ஜின் தி பெட் – விமர்சனம்!

பூதம், வேதாளம் மாதிரியான கதைகள் பெரும்பாலானோருக்கு பிடிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. இவை புராணங்கள், நாட்டுப்புறக் கதைகள், மற்றும் கற்பனை இலக்கியங்களில் ஆழமாக வேரூன்றியுள்ளன, குறிப்பாக தமிழ் மற்றும் இந்திய கலாச்சாரத்தில். பூதம், வேதாளம் போன்றவை மர்மமான, அமானுஷ்ய உயிரினங்களாக சித்தரிக்கப்படுகின்றன. இவை மனித மனதில் பயத்தையும் ஆர்வத்தையும் தூண்டுகின்றன, ஏனெனில் அவை அறியப்படாதவை மற்றும் கணிக்க முடியாதவை.பயம் என்பது ஒரு அடிப்படை உணர்ச்சி; இதைப் பாதுகாப்பான சூழலில் (கதைகள் மூலம்) அனுபவிப்பது மக்களுக்கு உற்சாகமாக இருக்கிறது. அதிலும் பூதத்தை வைத்து காமெடி பண்ணுவது பலரையும் கவர்கிறது. முன்னொரு காலத்தில் பிராஸ் பாட்டில் என்ற ஆங்கிலப்படத்தின் தழுவலாக வந்த பட்டணத்தில் பூதம். தொடங்கி மை டியர் பூத, பூதம் எனது நண்பன் போன்ற படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அந்த பட்டியலில் சேரும் நோக்கில் உருவானதே ஜின் தி பெட். ஆனால் ஜின் என்ற அரபு சொல்லுக்கு மறைவானது அல்லது கண்ணுக்கு தெரியாது என்று பொருள் . ஷைத்தானும் ஜின்களின் இனத்தை சேர்ந்தவன் தான்! ஜின்களும் யாரின் கண்களுக்கும் தெரிய மாட்டார்கள் ஆனால் நாம் அவர்களின் கண்களுக்கு தெரிவோம். ஜின்களும் நம்மை போன்ற ஒரு படைப்பே! அவர்களும் நம்மை போன்றவர்கள் தான் ஆனால் அவர்கள் நம்மை போன்று உருவ அமைப்பு இருக்காது மற்றும் நம்மை விட சற்று ஆற்றல் மிக்கவர்கள். நம்மை போன்று அவர்களுக்கும் குடும்பம் உண்டு நல்லவர்கள் கேட்டவர்கள் உண்டு அவர்களுக்கும் வாழ்வு மரணம் மறுமை நாளில் கேள்வி கணக்கு என்று அனைத்தும் உண்டு என்பதையெல்லாம் அறிந்து தலைப்பைப் பிடித்தவர்கள் அதற்குரிய சரியான கதை மற்றும் திரைக் கதையை உருவாக தவறி விட்டார்கள்.
அதாவது ஒரு மியூசிக் ட்ரூப்பில் சிங்கராக இருக்கும் நாயகன் முகன் ராவ் அங்கு காண்ட்ராக்ட் முடிந்ததையடுத்து சென்னைக்கு திரும்ப ஆயத்தமாகிறார். முன்னதாக மலேசியாவில் ஜின் என்ற பேய் வகையை சார்ந்த ஒரு உருவத்தை பெட்டியில் அடைத்து வைத்து கடையில் வைத்திருக்க அதை வீட்டில் வளர்த்தால் அதிர்ஷ்டம் வரும் என்று கடைக்காரர் சொன்னதை நம்பி தன் வீட்டிற்கு வாங்கி வருகிறார். வீட்டில் ஜின்னை, நாய்க் குட்டி போல் பிஸ்கட், பால் வைத்து வளர்க்கிறார். அதை அடுத்து முகன் ராவிற்கு காதல், சந்தோஷம் எல்லாம் கிடைக்கிறது. அதே சமயம் நாயகன் குடும்பத்தினருக்கு சிலபல சோகங்கள் ஏற்படுகிறது. ஜின்னால்தான் இந்த நிகழ்வுகள் ஏற்படுகிறது என்று குடும்பத்தினர் கூறினாலும் முகன் ராவ் அதை ஏற்கவில்லை. ஒரு சூழலில் தன் காதல் மனைவி ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடையும் முகன் ராவ், வீட்டில் வளர்த்த ஜின்னை கோபத்தில் தெருவில் தூக்கி வீசுகிறார். ஆனால் தன் ம்னைவி நிலைக்கு ஜின் காரணம் இல்லை என்றும், அவளைக் கொலை செய்ய ஒரு அதிகாரம் மிக்க கூட்டம் முயலுகிறது என்பதை புரியவைத்த ஜின் முகனுக்கு உதவிக்கும் வர , பின்னே நடந்தது என்ன என்பதே ஜின் தி பெட் படக் கதை.
நாயகன் முகன்ராவ் தன் கேரக்டரின் வலுவை புரிந்து கேஷூவலாக ஆக்ட்டிங்கில் பாஸ் மார்க் வாங்கி விடுகிறார்., அதிலும் ஸ்டண்ட் சீன்களில் படு ஸ்பீட் காட்டி இருப்பதும், கண்ணுக்கும் தெரியாத ஜின்னிடம் பேசி மற்றவர்களை குழப்பும் காமெடியிலும் பலே வைத்து விடுகிறார்.
முகுன் ராவ் காதலியாக பவ்யா நடித்திருக்கிறார். கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துவிட்டு சென்றிருக்கிறார்.
பால சரவணன் ஏனோதானோ என்று அக்கறை காட்டாத ஃபீலிங். ஆனால் , இமான் அண்ணாச்சி காமெடி புன்னகை பூக்க வைக்கிறது. ஆனால் இவர் தனக்கென சில நிரந்தர எக்ஸ்பிரஸன்ஸ்களை வைத்து ஒப்பேற்றும் ஸ்டைலை மாற்ற வேண்டியது அவசியம் . ஹீரோ முகேனின் சகோதரியாக வினோதினி, பாட்டியாக வடிவுக்கரசி என்று அவரவர்கள் அந்தந்த பாத்திரங்களில் பொருந்தி இருக்கிறார்கள்.
வில்லனாக ராதாரவியுடன் நந்து ஆனந்தம் களம் இறங்கி இருக்கிறார். அவர்களும் வழக்கமான வில்லங்கங்களாகவே வந்து போகிறார்கள். கதையில் ஒரு டுவிஸ்ட்க்கு ராதாரவி நிழல்கள் ரவி பயன் பட்டிருக்கின்றனர்.
நல்ல ஜின் மற்றும் தீய ஜின் இரண்டுக்குமான ப்ளாஷ் பேக் காட்சிகளை சற்று சுவாரஸ்யமாக கொடுத்திருந்தார் இயக்குனர். வசனத்திலும் நன்றாகவே தனது உழைப்பைக் கொடுத்திருக்கிறார்.
திரைக்கதையை இன்னும் சற்று பரபரப்பாக கொடுத்திருந்திருக்கலாம்.. நல்ல ஜின்’ன் குரலை இப்படித்தான் கொடுக்கப்போகிறோம் என்று தெரிந்தும் எதற்காக இப்படியான கொடூர உருவத்தைக் கொடுக்க வேண்டும், மிகவும் இயல்பான ஒரு உருவத்தைக் கொடுத்திருந்திருக்கலாமே.? குழந்தைகளுக்கு பார்த்ததும் சிரிப்பு வருகிற மாதிரி… ஆனால், நல்ல ஜின்னின் காமெடி கெளண்டர்கள் நன்றாகவே சிரிப்பை வரவைத்திருக்கின்றன.
கேமராமேன் ஒர்க் ஜின்னுக்கு துணையாக இருக்கிறது. இசையும் துருத்தாமல் ரசிக்க வைக்கிறது.
ஆரம்ப பேராவில் சொன்னது போல் குழந்தைகள் முதல் பெரியோர்கள் பலரும் ரசிப்பார்கள் என்று பெருமளவில் நம்பி இருக்கிறார் இயக்குனர் அதுதான் படத்தின் வேர் என்றால் அந்த ஜின்னை கொஞ்சம் லட்சணமாக வடிவமைத்து ,காமெடிக்கென முக்கியத்துவம் கொடுத்து, இன்னும் சற்று சுவாரஸ்யத்தோடு திரைக்கதை அமைத்து இருக்கலாம். குறிப்பாக நல்ல ஜின்’ன் குரலை இப்படித்தான் கொடுக்கப்போகிறோம் என்று தெரிந்தும் எதற்காக இப்படியான கொடூர உருவத்தைக் கொடுக்க வேண்டும், மிகவும் இயல்பான ஒரு உருவத்தைக் கொடுத்திருந்திருக்கலாம்.
மொத்தத்தில் இந்த ஜின் – சுமார்
மார்க் 2.25/5