பவன் கல்யாணின் ஜனசேனா நடத்திய பிரம்மாண்ட அரசியல் விழிப்புணர்வு பேரணி!

பவன் கல்யாணின் ஜனசேனா நடத்திய பிரம்மாண்ட அரசியல் விழிப்புணர்வு பேரணி!

டோலிவுட் எனப்படும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் பவன்கல்யாண். ரசிகர்களால் பவர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர், ஜன சேனா என்ற கட்சியை நடத்தி வருகிறார். ஒரு புறம் திரைப் படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தாலும் அவ்வப்போது, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்குதல், ரத யாத்திரை செல்லுதல் என அரசியல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். இதனிடையே இன்றைய சூழலில் அரசியலில் மாற்றம் வேண்டும் என்பதையெல்லாம் வலியுறுத்தி  ஜனசேனா நடத்திய பிரம்மாண்ட அரசியல் விழிப்புணர்வு நடைபயணம், லட்சக்கணக் கானவர்கள் கலந்து கொண்டு வெற்றிப் பெற செய்தததாக ஜனசேனா தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக ஜனசேனாவின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “நடிகரும், ஜன சேனா என்ற அமைப்பின் தலைவருமான பவன் கல்யாண்,இன்றைய அரசியல் குறித்து இளைய தலைமுறையினர் உரிய விழிப்புணர்வு பெறவேண்டும் என்ற நோக்கத்தில் லட்சக் கணக்கானவர் கள் பங்குபெறும் பிரம்மாண்ட விழிப்புணர்வு அணிவகுப்பு ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ள காட்டன் பரேஜ் என்ற சரித்திர புகழ்ப் பெற்ற பாலத்தின் வழியாக இந்த அணிவகுப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் தங்களின் கைகளை உயர்த்தியபடி, அரசியல் விழிப்புணர்விற்கான கோஷங்களை எழுப்பினர். அத்துடன் அணிவகுப்பில் இடம்பெற்றிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஜனசேனாவின் தலைவரான பவன் கல்யாணை வரவேற்றனர். பவன் கல்யாண் அவர்கள், இந்த விழிப்புணர்வு நடைபயணத்தில் கலந்து கொண்டவர்களைப் பார்த்து கையசைத்து தன்னுடைய மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்தார்.

லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட இந்த பேரணியால் பவன் கல்யாண் மேடைக்கு செல்ல மூன்று மணி நேரம் ஆனது. லட்சக்கணக்கான மக்கள் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டு தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தினர். அப்போது ஏராளமானவர்கள் பவன் கல்யாணைப் பார்த்து ‘வருங்கால முதல்வர் பவன் கல்யாண் வாழ்க! ’ என்ற கோஷத்தை விண்ணதிர எழுப்பினர். கூட்டத்தினர் வெளிப்படுத்திய இந்த அன்பை, காரின் மேல்பகுதிக்கு வந்து ஏற்றுக்கொண்டு, அவர்களை உற்சாகப்படுத்தினார் பவன்கல்யாண். அவர்களை பார்த்து கைவிரல்களை மடக்கி, உயர்த்தி ‘வெல்வோம், மாற்றத்தைக் கொண்டு வருவோம்.’ என்று சைகையும் காட்டினார் பவன்கல்யாண்.

காட்டன் பரேஜில் இருபக்கமும் ஏராளமான மக்கள் ஒன்றுதிரண்டிருந்தனர். இந்த கூட்டத்தில் ஆண் பெண் என பாலின பாகுபாடின்றி, சாதி, மத, இன, வயது வேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர். இவர்களின் முழக்கம் இன்றைய அரசியல் நிலையில் மாற்றம் வேண்டும் என்பதாக இருந்தது.

இந்த அணிவகுப்பிற்கு மீனவர்களும் தங்களது ஆதரவினை தெரிவித்தனர். பிச்சுகா லங்கா என்ற இடத்திலிருந்து தவ்லீஸ்வரம் வரை கடலில் தங்களது படகுகளில் ஜனசேனாவின் கொடிகளை கட்டி, தங்களது ஆதரவை தெரிவித்தனர். அவர்கள் தங்களது தேசப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் இந்திய தேசிய கொடியையும், ஜனசேனாவின் கொடியுடன் கட்டியிருந்தனர். இந்த பிரம்மாண்ட பேரணிக்கு இடதுசாரி மற்றும் தலித் அமைப்புகளும் தங்களது ஆதரவை தெரிவித்தன. அவர்கள் சிவப்பு மற்றும் நீல வண்ணக் கொடிகளை ஏந்தி தங்களது ஆதரவை வெளிப்படுத்தி, இந்த அரசியல் விழிப்புணர்வை வரவேற்றனர்.

இந்த அணிவகுப்பில் கலந்து கொள்வதற்காக காலை ஆறு மணியிலிருந்து இளைஞர்கள் சாலையில் நீண்ட வரிசையில், சாலை விதிகளை மீறாமல் அணி வகுத்து நின்றனர். இந்த பிரம்மாண்ட பேரணியில் கலந்து கொண்டவர்கள் கிழக்கு கோதாவரி மாவட்டத்து பெண்கள் தங்களுக்கே உரிய பாரம்பரிய முறையில் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.’ என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Posts

error: Content is protected !!