இஸ்ரேல் : செய்தி சேகரிக்க சென்ற பெண் செய்தியாளர் சுட்டுக் கொலை!

இஸ்ரேல் : செய்தி சேகரிக்க சென்ற பெண் செய்தியாளர் சுட்டுக் கொலை!

ஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே மேற்குகரை பகுதி, ஜெருசலேம் நகரம் யாருக்குச் சொந்தம் என்பதில் மோதல் நீடிக்கிறது. இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள அப்பகுதிகளில் இன்னமும் பல லட்சம் பாலஸ்தீனர்கள் வாழ்ந்து வருகின்றனர். இஸ்ரேல் ஆக்கிரமிப்பை எதிர்த்து இவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பாலஸ்தீன பயங்கரவாதிகளை களையெடுப்பதாக கூறி மேற்குகரை பகுதியில் இஸ்ரேல் வீரர்கள் அடிக்கடி தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர். இந்த தேடுதல் வேட்டைகளில் அப்பாவி பாலஸ்தீன மக்கள் சுட்டுக்கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், மேற்குகரை பகுதியில் ஜெனின் நகரில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாமுக்குள் நேற்று காலை இஸ்ரேல் ராணுவ வீரர்கள் அதிரடியாக நுழைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இஸ்ரேல் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அல் ஜசிரா டி.வி.யின் பெண் பத்திரிகையாளரான ஷிரீன் அபு அக்லே (51), கொல்லப்பட்டார். மற்றொரு பத்திரிகையாளர் படுகாயம் அடைந்தார்.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்குள்ளான மேற்குக் கரைப் பகுதியின் வடக்குப் பகுதியில் இருக்கும் நகரம் ஜெனின். அங்கு இஸ்ரேல் ராணுவத்தினர் சென்றிருப்பதாகவும், ஜப்ரியாத் பகுதியில் உள்ள ஒரு வீட்டை அவர்கள் முற்றுகையிட்டிருப்பதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு செய்தி சேகரிக்க நேற்று காலை ‘அல் ஜஸீரா’ ஊடகத்தைச் சேர்ந்த 4 செய்தியாளர்கள் சென்றிருந்தனர்.

அப்போது இஸ்ரேல் ராணுவத்தினர் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். அதில் ஷிரீனின் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதையடுத்து அவர் ஜெனின் நகர மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

அவருடன் சென்றிருந்த மற்றொரு அல் ஜஸீரா செய்தியாளர் அலி சமவுதி மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அவரது முதுகில் குண்டு பாய்ந்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. சம்பவம் நடந்த இடத்தில் பாலஸ்தீனப் போராளிகள் யாரும் இல்லை என்று அலி சமவுதி தெரிவித்திருக்கிறார்.

“இஸ்ரேல் ராணுவத்தின் அந்த நடவடிக்கையைக் கேமராவில் படம்பிடிக்க நாங்கள் சென்றிருந்தோம். அப்போது அவர்கள் திடீரென எங்களை நோக்கிச் சுட்டனர். எங்களை அங்கிருந்து போகச் சொல்லவோ அல்லது படம் பிடிப்பதை நிறுத்தச் சொல்லவோ இல்லை. உடனடியாக சுட்டனர். முதல் குண்டு என் மீது பாய்ந்தது. இரண்டாவது குண்டு ஷிரீன் மீது பாய்ந்தது. சம்பவ இடத்தில் பாலஸ்தீனப் போராளிகளோ ராணுவத்தினரோ இல்லை” என்று கூறியிருக்கிறார்.

உடன் சென்றிருந்த மற்றொரு செய்தியாளர் (பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர்) ஷாதா ஹனாய்ஷா, “அங்கு பாலஸ்தீனப் போராளிகளுக்கும் இஸ்ரேல் படைகளுக்கும் இடையில் மோதல் ஏதும் நிகழவில்லை. பத்திரிகையாளர்கள்தான் குறி வைக்கப்பட்டனர்” என்று கூறியிருக்கிறார்.

“நாங்கள் நால்வரும் பத்திரிகையாளர்களுக்கான மேலாடை அணிந்திருந்தோம். தலைக்கவசமும் அணிந்திருந்தோம். குண்டடிப்பட்டு ஷிரீன் கீழே சரிந்த பின்னரும், இஸ்ரேல் ராணுவத்தினர் தொடர்ந்து சுட்டுக்கொண்டே இருந்தனர். இதனால் அவரை இழுப்பதற்காக அவரை நோக்கிக் கையை நீட்டக்கூட என்னால் முடியவில்லை. எங்களைச் சுட்டுக்கொன்றாக வேண்டும் என்று ராணுவம் விடாப்பிடியாக இருந்தது” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

பாலஸ்தீன – அமெரிக்கரான ஷிரீன், அல் ஜஸீரா ஊடகத்தில் முதன்முதலில் பணிக்குச் சேர்ந்த களச் செய்தியாளர்களில் ஒருவர். 1997-ல் அந்த ஊடகத்தில் அவர் இணைந்தார். கிறிஸ்தவரான அவர் அரபு செய்தி சேவையில் பிரதானமான செய்தியாளராகப் பணியாற்றிவந்தார். இன்று காலை துப்பாக்கிச் சூடு நடைபெற்றபோது, பத்திரிகையாளர்கள் அணியும் ‘பிரஸ்’ என எழுதப்பட்ட மேலாடையும் தலைக்கவசமும் அணிந்திருந்தார். ஆனால், அதையும் தாண்டி துப்பாக்கிக் குண்டு அவரது உயிரைப் பறித்துவிட்டது.

கொன்றது யார்?

ஜெனின் நகரத்தில் கடுமையான துப்பாக்கிச்சூடும், குண்டுவெடிப்புகளும் நிகழ்ந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருக்கிறது. ‘சந்தேகத்துக்குரிய நபர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடந்தது. பாலஸ்தீனர்களின் துப்பாக்கி குண்டுகள் பத்திரிகையாளர்கள் மீது பாய்ந்திருக்கலாம்’ என்றும் தெரிவித்திருக்கிறது. “பாலஸ்தீனர்களின் துப்பாக்கிச்சூட்டில் ஷிரீன் உயிரிழந்திருக்கலாம்” என இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னெட்டும் கூறியிருக்கிறார்.

“யுத்த களத்தில் பத்திரிகையாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். உண்மை என்ன எனக் கண்டறிவது நம் அனைவரின் பொறுப்பு” என இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் யாயிர் லாபிட் கூறியிருக்கிறார்.

ஆனால், சம்பவ இடத்தில் இருந்த பத்திரிகையாளர்கள் கூறுவதைப் பார்க்கும்போது துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது இஸ்ரேல் ராணுவத்தினர் என்றே தெரியவருகிறது. ஷிரீன் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு ‘அல் ஜஸீரா’ கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஷிரீனின் படுகொலைக்கு இஸ்ரேல் படையினரே பொறுப்பு என பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்திருக்கிறார்.

ஷிரீன் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர் என்பது ஒருபுறம், இஸ்ரேல் நட்பு நாடு என்பது இன்னொரு புறம் என்பதால் அமெரிக்கா இவ்விஷயத்தில் மிகவும் கவனமாகக் கருத்து தெரிவித்திருக்கிறது. இஸ்ரேலுக்கான பாலஸ்தீனத் தூதர் டாம் நைட்ஸ், ‘அமெரிக்க – பாலஸ்தீன பத்திரிகையாளர் ஷிரீனின் மரணம் மிகுந்த துயரம் தருகிறது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று ட்வீட் செய்திருக்கிறார்.

error: Content is protected !!