திரையுலகில் பல சாதனைகளைப் படைத்துவிட்டு, தற்போது அரசியல் களத்தில் தடம் பதித்து தனி முத்திரை பதித்து விட்ட விஜய்யின் கடைசி வெள்ளித் திரை சித்திரமாக ‘ஜனநாயகன்’ வந்தடைந்துள்ளது. இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம், ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்பை எந்தளவுக்குப் பூர்த்தி செய்திருக்கிறது என்பதை விரிவாகப் பார்ப்போமா.
கதை
சிறைக்குள் நடக்கும் ஒரு போலியான கலவரத்தை சாமர்த்தியமாக முறியடிப்பதன் மூலம், ஜெயில் அதிகாரியின் (கௌதம் மேனன்) நம்பிக்கையைச் சம்பாதிக்கிறார் கைதியான விஜய். அம்மாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்படும்போது, விதியைத் தளர்த்தி விஜய்யை பரோலில் அனுப்புகிறார் அந்த அதிகாரி. இந்த நன்றியுணர்ச்சி, அதிகாரியின் மகளான மமிதா பைஜூவிற்கும் விஜய்க்கும் இடையே ஒரு அழகான அண்ணன்-தங்கை போன்ற ஆழமான பிணைப்பை உருவாக்குகிறது.
திடீரென ஒரு விபத்தில் அந்த அதிகாரி உயிரிழக்க, தந்தையை இழந்த மமிதாவைத் தனது சொந்த மகளாகவே ஏற்று வளர்க்கிறார் விஜய். தனது வளர்ப்பு மகளை ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்பதே விஜய்யின் லட்சியம். ஆனால், சிறுவயது அதிர்ச்சியால் ‘பியர்ஃபோபியா’ (பய உணர்வு) நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் மமிதாவால் அதை அடைய முடிவதில்லை.
இதற்கிடையில், தான் எதற்காகச் சிறை தண்டனை அனுபவித்தானோ, அந்த வழக்கில் பலியானதாகக் கருதப்பட்ட நபர் உயிருடன் உலவுவதை விஜய் கண்டுபிடிக்கிறார். அந்த வில்லனுக்கும் விஜய்க்கும் இடையிலான பழைய பகையின் பின்னணி என்ன? வளர்ப்பு மகளின் மனப்பயத்தைப் போக்கி அவரை ராணுவ வீரராக்கினாரா? வில்லனின் சதியை எவ்வாறு வீழ்த்தினார் என்பதை ஆக்ஷன் கலந்து சொல்கிறது ஜனநாயகன் படக் கதை.
நடிப்பு
-
விஜய்: இது விஜய்யின் வழக்கமான மாஸ் படம் மட்டுமல்ல; உணர்ச்சிகளின் குவியல். ஒரு கைதியாக, வளர்ப்பு மகளின் பயத்தைப் போக்கும் வழிகாட்டியாக, ஆக்ஷன் அவதாரத்தில் எனப் பல தளங்களில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக அரசியல் தொனி கொண்ட வசனங்களைப் பேசும்போது திரையரங்கில் கைதட்டல்கள் அள்ளுகின்றன.ஆனாலும் வழக்கமான காமெடி மற்றும் ரொமாண்டிக் போர்சனில் குறும்பு ஆகிய போர்சன்கள் மிஸ்சிங்.
-
மமிதா பைஜூ: பயத்தில் நடுங்கும் இளம்பெண்ணாகத் தொடங்கி, பின்னர் ராணுவ சீருடையில் கம்பீரமாக நிற்கும் வரையிலான இவரது நடிப்புப் பயணம் மிக நேர்த்தி. விஜய்க்கு இணையான முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரம்.
-
பாபி தியோல்: வழக்கமான ஸ்டைலிஷ் வில்லனாக வந்து மிரட்டினாலும், திரைக்கதையில் இவரது கதாபாத்திரத்திற்கு இன்னும் வலுவான சம்பவங்களை வைத்திருக்கலாம்.
-
பிற நடிகர்கள்: பிரகாஷ் ராஜ், பூஜா ஹெக்டே, கௌதம் மேனன் எனப் பெரிய பட்டாளமே இருந்தாலும், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அளவான காட்சிகளில் கச்சிதமான பங்களிப்பைத் தந்துள்ளனர்.
டெக்னீஷியன்ஸ்
-
இசை (அனிருத்): தளபதியின் கடைசிப் படம் என்பதால் பின்னணி இசையில் அனிருத் வெளுத்து வாங்கியிருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளுக்கான எலக்ட்ரிஃபையிங் பிஜிஎம் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளுக்கான மெல்லிசை எனப் படத்தின் மிகப்பெரிய பலமாக நிற்கிறார்.
-
ஒளிப்பதிவு (சத்யன் சூரியன்): சிறைச்சாலை லொகேஷன்களையும், அதிரடி சண்டைக் காட்சிகளையும் தன் கேமரா கண்களால் மிக மிரட்டலாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.
-
படத்தொகுப்பு (பிரதீப் ஈ. ராகவ்): முதல் பாதியின் சில தேவையற்ற நீளங்களைக் கத்தரித்திருந்தால் படத்தின் வேகம் இன்னும் கூடியிருக்கும்.
-
இயக்கம் (எச். வினோத்): வழக்கமான ஆக்ஷன் ஃபார்முலாவிற்குள் ‘பியர்ஃபோபியா’ பற்றிய விழிப்புணர்வு, தந்தை-மகள் பாசம் மற்றும் சமூக-அரசியல் கருத்துகளை மிகச் சரியாக எடைகட்டி வழங்கியுள்ளார்.
கைத்தட்டல் & விசிலை அள்ளித் தெறிக்கும் வசனங்கள் சில:
நம்ம பாதுகாப்பில் தளபதி இல்லை சார், தளபதி பாதுகாப்பில் தான் நாம் இருக்கோம்.
பொண்ணுங்களுக்கு பயம் இருக்கக்கூடாது. புலி மாதிரி வளர்க்கணும்.
நம்ம வாழ்க்கைல எப்பவும் பயத்துக்கு இடம் தரக்கூடாது. பயத்தையும் , பயமுறுத்தறவனையும் ஓட விட்டு இப்படி கெத்தா நிக்கணும். அப்போதான் உலகம் நீ சொல்றதை கவனிக்கும்.
நாளைல இருந்து உனக்கு ரெண்டு நிழல். ஒண்ணு உன்னுது, இன்னொண்ணு என்னுது.
ஏம்ப்பா, ட்ரெய்லரே உலகம் பூரா ட்ரெண்ட் ஆகுதுன்னா , மெயின் பிக்சர்? – தெறிக்கும்!
மத்தவங்க பேசினா ஸ்பீச், தளபதி பேசினா ரீச்!
ஒரு பிரேம் கூட மிஸ் ஆகக்கூடாது, என் படம் அவனுக்குத் தெரியணும், அவன் பயம் எனக்குத் தெரியணும்.
மொத்தத் தமிழச்சிங்க ஆதரவு தளபதிக்கு எப்பவும் இருக்கும்.
மாற்றம் என்பது ஒரு பெரிய பிராசஸ். கொஞ்சம் கொஞ்சமாத்தான் நடக்கும்.
நான் காட்டில் பிறந்தவன், பார்த்தாலே நரி எது? ஓநாய் எது?எனக் கண்டுபிடிச்சிடுவேன்.
மொத்தத்தில்
திரைக்கதையில் ஆங்காங்கே சில தொய்வுகளால் ஒரு சிறந்த திரைப்படமாக இல்லாவிட்டாலும், விஜயின் சினிமா பயணத்திற்கு உணர்ச்சிகரமான விடை கொடுக்க முயலும் கமர்ஷியல் படம். ரசிகர்களுக்கு இது ஒரு கொண்டாட்ட அனுபவமாக இருக்கும். ஆனால், நடுநிலை பார்வையாளர்களுக்கு திரைக்கதையின் பலவீனங்கள் தெளிவாகத் தெரியும். “விஜயின் கடைசி படம்” என்ற உணர்வுதான் பல தருணங்களில் படத்தை உயர்த்துகிறது.
மார்க் 3 / 5

