ஜியோ ஏர் ஃபைபர் இணைய சேவை: விநாயகர் சதுர்த்தி முதல் தொடங்கும் – முகேஷ் அம்பானி அறிவிப்பு

ஜியோ ஏர் ஃபைபர் இணைய சேவை: விநாயகர் சதுர்த்தி முதல் தொடங்கும் – முகேஷ் அம்பானி அறிவிப்பு

முன்னணி தொலை தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பாரதி ஏர்டெல் சமீபத்தில் X-ஸ்ட்ரீம் ஏர் ஃபைபர் -ஐ அறிமுகப்படுத்திய நிலையில் ரிலையன்ஸ் குழுமத்தின் ஒரு அங்கமாக ஜியோ ஏர் ஃபைபர் இணைய சேவை விநாயகர் சதுர்த்தி முதல் தொடங்கும் என, அக்குழும தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

இந்தியாவைப் பொறுத்தவரை தொலைத்தொடர்புத் துறை அன்றாடம் வளர்ச்சிக் கண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக ஃபிக்ஸ்ட் வயர்லெஸ் ஆக்சஸ் (fixed wireless access (FWA) offering) என அழைக்கப்படும் வயர்லெஸ் தொலைத்தொடர்பு முறையானது ஒரு குறிப்பிட்ட லொகேஷன் அல்லது கட்டிடத்தில் அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்குவதற்கு உதவி செய்கிறது. தற்போது வழக்கத்தில் இருக்கும் சாதாரண ஃபைபர் ஆப்டிக் கேபிள் அல்லது காப்பர் லைன்களை விட இந்த வயர்லெஸ் தொழில்நுட்பம் மூலம் அதிவேகத்தில் இன்டர்நெட் சேவையை வழங்க முடியும். மேலும் இந்த வகை பிராட்பேண்ட் இன்ஸ்டால் செய்வதற்கு வயர்களோ அல்லது தனிப்பட்ட இன்ஸ்டாலேஷனும் தேவைப்படுவதில்லை. இந்த ஏர்ஃபைபர் ஜியோ சேவை விநாயகர் சதுர்த்தி அன்று அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நம் நாட்டின் மிகப் பெரிய கார்பரேட் நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் நிறுவனத்தின் 46ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் கம்பி இல்லாத இணையதள சேவையை வழங்கும் Jio Air Fiber சேவை குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

ஜியோ 5ஜி சேவை தற்போது நாடு முழுவது உள்ள 96 சதவீத நகரங்களில் கிடைக்கும் நிலையில் வரும் டிசம்பருக்குள் 100 சதவீதம் முழுமையாக கிடைக்கும் என தெரிவித்தார். ஜியோவின் ஒட்டுமொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை தற்போது 45 கோடி என்ற மைல்கல்லை கடந்துள்ளது என்றும் முகேஷ் அம்பானி கூறினார்.

மேலும் ஜியோவின் ஆப்டிகல் ஃபைபர் அடிப்படையிலான பிராட்பேண்ட் சேவையான ஜியோ ஃபைபர் சேவையை, இந்தியா முழுவதும் 1 கோடிக்கும் அதிகமானோர் சந்தா செலுத்தி பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் சராசரியாக, ஒரு குடும்பம் மாதத்திற்கு 280ஜிபி டேட்டாவைப் பயன்படுத்துகிறது, இது ஜியோவின் தனிநபர் மொபைல் டேட்டா பயன்பாட்டை விட பத்து மடங்கு அதிகம் ஆகும்.

அதே நேரம், வயர்டு பிராட்பேண்ட் இணைப்புகளை எளிதாக்குவதற்கான கட்டமைப்புகள், அதாவது தரைக்கு அடியில் வயர்களை புதைப்பது அவசியமாகும். நகரங்களில் இது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்காது, ஆனால் தொலைதூர பகுதிகளில், இணைப்பிற்கு தேவையான ஆப்டிகல் ஃபைபர் கட்டமைப்பை உருவாக்குவது சவாலாக இருக்கும். தற்போதய சூழலில் ஜியோ நிறுவனத்தின் ஆப்டிகல் ஃபைபர் இந்தியா முழுவதும் 15 லட்சம் கிலோ மீட்டருக்கு மேல் பரவியுள்ளது. ஆனால் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைய அது இன்னும் போதுமானதாக இல்லை.

இதன் காரணமாக தான், வயர்ட் பிராண்ட் பேண்ட் சேவைக்கு மாற்றாக AirFiber வருகிறது. வயர் எதுவுமின்றி காற்றின் வாயிலாகவே அதிவேகமான 5ஜி இணையசேவையை வழங்குவது தான் இத்திட்டத்தின் நோக்கம். அதன்படி, ஜியோவின் விரிவான 5G டேட்டா நெட்வொர்க்கைப் பயன்படுத்தி, AirFiber ஏற்கனவே உள்ள 5G டவர்களில் இருந்து டேட்டாவை சேகரித்து, அவற்றை பயனாளர்களின் வீட்டிற்கு அனுப்புவதற்கு ரிசீவர்கள் மற்றும் ரூட்டர்களின் தொகுப்பை பயன்படுத்துகிறது. இது வழக்கமாக வீட்டிற்குள் வைக்கப்படும் ரூட்டரையும், வெளிப்புறத்தில் 5G சிம் கொண்ட ஒரு சாதனத்தையும் உள்ளடக்கியது. இந்த சாதனம் அருகிலுள்ள டவர்களில் இருந்து 5G டேட்டாவை சேகரித்து 1Gbps வரையிலான பிராட்பேண்ட் வேகத்திற்கு ரூட்டருக்கு அனுப்புகிறது. உட்கட்டமைப்பை ஏற்படுத்துவது கடினமாக உள்ள பகுதிகளுக்கு இந்த புதிய அம்சம் நல்ல பலனை கொடுக்கும். அதேநேரம், மோசமான நெட்வொர்க் வசதி கொண்டுள்ள பகுதியில் வசிக்கும் பயனாளர்களுக்கு இது சாதகமாக இருக்காது.

ஆப்டிகல் ஃபைபர் தினசரி 15,000 வீடுகளை இணைக்க அனுமதிக்கிறது, ஆனால் AirFiber மூலம், ஒரு நாளைக்கு 1,50,000 இணைப்புகளை அடைய புதிய திட்டம் சாதகமாக இருக்கும் என்று ஜியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இதற்கான கட்டணம் தொடர்பான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

error: Content is protected !!