இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கச் சொல்லி வற்புறுத்துகிறாரா, உங்கள் நண்பர் ? (அப்படியானா, இதப் படிங்க முதல்ல)

இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கச் சொல்லி வற்புறுத்துகிறாரா, உங்கள் நண்பர் ? (அப்படியானா, இதப் படிங்க முதல்ல)

பொருளாதார அடிப்படையில், நம் நாட்டில் குடும்பங்கள் நான்கு நிலைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

* முதல் நிலை :
அன்றாட வருமானத்தை நம்பி இருக்கும் குடும்பங்கள் (FAMILIES IN POVERTY ZONE)

* இரண்டாம் நிலை :
மாத சம்பளத்தை நம்பி இருக்கும் குடும்பங்கள் (FAMILIES IN NEED BASED ZONE)

* மூன்றாம் நிலை :
உயர் நடுத்தர வர்க்கத்தினர் (FAMILIES IN COMFORT ZONE)

* நான்காம் நிலை :
கோடீஸ்வரர்கள் (FAMILIES IN LUXURY ZONE)

பொருளாதார வெற்றி என்பது, நம்முடைய குடும்பப் பொருளாதாரத்தை ஒவ்வொரு நிலையாக உயர்த்திச் செல்வது தான். இந்தியப் பொருளாதாரம், சர்வதேச அளவில் வலுப்பெற்று வருகிறது. எனவே நம் நாட்டில், முதல் நிலையில் இருந்து நான்காம் நிலையை நோக்கி உயர்கிற குடும்பங்கள் ஏராளம். இருந்த போதிலும், எதிர்பாராத சில காரணங்களால், குடும்பங்கள் கீழே சரிகிற சம்பவங்களும் நடப்பதுண்டு.

இது போன்ற பாதிப்புக்கு அதிகம் உள்ளாகக் கூடிய குடும்பங்கள் எவை தெரியுமா?

ஒரே ஒரு வருமானதாரரை (SINGLE BREAD WINNER) மட்டுமே நம்பி இருக்கும் குடும்பங்கள் தான்! இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், ஒரே ஒரு வருமானதாரரை நம்பி இருக்கக்கூடிய குடும்பங்களில் – அவருக்கு கீழ்க்காணும் ஏதேனும் நான்கு சம்பவங்களில் ஒன்று நிகழ்ந்தால் கூட, குடும்பங்கள் கீழே விழத் தொடங்கி விடுவதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது.

1. இறப்பு (DEATH)
2. உடல் உறுப்புகளில் பாதிப்பு (DISABILITIES)
3. தீவிர நோய்கள் (DISEASES)
4. தொழிலில் நஷ்டம் / வேலை இழப்பு (BUSINESS LOSS / JOB LOSS)
இந்த நான்கு காரணிகளும் எதிர்பாராமல் நடக்கக் கூடியவை. நம் கட்டுப்பாட்டில் இல்லாதவை. இவற்றை நம்மால் தடுக்க இயலாது. என்றாலும் கூட, இவற்றினால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளால் நம் குடும்ப அந்தஸ்து கீழே சரியாமல் இருக்க, ஒரே வழி என்ன தெரியுமா ? இன்சூரன்ஸ் திட்டங்களில் முதலீடு செய்வது தான். இது மட்டுமே, ஒட்டுமொத்தப் பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும்.

இது எப்படி தீர்வு தரும் என்று பார்ப்பதற்கு முன்னால், இன்சூரன்ஸ் என்றால் என்ன ? அது எத்தனை வகைப்படும் ? என்று பார்ப்போம்.

இன்சூரன்ஸ் பொதுவில், மூன்று வகைப்படும்.

₹ லைஃப் இன்சூரன்ஸ் (LIFE INSURANCE) – சேமித்த தொகைக்கு தோராயமாக 5% முதல் 6% வரை வட்டியாகக் கிடைக்கும். இடையில் இறப்பு நேர்ந்தால் முழுக் காப்பீட்டுத் தொகையும் குடும்பத்திற்கு வழங்கப்படும். (இது போன்ற அம்சம், வேறு எந்த சேமிப்புத் திட்டத்திலும் கிடையாது).

₹ டேர்ம் பிளான் இன்சூரன்ஸ் (TERM PLAN INSURANCE) – வாகன இன்சூரன்ஸ் போன்று ஓராண்டுத் திட்டம் இது. அந்த ஆண்டில் இறப்பு நேர்ந்தால் முழு காப்பீட்டுத் தொகையும் குடும்பத்திற்குக் கிடைக்கும்.

₹ ஹெல்த் இன்சூரன்ஸ் (HEALTH INSURANCE) – இதுவும் ஓராண்டுக்கானது. தேவைப்படும் மருத்துவ சிகிச்சைகளுக்கு நிதி உதவி அளிக்கப்படும்.
மேற்காணும் நான்கு எதிர்பாராத சம்பவங்கள் நிகழும் போதும், இந்த மூன்று வகை இன்சூரன்ஸ் எப்படி உங்களுக்கு கைகொடுக்கும் ?

1. இறப்பு (DEATH) :
இறப்பினால் ஏற்படும் பொருளாதார இழப்பை ஈடுகட்ட, டேர்ம் இன்சூரன்ஸ் மற்றும் லைஃப் இன்சூரன்ஸ் தொகை குடும்பத்தாருக்கு முழுமையாக வழங்கப்படும். இதனால் கல்வி, திருமணம் போன்றவற்றை தடை இன்றி மேற்கொள்ள முடியும்.

2. உடல் உறுப்புகளில் பாதிப்பு (DISABILITIES) :
உடல் உறுப்புகளால் நம்முடைய ‘இயங்கும் தன்மை’ பாதிக்கப்படுகிற போது, ஹெல்த் இன்சூரன்ஸ், லைஃப் இன்சூரன்ஸ் போன்றவை நிதி ஆதாரத்தை வழங்கும்.

3. . தீவிர நோய்கள் (DISEASES) :
நோய்களால் நம்முடைய வருமானம் பாதிக்கப்படுவதோடு, செலவுகளும் எகிர்கிறபோது ஹெல்த் இன்சூரன்ஸ் கை கொடுக்கும்.

4. தொழிலில் நஷ்டம் / வேலை இழப்பு (BUSINESS LOSS / JOB LOSS) :
தொழிலில் பண இழப்பு, வேலை வாய்ப்பின்மை போன்றவை ஏற்படுகிற போது, லைஃப் இன்சூரன்ஸ் திட்டத்தில் நாம் சேமித்து வைத்திருந்த பணத்தின் ஒரு பகுதியை கடனாகப் பெற்றோ, அல்லது பாலிசி முடியும் தருவாயில் அதன் முதிர்வுத் தொகையைப் பெற்றோ நம்முடைய குடும்பத்தின் பொருளாதார நிலையைப் பாதுகாக்க முடியும்.

எனவே ‘ஒரு வருமானத்தை’ மட்டுமே நம்பி, குடும்ப வாழ்வாதாரம் இருக்கும் பட்சத்தில், இந்த மூன்று வகையான இன்சூரன்ஸ் திட்டங்களிலும், உடனே ஒரு சிறிய தொகையை முதலீடு செய்து வைத்துக் கொள்வது பாதுகாப்பானது. எந்த முடிவையும் தள்ளிப் போடலாம். ஆனால் காப்பீடு சார்ந்த முடியை மட்டும் உடனே எடுத்து விட வேண்டும். அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. யாராலும் உத்தரவாதமும் தர இயலாது.

எனவே, உங்களுக்கு நன்கு பரிச்சயமான, விவரமறிந்த காப்பீட்டு ஆலோசகரை அணுகுங்கள். உங்கள் பொருளாதார நிலையைப் பாதுகாக்க உடனடியாக செயல்படுங்கள். புரிந்து கொள்ளுங்கள்…. பொருளாதார நிலையில் கீழே விழும் குடும்பங்கள், மீண்டும் பழைய நிலையை எட்ட இரண்டு தலைமுறைகள் கூட ஆகலாம் என்கிறது அந்த ஆய்வு.

error: Content is protected !!