கள்ளக்குறிச்சி பள்ளியில் நடந்த வன்முறைச் சம்பவத்திற்குக் காரணம் இதுவா? – வீடியோக்கள்!

கள்ளக்குறிச்சி பள்ளியில் நடந்த வன்முறைச் சம்பவத்திற்குக் காரணம் இதுவா? – வீடியோக்கள்!

ள்ளக்குறிச்சி அருகே உள்ள கணியாமூர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி ஜூலை 13-ம் தேதி இரவு பள்ளியின் விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்துள்ளனர். மாணவியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சாலை மறியல் போன்ற போராட்டங்களிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 4வது நாளான இன்று அவர்களின் போராட்டம் வன்முறையாக மாறியது. போலீசாரை நோக்கி கற்களை வீசி அவர்கள் தாக்க தொடங்கினர். பதிலுக்கு போலீசாரும் கற்களை வீசி தாக்கியும் தடியடி நடத்தியும் அவர்களை கலைக்க முயன்றனர். இதற்கிடையே, மாணவி படித்த பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர்.

மேலும், பள்ளி பேருந்துகளுக்கு போராட்டகாரர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி வளாகத்தில் இருந்த 10 க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்துகள் தீவைத்து எரிக்கப்பட்டது. இதனிடையே, கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, கள்ளக்குறிச்சி தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். மேலும், சின்னசேலம், நயினார்பாளையம் பகுதியிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இச்சூழலில் கள்ளக்குறிச்சி பள்ளியில் நடந்த வன்முறைச் சம்பவத்திற்கு மாணவியின் தாயாரே காரணம் எனத் தனியார்ப் பள்ளியின் செயலாளர் பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில், “மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக காவல்துறை விசாரணைக்குப் பள்ளி நிர்வாகம் தரப்பில் முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும், இந்த விவகாரத்தில், எதனையும் மறைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், மாணவியின் தாயார் தங்களைச் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளதாகத் தெரிவித்த அவர், காவல்துறை விசாரணை வளையத்திற்குள் இருப்பதால் மாணவியின் தாயாரைச் சந்திக்கவில்லை எனக் கூறியுள்ள அவர், எங்கும் ஓடி ஒளியவில்லை, அப்படி இருக்க ஏன் வன்முறையைத் தூண்ட வேண்டும்? ஏன் பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து வீடியோவில் பேசியுள்ள அவர், தவறான இமேஜை பள்ளி மீது கொண்டு வந்துள்ளதாகவும், 1998-ஆம் ஆண்டில் தொடங்கிப் பல தடைகளைக் கடந்து ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குக் கல்வி கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பள்ளியின் வாகனங்கள் என்ன செய்தது? மாணவர்கள் படிப்பதற்காக வைத்திருந்த புத்தகங்கள் என்ன செய்தது எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், வகுப்பறைகளைப் பொருட்களைச் சூறையாடியுள்ளதாகவும், மாணவர்களின் சான்றிதழ்களை எரித்து நாசம் செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். எல்கேஜி முதல் 12-ஆம் வகுப்ப வரை படிக்கும் மாணவர்களின் ஆவணங்களை எரித்து விட்டதாகக் குற்றச்சாட்டு தெரிவித்துள்ள அவர், வன்முறையாளர்கள் பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை வீணடித்து விட்டதாகவும், இந்த வன்முறைக்கும் சேதத்திற்கும் மாணவியின் தாயார் தான் பொறுப்பேற்க வேண்டும் எனவும், அவர் தான் பதில் சொல்ல வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், மாணவியின் செல்போன் எண்ணையும், அவரது தாயாரின் செல்போன் எண்ணையும் ஆய்வு செய்யுங்கள். அப்போது உண்மை என்னவென்று தெரிய வரும் எனத் தெரிவித்துள்ள அவர், மாணவி இறப்பிற்கான காரணம் அதில் இருக்கிறது எனப் பள்ளியின் செயலாளர் சாந்தி ரவிக்குமார் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!