ஐபிஎல் கிரிக்கெட்: பெங்களூரு ஆர்சிபி அணி சாம்பியன்!

ஐபிஎல் கிரிக்கெட்: பெங்களூரு  ஆர்சிபி  அணி சாம்பியன்!

ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது. பரபரப்பான இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு அணி வெற்றி பெற்றது. . ஆர்சிபி அணி வெற்றி பெற்றதும் ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டனும், அந்த அணிக்காக 18 ஆண்டுகளாக ஆடி வரும் இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணி முதலில் பேட் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 190 ரன்கள் எடுத்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக பிலிப் சால்ட் மற்றும் விராட் கோலி இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். இருவர் மீதும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், 9 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் சால்ட். பஞ்சாப் அணியின் ஜேமிசன் பந்து வீச்சில் ஸ்ரேயஸ் எடுத்த அபார கேட்ச் மூலம் அவர் வெளியேற்றப்பட்டார்.

மயங்க் அகர்வால், 18 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். சஹல் வீசிய முதல் ஓவரில் அவர் விக்கெட்டை இழந்தார். ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் 16 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். பந்தில் வேகத்தை குறித்து ஜேமிசன் வீச, எல்பிடபிள்யூ முறையில் அவர் ஆட்டமிழந்தார். இன்னிங்ஸை நிதானமாக அணுகி 35 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த விராட் கோலியின் விக்கெட்டை அஸ்ம்துல்லா ஒமர்சாய் வீழ்த்தினார். 15 பந்துகளில் 25 ரன்கள் எடுத்த லிவிங்ஸ்டன்னை ஜேமிசன் எல்பிடபிள்யூ முறையில் வெளியேற்றினார். மறுபக்கம் அதிரடியாக இன்னிங்ஸை அணுகினார் ஜிதேஷ் சர்மா. 10 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். துரதிர்ஷ்டவசமாக ஷாட் ஆட முயன்று பந்து பேட்டில் பட்டு இன்ஸைட் எட்ஜ் முறையில் அவர் போல்ட் ஆனார். ஷெப்பர்ட் 17, க்ருணல் பாண்டியா 4, புவனேஸ்வர் 1 ரன்னில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது ஆர்சிபி. பஞ்சாப் தரப்பில் ஜேமிசன் மற்றும் அர்ஷ்தீப் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். அஸ்மதுல்லா, வைஷாக் விஜயகுமார் மற்றும் சஹல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

191 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. இதில் முதலில் இறங்கிய ப்ரியான்ஷ் ஆர்யா 24 ரன்களும், ப்ரம்சிம்ரன் சிங் 26 ரன்களும் எடுத்து வெளியேறினர். அடுத்து வந்த ஜோஷ் இங்லிஸ் 39 ரன்கள் எடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயஸ் ஐயர் ஒரே ஒரு ரன்னுடன் நடையை கட்டினார். நேஹால் வதேரா 15 ரன்கள் எடுத்தார். ஷஷாங்க் சிங் எடுத்த 61 ரன்கள் மட்டுமே பஞ்சாப் அணியின் நம்பிக்கையை கூட்டியது. எனினும் அடுத்தடுத்து விழுந்த விக்கெட்டுகளால் அந்த அணி பெரிதும் தடுமாறியது. 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் அணி 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதனை அந்த அணியின் வீரர்களும், ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

வெற்றிக்கு பிறகு விராட் கோலி மகிழ்ச்சியுடன் அளித்த பேட்டியில் “இந்த வெற்றி ரசிகர்களுக்கும், அணிக்குமானது. இது 18 நீண்ட ஆண்டுகள். இந்த அணிக்கு எனது இளமை, உற்சாகம் மற்றும் அனுபவத்தை நான் அளித்துள்ளேன். ஒவ்வொரு சீசனிலும் அதை வெல்ல முயற்சித்தேன், எனக்குக் கிடைத்த அனைத்தையும் கொடுத்தேன்” என்றார்

ஈஸ்வர் பிரசாந்த்

error: Content is protected !!