இந்தியாவில் இணையப் பயன்பாடு: நகர்ப்புறங்களைக் கடந்து கிராமப்புறங்களின் புரட்சி!

இந்தியாவில் இணையச் சேவை மக்கள் மத்தியில் ஊடுருவிப் பெரும் புரட்சியை ஏற்படுத்தினாலும், அதன் பயன்பாட்டில் பல கட்டமைப்பு மற்றும் தரம் சார்ந்த குறைபாடுகள் இன்றும் நீடிக்கின்றன. குறிப்பாக, தொலைதூர ஊரகப் பகுதிகளில் வேகமின்மை (Slow Speed), இணைப்புத் துண்டிப்பு (Frequent Disconnection), நம்பகத்தன்மை குறைதல் மற்றும் போதிய ஃபைபர் ஆப்டிக் (Fiber Optic) இணைப்புகள் இல்லாதது போன்ற பிரச்சனைகள் நீடிக்கின்றன. அத்துடன், அனைத்து மக்களுக்கும் இணையத்தைப் பயன்படுத்தும் திறன் (Digital Literacy) சீராக இல்லாததும் ஒரு தடையாக உள்ளது. ஆனாலும், இந்த சவால்கள் அனைத்தையும் கடந்து, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் உந்துதல் மற்றும் மலிவான ஸ்மார்ட்போன்களின் வருகை காரணமாக, இந்தியாவின் இணையப் பயன்பாட்டில் நாடு முழுவதும் நகர்ப்புறங்களை விட ஊரக பகுதிகளில் இணைய சேவையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம்.. ‘இன்டர்நெட் அண்டு மொபைல் அசோசியேஷன் ஆப் இண்டியா’ (IAMAI) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, நாட்டில் இணைய சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
1. ஊரகப் பகுதிகளின் ஆதிக்கம்:
நகர்ப்புறங்களை விட, ஊரகப் பகுதிகளில் இணைய சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தற்போது அதிகமாக உள்ளது என்பது இந்த அறிக்கையின் மிக முக்கியமான தரவு ஆகும்.
- தற்போதைய நிலை: நகர்ப் புறங்களில் தற்போது 39.7 கோடி பேரும், ஊரகங்களில் 48 கோடி பேரும் இணையச் சேவையைப் பயன்படுத்துகின்றனர்.
2. 2030-ஆம் ஆண்டுக்கான கணிப்பு:
இந்த வளர்ச்சி அடுத்த தசாப்தத்திலும் நீடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
- நகர்ப்புறம் (2030): இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை 54 கோடியாக அதிகரிக்கும்.
- ஊரகம் (2030): இந்த எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து, 70 கோடியாக உயரும்.
3. ஒட்டுமொத்தப் பயனாளர்களின் வளர்ச்சி:
- கடந்தாண்டு (2024): இந்தியாவில் இணைய சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 88 கோடியாக இருந்தது.
- 2030 கணிப்பு: இது 120 கோடியாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இது மொத்தமாக 35 சதவீதம் அதிகரிப்பைக் குறிக்கிறது.
4. ஸ்மார்ட்போன் பயன்பாடும் அதன் தாக்கமும்:
இணைய சேவை இந்த அளவிற்கு மக்களிடையே ஊடுருவ முக்கியக் காரணம், ஸ்மார்ட்போன்களின் எளிதான பயன்பாடே என அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
- கடந்தாண்டு (2024): இந்தியாவில் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 100 கோடிக்கும் அதிகமாக இருந்தது.
- 2030 கணிப்பு: ஸ்மார்ட்போன் பயன்பாடு 50 சதவீதம் அதிகரித்து, 150 கோடியாக உயரும்.
5. பாலின ரீதியான பயன்பாடு:
இணைய சேவையைப் பயன்படுத்துபவர்களில் பாலின வேறுபாடு காணப்படுகிறது:
- ஆண்கள்: 47 கோடி பேர்
- பெண்கள்: 41 கோடி பேர்
மொத்தத்தில் ஒட்டுமொத்தமாக, இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சி நகர்ப்புற மையங்களில் இருந்து ஊரகப் பகுதிகளை நோக்கித் திரும்பி இருப்பதை இந்த IAMAI அறிக்கை தெளிவுபடுத்துகிறது. தொழில்நுட்பக் குறைபாடுகள் நிலவினாலும், மலிவான ஸ்மார்ட்போன்கள் மற்றும் இணைய இணைப்பு ஆகியவை நாட்டின் ஊரகப் பொருளாதாரத்தையும், சமூக ஊடுருவலையும் ஊக்குவிக்கும் முக்கியச் சக்திகளாக உருவெடுத்துள்ளன.