சர்வதேச பேச்சுத்திறன் குறைபாடு நோய் விழிப்புணர்வு தினம்!

சர்வதேச பேச்சுத்திறன் குறைபாடு நோய் விழிப்புணர்வு தினம்!

வ்வொரு வருடமும் அக்டோபர் 22-ஆம் தேதி ‘ஸ்டட்டரிங்’ எனப்படும் பேச்சுத்திறன் குறைபாடு நோய் விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

‘மூணு மாதக் குழந்தை அ, உ என்று சத்தம் எழுப்பவேண்டும். இதற்கு கூயிங் (Cooing) னு பெயர். அர்த்தமே இருக்காது. முகத்தைப் பார்த்துச் சிரிக்கவேண்டும்… ‘என்னடா செல்லம்…’ என்று சொன்னால், சிரித்தபடியே… ‘ம்….. ம்…’ என்று சொல்லவேண்டும்.

ஆறு மாதத்தில் வார்த்தைகள் இல்லாத மா, கா,(Monosyllable)என்று ஒலி எழுப்பவேண்டும்.

8-வது மாதத்தில்… கொஞ்சம் வித்தியாசமாக… ‘ங்க… த… த…’ என்று சொல்ல வேண்டும்.

9-வது மாதத்தில் மாமா, தாதா (Bi Syllable) என்று சொல்ல ஆரம்பிக்கும்.

ஒரு வயதில் அம்மா, அத்தை, அப்பா, பாட்டி என்று கூப்பிட வேண்டும்.

ஒன்றரை வயதில் குழந்தைக்கு எட்டு முதல் பத்து வார்த்தைகள் தெரியவேண்டும். இரண்டு வயதில் ‘அம்மா மம்மு, அப்பா தண்ணி, அக்கா உச்சா வருது’ போன்று பேச வேண்டும். மூன்றில் இருந்து நான்கு வயதுக்குள் 5, 6 வாக்கியத்தை சேர்த்து பேச தெரியவேண்டும். இதுதான்… குழந்தையின் பேச்சு வளர்ச்சிக்கான நிலைகள்.

ஒன்றரை வயது வரைக்கும் இதுபோல் பேசாமல் போனால், கண்டிப்பாக பேச்சுப் பயிற்சியைத் தந்தே ஆகவேண்டும் என்ற சிந்தனையை நினைவூட்டவே இத்தினம்!


இதை கொஞ்சம் விரிவாக சொல்வதானால்..

மொழியை கூழாங்கற்களாக்கி, கொஞ்சும் வடிவத்தில் மனசு முழுவதும் எச்சில் படிய நுழையும் மழலையருவியில் நனைவதற்காகவே அவர்களைப் பேச வைத்து காது கொடுக்கலாம். ‘பெண் குழந்தை சீக்கிரம் பேசிவிடும்… ஆண் குழந்தை மெதுவாகத்தான் பேசும்’ என்பது பொதுவான நம்பிக்கை. இரண்டு வயது வரை கூட குழந்தையால் பேச முடியவில்லை என்றால் மருத்துவரின் உதவியை நாட வேண்டும்.

குழந்தைகளின் பேச்சு எந்த நிலையிலும் நம்மை ரசிக்க வைக்கும். போனவாரம் சொன்னதுபோல சில குழந்தைகள் மெதுவாகப் பேச ஆரம்பிக்கும். ஆனால் குழந்தை பிறந்ததிலிருந்து பெற்றோர் குழந்தைகளின் பேச்சுத் திறன் பற்றியும் அக்கறை கொள்ள வேண்டும்.

நாம் பேசுவதைக் கேட்டுக்கேட்டுத்தான் குழந்தைகள் பேசக் கற்கிறார்கள். அதனால் குழந்தையுடன் அதிகம் பேசுங்கள். சின்ன சின்ன விஷயங்களைக் கூட அதனுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். ‘இன்னிக்கு என்ன சமையல் செய்யலாம்?’ ‘உனக்கு புடலங்காய் பிடிக்குமா?’ ‘அம்மாவுக்கு இந்தப் புடவை/சூடிதார் நன்னா இருக்கா?’ ‘ இன்னிக்கு அம்மாவுக்கு சமையல் செய்யவே பிடிக்கல, ராத்திரி அப்பா வந்தவுடன் ் அவுட்டிங்) போகலாமா?’ என்று நீங்கள் மனதில் நினைப்பதையெல்லாம் குழந்தையிடத்தில் சொல்லுங்கள்.

பெற்றோர் எப்போது தங்கள் குழந்தைகளின் பேச்சுத் திறன் பற்றி கவலை கொள்ள வேண்டும்? பொதுவாக குழந்தைகளின் பேச்சுத் திறனில் சில மைல்கல்களை அறிந்து கொள்வது நல்லது.

மூன்றாம் மாதம்:

சத்தங்களைக் கேட்டால் மிரண்டு, தூக்கிவாரிப் போடும்; அழும். கையில் எடுத்து வைத்துக் கொண்டு வாயால் பேசி சமாதானப்படுத்தினால் அழுகை நிற்கும். அழும்போது தொண்டையில் எச்சில் சேர்ந்து ‘களகள’ சத்தம் உண்டாக்கும். ‘குர் குர்’ என்று மெல்லிய சத்தம் உண்டாக்கும்.

ஆறாம் மாதம்:

நீங்கள் பேசும்போது உங்களையே பார்த்துக்கொண்டு தானும் பேச முயலுவதைப் போல ‘ங்….ங்…’ என்று குரல் எழுப்பும்.

ஒரு வயது:

பொதுவான சில வார்த்தைகளை புரிந்து கொள்ளும். ‘வா..’ , ‘உட்காரு…’ ‘டாட்டா…’ சொல்லு போன்றவைகளைப் புரிந்து கொண்டு அதேபோல செய்யும். ‘மா….மா….. த்தை…..ப்பா’ போன்ற இரண்டெழுத்துச் சொற்களைச் சொல்லும்.

ஒருவயது கடந்த பின்:

பல்வேறு வகையான வார்த்தைகளைப் புரிந்து கொள்ளும். ‘பாப்பாவோட கண்ணு எங்கே? பாப்பாவோட சின்ன மூக்கு எங்கே?’ என்ற கொள்விகளைப் புரிந்து கொள்ண்டு காண்பிக்க ஆரம்பிக்கும். தானாகப் பேசுவதை விட அதிக வார்த்தைகளைப் புரிந்து கொள்ளும். புத்தகங்களில் பார்க்கும் பொருட்களை நேரில் பார்த்தால் சந்தோஷத்துடன் காண்பிக்கும். ஒரு விரல், அல்லது தலை ஆட்டுவதன் மூலம் சொல்லவந்ததை நமக்குப் புரிய வைக்கும்.

இரண்டு வயதுக்கு மேல்:

‘பாப்பாவோட சீப்பு கொண்டா’, பாப்பாவோட ஷர்ட் கொண்டா’ என்றெல்லாம் சொன்னால் புரிந்து கொண்டு, எடுத்துக் கொண்டு வரும். இரண்டு வயதுக் குழந்தையின் அகராதியில் 300 சொற்கள் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள்.

மூன்று வயது:

‘குளிக்கலாமா?’ என்றால் ‘வேண்டாம்’ தலையை ஆட்டிக்கொண்டு வாயால் சொல்லும். சைகையும் செயலும் ஒன்றுபடும் நேரமிது. குழந்தையின் அகராதியில் இப்போது 900 வார்த்தைகள் சேர்ந்திருக்கும். குழந்தையால் 200 வார்த்தைகளை பயன்படுத்தி பேசமுடியும்.

நான்கு வயது:

நீளமான சொற்றொடர் புரியும். ‘குளிச்சுட்டு, புது சொக்கா போட்டுண்டு வெளில போலாமா?’ என்றால் குஷியாகக் குளிக்கப் போகும்.

பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

மேற்சொன்ன மைல்கற்கள் எல்லாம் முன்னேபின்னே நடந்தால் கவலைப்பட வேண்டாம். ஒரு சின்ன விஷயத்தை நினைவில் வைத்துக் கொண்டால் உங்கள் குழந்தையின் பேச்சுத்திறன் பற்றிக் கவலைப்பட வேண்டாம். இரண்டு மூன்று மாதக் குழந்தையாக இருக்கும்போதே சத்தங்களை தெரிந்து கொள்ளுகிறதா என்று பரிசோதனை செய்யுங்கள். உங்கள் குடும்பத்தில் யாருக்காவது பேச்சு சரியாக வரவில்லை என்றால் அதை குழந்தை பிறக்கும் முன்பே மருத்துவரிடம் சொல்லுங்கள். அதேபோல காது சரியாக கேட்காத குறை யாருக்காவது இருந்தால் அதையும் மருத்துவரிடம் சொல்லுங்கள். குழந்தை பிறந்தவுடனே குழந்தையின் கேட்கும் திறனை சோதிக்க தற்போது நிறைய பரிசோதனைகள் இருக்கின்றன. அவற்றை செய்வதன் மூலம் குழந்தையின் பேசும் திறனை அதிகரிக்கலாம்.

ஒருவேளை பரிசோதனையில் குழந்தைக்கு காது கேட்காத குறை இருந்தாலும் கவலைப்படவேண்டாம். தற்சமயம் மருத்துவத் துறையில் நிறைய முன்னேற்றங்கள். எந்தக் குறையானாலும் நிவர்த்தி செய்யலாம்.

International Stuttering Awareness day, 22 October. Lips symbol with speech bubble and stethoscope on a blue background. Greeting message concept.

காது கேட்கும் திறனும், பேச்சுத் திறனும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டது. சத்தங்களைக் கேட்டு குழந்தை அழும்போது நீங்கள் சமாதானப்படுத்தினால், அதான் அழுகை நின்றால், உங்கள் பேச்சு அதற்குக் கேட்கிறது என்று அர்த்தம். சற்றுத் தொலைவில் நின்று கொண்டு கிலுகிலுப்பையை சத்தம் செய்யுங்கள். குழந்தை சத்தம் வரும் திசையில் திரும்பிப் பார்த்தால் காது கேட்கிறது என்று பொருள்.

குழந்தை பேச முயற்சிக்கும்போது நீங்கள் குறுக்கே விழுந்து வார்த்தைகளைச் சொல்லிக் கொடுக்காதீர்கள். குழந்தையை சுதந்திரமாகப் பேச விடுங்கள். சில வார்த்தைகள் வரவில்லை என்றால் கேலி செய்யாதீர்கள். அதுபோலவே குழந்தை மழலையில் பேசட்டும். நீங்களும் அப்படியே பேசாதீர்கள். நீங்கள் சரியான உச்சரிப்பில் பேசினால் குழந்தையும் சரியாக பேசும்.

பேச்சுக் குறைபாடு பற்றி ..‘‘இரண்டு முதல் மூன்று வயது வரை குழந்தைகளின் பேச்சுத்திறன் படிப்படியாக மேம்படும். அழுகை, குழந்தைகளின் முதல் மொழி. ங்காவில் தொடங்கி ‘ப்பா’, ‘ம்மா’, ‘த்தை’ என தத்தித் தத்தி ஒரு வயதில் ஒற்றை வார்த்தைகளுக்குத் தாவும். இரண்டு வயதில் அர்த்தம் உள்ள இரண்டு வார்த்தைகளை அமைத்து தனக்குப் பிடித்தது போலப் பேசும். குழந்தையின் பேச்சு என்பது காது கேட்கும் திறன், பேச்சுத்திறன் மற்றும் மொழித்திறன் ஆகிய மூன்றின் தொடர்ச்சியாகும். இவை மூன்றும்தான் குழந்தையின் பேச்சைத் தீர்மானிக்கின்றன.

பேச்சுத்திறனில் குறைபாடு இருந்தாலும் 4 வயதில்தான் பெற்றோர் மருத்துவரிடம் வருகின்றனர். ஆரம்பத்திலேயே இந்தப் பிரச்னையைக் கண்டறிவது அவசியம். குழந்தைக்கு காது கேட்கும் திறன் குறைவாக இருக்கும் போது அதனால் பேச முடியாது. பிறந்த குழந்தையின் செவித்திறனை பரிசோதிப்பதற்கான நவீன கருவிகள் வந்து விட்டன. குழந்தை பேச தாமதிக்கும்போது அதன் செவித்திறனை உடனடியாக சோதித்து பாதிக்கப்பட்டிருப்பின் ஹியரிங் எய்ட் பொருத்தி பிரச்னைக்குத் தீர்வு காணலாம்.

இதன் மூலம் குழந்தை ஒலியைக் கேட்டுக் கேட்டு, மொழி பயன்பாட்டின் மூலம் பேச்சுத்திறனை வெளிக் கொண்டு வரும். குழந்தை பிறந்த 3 மாதங்களுக்கு மேல் சுற்றி கேட்கும் சப்தங்களின் எதிர்வினையாக திரும்பிப் பார்த்தல், சத்தம் எழுப்புதல் போன்ற செயல்பாடுகள் இல்லாவிட்டால் உடனடியாகப் பரிசோதிக்கலாம். 2 வயது வரை கூட காத்திருக்கக் கூடாது. கர்ப்பமாக இருக்கும்போது தாய் கீழே விழுந்து அடிபடுதல், சத்துக்குறைபாடு, உடல்ரீதியான பிரச்னைகள், அதிகம் டிவி பார்ப்பதால் குழந்தைகள் பேசுவதற்கான வாய்ப்புக் குறைதல், பரம்பரைக் காரணங்கள், பிறக்கும்போது ஏற்படும் ஆக்சிஜன் குறைபாடு ஆகியவற்றால் குழந்தையின் பேச்சுத்திறன் பாதிக்கப்படலாம்.

பிறக்கும் போது ஃபிட்ஸ் வருதல், அதிகபட்ச காய்ச்சல் போன்ற உடல்நலக் குறைபாடுகளாலும் பேச்சுப் பிரச்னை உண்டாகலாம். சில குழந்தைகளுக்கு திக்குவாய் பிரச்னையும் இருக்கும். குழந்தைகளுக்கு உணவு கொடுப்பது மட்டுமே தாயின் வேலை இல்லை. அவர்களது வளர்ச்சி சரியாக உள்ளதா என்பதையும் கண்காணிக்க வேண்டும். ஏதாவது ஒரு விஷயத்தில் மாற்றம் காணப்பட்டாலும் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை அவசியம்.
காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றில் ஏதாவது பிரச்னை இருந்தாலும் பேச்சுத்தடை உண்டாகலாம்.

குழந்தைகளின் பேச்சுத் திறனுக்கும் மூளை வளர்ச்சிக்கும் தொடர்பு உண்டு. குழந்தையின் வயதுக்கு ஏற்ப காது கேட்கும் திறன், பேச்சுத் திறன், மொழித்திறன் ஆகிய மூன்றையும் தகுந்த நிபுணரிடம் மதிப்பீடு செய்து குறைபாட்டை தீர்மானிக்க வேண்டும். ஈ.என்.டி மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகு, பேச்சுப்பயிற்சி நிபுணரை அணுக வேண்டும். அவர், பிரச்னையின் தன்மைக்கு ஏற்றபடி பயிற்சி வழங்குவார்.

மூளைக்காய்ச்சல், கடினமான பிரசவம் போன்ற காரணங்களாலும் காது கேளாமை ஏற்படலாம். இதனால் பேச்சுத் தடைபடவும் வாய்ப்பிருக்கிறது. காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதால் அடிக்கடி சளி, காய்ச்சல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தொடர் சளியின் காரணமாக காதில் சீழ் ஏற்பட்டு, நோய் தொற்றினால் காது கேட்கும் திறனை இழக்கவும் வாய்ப்பிருக்கிறது. காதில் ஏற்படும் நோய் தொற்றை கவனிக்காமல் விட்டால், அது மூளைக்கும் பரவும். அதனால், காதில் சீழ் வடிந்தால் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும்.

பெரிய குறைபாடுகள் எதுவும் இல்லாமல், பேச வாய்ப்பு மறுக்கப்பட்டாலும் இது போன்ற பிரச்னைகள் உண்டாகலாம். சிறு வயதில் நாம் வாங்கிக் கொடுக்கும் விலை உயர்ந்த பொருட்களையும், அறிவார்ந்த விஷயங்களையும் விட குழந்தைகளுக்குத் தேவை பெற்றோரின் அரவணைப்பும் அருகாமையும்தான். பெற்றோர் வேலைக்குப் போகும் சூழல் இருந்தாலும், ஒரு மணி நேரமாவது குழந்தையுடன் செலவிட வேண்டும். அவர்களுடன் பேசுவதும், அவர்களை பேச விட்டுக் கேட்பதுமாக அந்த நேரத்தை முழுக்க குழந்தைகளுக்காக மட்டுமே செலவிட வேண்டும். கணினியில் வேலை பார்ப்பது, செல்போனில் பேசிக்கொண்டிருப்பது போன்றவற்றை அப்போது தவிர்க்க வேண்டும்.

2 வயதில் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதால், அவர்கள் பள்ளிக்குச் செல்லும்போது படிப்பில் சிக்கல் உண்டாகிறது. இரண்டரை வயதில் ‘ப்ரீ ஸ்கூல்’ செல்லும் குழந்தை, அங்கு சொல்லப்படும் பாடல், ரைம்ஸ் போன்றவற்றை சொல்லத் தெரியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகும். மற்ற குழந்தைகளுடன் பேசுவதிலும் குழந்தைக்குச் சிக்கல் ஏற்படும். பள்ளியிலும் குழந்தையின் செயல்பாடுகள் குறித்துத் அறிந்துகொள்ள வேண்டும். இதன் மூலமும் பேசுவதில் இருக்கும் சிக்கலைக் கண்டறிய முடியும்.

பேச்சுக் குறைபாட்டின் காரணமாக குழந்தைகள் பல்வேறு மனச்சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள். நார்மலான ஐக்யூ இருக்கும். ஆனால், பேச்சுப் பிரச்னையினால் மற்ற குழந்தைகளுடன் சகஜமாக விளையாட முடியாமல் தவிப்பார்கள். இதனால் மனச்சோர்வு உண்டாகும். படிப்பு பாதிக்கப்படும். அன்றாட விஷயங்களில் அடம் அதிகரிக்கும். குழந்தைகளின் சுயமதிப்பீடு பாதிக்கப்படும். அவர்களது தன்னம்பிக்கையைத் தகர்க்கும் இப்பிரச்னைகளை உடனடியாக கவனம் எடுத்து சரிசெய்தாக வேண்டும்.

பேச்சுக் குறைபாடு 2 வயதில் கண்டறியப்பட்டால், உடனே மொழிப் பயிற்சி அளித்து பிறகு பேச்சுப் பயிற்சி கொடுக்க முடியும். விரைவில் குறைபாட்டை சரி செய்யவும் முடியும். ஆனால், பலர் அறியாமை யால் 5 வயதில்தான் குழந்தையை மருத்துவரிடம் கொண்டு வருகிறார்கள். அப்போது குழந்தையின் பேச்சு வளர்ச்சி ஒரு வயது அளவுக்குத்தான் இருக்கும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பயிற்சி கொடுத்து அவர்களை சாதாரண நிலைக்குக் கொண்டு வர அதிக காலம் தேவை.

பேச்சுத்திறன் என்பது மூளையுடன் தொடர்புடையது. மூளை வளர்ச்சிக் குறைபாட்டின் காரணமாகவும் கூட பேச்சு தாமதப்படலாம். எனவே, குறிப்பிட்ட காலத்தில் குழந்தையின் பிரச்னையை மிகச் சரியாக கண்டறிந்து சிகிச்சை செய்வதன் மூலம் நல்ல பலனைப் பெற முடியும்…’’

Related Posts

error: Content is protected !!