’இரவின் விழிகள்’ பட இசை & முன்னோட்ட வெளியீட்டு விழாத் துளிகள்~

’இரவின் விழிகள்’ பட இசை & முன்னோட்ட வெளியீட்டு விழாத் துளிகள்~

கேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரித்து, சிக்கல் ராஜேஷ் இயக்கியுள்ள திரைப்படம் ‘இரவின் விழிகள்’. இப்படத்தில் கதையின் நாயகனாக தயாரிப்பாளர் மகேந்திரனும், மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் சிக்கல் ராஜேஷும் நடித்துள்ளனர்.

கன்னடத்தில் வெளியான ‘பங்காரா’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நீமா ரே இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் சந்திரபாபு, கிளி இராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஏ.எம் அசார் இசையமைத்துள்ளார். பாஸ்கர் ஒளிப்பதிவு செய்ய, ‘விடுதலை’ படத்தொகுப்பாளர் ஆர்.ராமர் மற்றும் வெங்கடேஷ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளனர். சண்டைப் பயிற்சியை சரவெடி சரவணன் மற்றும் சூப்பர்குட் ஜீவாவும், நடனத்தை எல்கே ஆண்டனியும் வடிவமைத்துள்ளனர். பாடல்களை அரவிந்த் அக்ரம் எழுதியுள்ளார்.

இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் ஆர்.வி உதயகுமார், பேரரசு, மு.களஞ்சியம், போஸ் வெங்கட், நடிகை நமீதாவின் கணவர் வீரா, நடிகை கோமல் சர்மா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பேசியவர்கள்

இயக்குநர் சிக்கல் ராஜேஷ்:

இயக்குநர் பேசுகையில், “படத்தின் தயாரிப்பாளர் மகேந்திரன் என் நண்பர். நான் பலரிடம் கதையைச் சொல்வதைப் பார்த்து, நானே தயாரிக்கிறேன் என்று முன்வந்தார். முதல் கட்டப் படப்பிடிப்புக்குப் பிறகு சிக்கல்கள் எழுந்தாலும், கதை பிடித்திருந்ததால் பல சிரமங்களை ஏற்றுக்கொண்டு படத்தை முடித்தார். படத்தொகுப்பாளர் ராமர் படத்தைப் பார்த்துவிட்டு, இன்னும் இரண்டு பாடல்கள் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். வியாபாரம் மற்றும் தயாரிப்பாளர் நஷ்டப்படக் கூடாது என்பதற்காக, ஏற்கனவே எடுத்த திருப்தியில்லாத கிட்டத்தட்ட 12 நாள் காட்சிகளை நீக்கிவிட்டுப் புதிதாக எடுத்தோம். அந்த அளவுக்கு மகேந்திரன் ஒத்துழைப்பு கொடுத்தார்.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளும் கொடுமைகளும் தொடர்கின்றன. அதைக் கேட்கும்போது மனது அதிர்கிறது. அதன் விளைவுதான் இந்த ‘இரவின் விழிகள்’ திரைப்படம். இந்தச் சமூகத்துக்கு நான் என்ன சொல்ல வேண்டும் என நினைத்தேனோ, அதைத் தெளிவாகவும் தீர்க்கமாகவும் சொல்லி இருக்கிறேன்.

ஏ.எம் அசார் என் மனதில் இருந்ததை அழகான பாடல்களாகக் கொடுத்தார். ஏற்காடு பகுதியில் வாகனங்கள் கூடச் செல்ல முடியாத இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம். ஒரு சண்டைக் காட்சியில் எண்பது அடி உயரத்திற்குக் கம்பியில் கட்டித் தூக்கியபோது, சில நிமிடங்கள் அந்தரத்தில் தொங்கியது மிகவும் திகிலாக இருந்தது,” என்றார்.

நாயகி நீமா ரே:

கதாநாயகி நீமா ரே பேசுகையில், “இயக்குநர் ராஜேஷை ‘மிஸ்டர் பர்ஃபெக்‌ஷனிஸ்ட்’ என்று சொல்லலாம். தனக்கு எடுத்த சில காட்சிகளில் திருப்தி இல்லாவிட்டால் படப்பிடிப்பு முடிந்து இரண்டு வாரம் கழித்துக்கூட என்னை அழைத்து ரீ-ஷூட் செய்தார். பிறகு அவரைத் தொடர்புகொண்டபோது, ஹீரோவான தனது காட்சிகளே திருப்தியில்லாததால் மீண்டும் எடுப்பதற்காகப் போய்க்கொண்டிருப்பதாகச் சொன்னார். இப்படி ஒவ்வொன்றிலும் பர்ஃபெக்‌ஷன் பார்த்து பார்த்து ‘இரவின் விழிகள்’ படத்தை உருவாக்கி இருக்கிறார். படப்பிடிப்பு சமயத்தில் இயக்குநரைப் பார்க்கும்போது எல்லாம் ‘அந்நியன்’ படம் தான் ஞாபகத்திற்கு வரும். படப்பிடிப்புக்கு முன்பு அம்பி போலவும், ஆரம்பித்ததும் அந்நியன் போலவும் மாறிவிடுவார்,” என்று புகழ்ந்து தள்ளினார்.

தயாரிப்பாளரும் நாயகனுமான மகேந்திரன்:

மகேந்திரன் பேசுகையில், “வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் நடிப்பதற்காகத்தான் இயக்குநர் ராஜேஷ் என்னை அழைத்தார். ஆனால் கதையைக் கேட்டதும் நானே தயாரிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். அவர் ஹீரோவாக நடிக்கச் சொன்னதை நான் மறுத்தேன். நான் கஷ்டப்பட்டதை விட அவர் கஷ்டப்பட்டதுதான் அதிகம். சில காட்சிகளில் திருப்தி வரவில்லையென்றால் பத்து டேக் என்றாலும் விட மாட்டார். ஒரு நாள் காலை உணவு கூடச் சாப்பிட விடாமல் காட்சிகளை எடுத்துக்கொண்டிருந்தார். மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் விதமாகத்தான் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. ராஜேஷ் என்னிடம் இந்தக் கதையைச் சொன்னபோது ஒரு விதையாக விதைக்கப்பட்டிருந்தது. அதை நான் செடியாக மாற்றி இருக்கிறேன். அதை மரமாக்கி, அதில் உள்ள கருத்து என்கிற பழத்தைச் சாப்பிட உறுதுணையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

மற்ற கலைஞர்கள்:

  • சூப்பர் சிங்கர் புகழ் பாடகர் விஷ்ணு சரண் பேசுகையில், “இந்த படத்தில் நான் பாடிய பாடல் படத்தின் ஜானரைக் கொஞ்சம் ஸ்டைலாக வெளிப்படுத்தும். இசையமைப்பாளர் ஒரு பாடலைப் பாடி ரெக்கார்டிங் செய்யும் வரை உட்காரவே மாட்டார்,” என்றார்.
  • பாடலாசிரியர் அரவிந்த் அக்ரம் பேசுகையில், “இந்த படத்தில் ஐந்து பாடல்களை உருவாக்கியதில் எனக்கும் இயக்குநருக்கும் இசையமைப்பாளருக்கும் என ஐந்து விதமான பின்னணிக் கதைகள் இருக்கின்றன. என் பெயர் அக்ரம்… இசையமைப்பாளர் பெயர் அசார். ஆனால், நாங்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய முதல் பாடல் ‘வாடா கருப்பா..’,” என்றார்.
  • நடிகர் சிசர் மனோகர் பேசுகையில், “வெள்ளிமலை பகுதிக்கு படப்பிடிப்பிற்குச் சென்றோம். 25 நாட்கள் எடுக்க வேண்டிய காட்சிகளை 15 நாட்களில் எடுத்து முடித்தார். அந்த அளவுக்கு இயக்குநர் யாரையும் உட்கார விடாமல் பம்பரமாகச் சுழல்வார். இந்த காலத்தில் பெண்களுக்குத் தேவையான கருத்தைச் சொல்லும் விதமாக இந்தப்படம் உருவாகி இருக்கிறது,” என்றார்.

Related Posts

error: Content is protected !!