் இருந்த தைபேவின் (தற்போதைய தைவான் நாட்டின் தலைநகர்) தைகோகு விமான விபத்தில் நேதாஜி மரணமடைந்ததாக கூறப்பட்டுள்ளது.ஆனால், 1999-ஆம் ஆண்டு முகர்ஜி கமிஷன் மட்டும், விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை என கூறியது. இதனை மத்திய அரசு மறுத்தாலும், நேதாஜி மரணத்தில் மறைந்துள்ள மர்மங்களை கண்டறிய வரலாற்று ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆர்வமுடன் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் இறக்கவில்லை, சோவியத் யூனியன் சர்வாதிகாரி ஸ்டாலினால் சிறையில் வைத்து கொல்லப்பட்டார். இந்த விஷயம் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குத் தெரியும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி புதுத் தகவலை வெளியிட்டுள்ளார்.
திரிபுரா தலைநகர் அகர்தலாவில் கலந்து கொண்டு பேசும்போது இந்தத் தகவல்களை சுவாமி நேற்று வெளியிட்டார். இதுதொடர்பாக அவர், “1945-ம் ஆண்டு நேதாஜி விமான விபத்தில் உயிரிழந்தார் என பரப்பட்ட தகவல் நேரு மற்றும் ஜப்பானின் கூட்டு சதித்திட்டம் ஆகும். அப்போதயை சோவியத் யூனியனில் தங்குவதற்கு இடம் தேடிய நேதாஜிக்கு சர்வாதிகாரி ஸ்டாலின் தஞ்சமடைய அனுமதியளித்தார்.
பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அவர் ஸ்டாலின் உத்தரவால் கொல்லப்பட்டார். இதைப் பற்றிய அனைத்து விவரங்களும் முன்னாள் பிரதமர் நேருவுக்கு தெரியும். 75 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூரில் நேதாஜியின் ஆசாத் ஹிந்த் அரசாங்கம் அமைக்கப்பட்டதால் தான் இந்தியாவிற்கு ஆங்கிலேயர்கள் சுதந்திரம் வழங்க முக்கிய காரணம்.காலனி ஆதிக்கத்துக்கு எதிராக இந்தியர்கள் ஆயுதம் ஏந்தினால் அதை பிரிட்டன் அரசால் சமாளிக்க முடியாது, ஏனெனில் இந்தியர்களின் எண்ணிக்கையை ஒப்பிடும் போது பிரிட்டிஷ்காரர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
அதனாலேயே நமக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. இந்த தகவலை பிரிட்டன் முன்னாள் பிரதமர் க்ளீமண்ட் அட்லீஸ் 1948-ம் ஆண்டு இந்தியா வந்த போது அவரே ஒப்புக்கொண்டுள்ளார்” என்று தெரிவித்தார்.

