பார்கின்சன் எனப்படும் உலக நடுக்குவாத தினம்!

பார்கின்சன் எனப்படும் உலக நடுக்குவாத தினம்!

டுக்குவாதம் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவே உலக பார்கின்சன் நோய் தினம் உலகம் முழுவதும் ஏப்ரல் 11 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. நடுக்குவாதம் அல்லது பார்கின்சன் நோய் (Parkinsons disease) அல்லது பீ.டி என்பது மைய நரம்பு மண்டலத்தைச் சிதைக்கின்ற ஒரு நோய். மூளையில் Dopamine என்கிற ரசாயன குறைபாட்டால் இது ஏற்படுகிறது. பொதுவாக 40 முதல் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் இந்த நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஜேம்ஸ் பார்கின்சன் என்பவர்தான் இந்த நோயை 1817ஆம் ஆண்டு கண்டறிந்தார் அவரது பெயராலேயே பார்க்கின்ஸன் நோய் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

நடுக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அன்றாடம் செய்யக்கூடிய வேலையிலேயே அதன் அறிகுறிகளை உணர முடியும். எந்த ஒரு பொருளையும் கையால் சரியாக பிடிக்க முடியாமல் போவது, ஒரு கப் தண்ணீரையோ, டீ கப்புகளை கூட கைகளில் பிடிக்க முடியாமல் நடுங்குவது, தங்களுடைய பல்வேறு அத்தியாவசிய வேலைகளைக் கூட செய்ய முடியாமல் தங்கள் தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் தவிக்கிற பல முதியவர்களை நாம் பார்த்திருப்போம். பர்க்கின்சன் உண்டானவர்களுக்கு அவர்களது இயல்பான வேகத்தில் தொய்வு ஏற்படும். மயக்கம், நடுக்கம் ஏற்படும். நடக்கும்போதும், உட்கார்ந்து எழும் போதும் தள்ளாடுவார்கள். சாதாரணமாக அமர்ந்து இருக்கும்போதேகூட கை, கால்கள், உதடுகள் நடுங்கும்.

முதுமையில் எதிர்கொள்ளும் நோய்களில் ‘உதறுவாதம்’ எனும் ‘பார்க்கின்சன் நோய்’ (Parkinson’s disease) பாதிப்பது இப்போது அதிகரித்திருக்கிறது. அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களில் 100இல் ஒருவருக்கு இந்த நோய் இருக்கிறது. அழுத்தங்கள் நிறைந்த – உடற்பயிற்சிகள் குறைந்த – இன்றைய நவீன வாழ்வில் சிலருக்கு நடுத்தர வயதிலும் இது தொடங்கிவிடுகிறது. பெரும்பாலும் ஆண்களிடம்தான் இந்தப் பாதிப்பு அதிகம்.

பார்க்கின்சன் நோய் வருவதற்கான உண்மையான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. மரபுப் பண்பும், தொழிற்சாலைக் கழிவுகளும், மாசுபட்ட சுற்றுச்சூழல் தரும் கேடுகளும் இணைந்து இந்த நோயை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது. சில பூச்சிக்கொல்லிகளின் அதீத பயன்பாட்டுக்கும் இந்த நோய்க்கும் தொடர்பிருப்பது அறியப்பட்டுள்ளது. சிறுவயதிலிருந்தே அவ்வளவாகக் காய்கறி களையோ பழங்களையோ உண்ணும் பழக்கம் இல்லாதவர்களுக்கு முதுமையில் இந்த நோய் வருவதற்கு அதிக சாத்தியம் உள்ளது.

மின் ஆற்றலை இழந்துபோன பேட்டரி போன்று மூளை நரம்பணுக்களில் ‘டோபமின்’ (Dopamine) எனும் வேதிப்பொருள் சுரப்பது குறைந்துவிடும்போது, உடலில் தசை இயக்கங்கள் பாதிக்கப்படும். அவற்றின் விளைவாக வருவதுதான் ‘பார்க்கின்சன் நோய்’. பெரும்பாலும் ‘டோபமின்’ சுரப்பு 80% குறைந்த பிறகே இந்த நோயின் அறிகுறிகள் வெளிப்படும்.

நடுக்குவாத நோய் வந்தவர்களுக்கு மூளைதான் அதிகமாக பாதிக்கப்படும். இதன் காரணமாக உட்கார்ந்து எழும்போது முன்புறம் அல்லது பின்பக்கம் விழுவதுபோல் எழுவர். 60 வயதை தாண்டும்போது வழக்கத்திற்கு மாறாக மெதுவாக முதியவர்கள் தங்களுடைய வேலைகளை செய்வார்கள். நடுக்கம், பேச்சில் தடுமாற்றம், உட்கார்ந்து எழும்போது தவறி விழுவது போன்ற மாற்றங்கள் ஏற்படும். பாதிப்படைந்த கையால் வேலை செய்யும்போது நடுக்கம் குறையும். மனச் சோர்வு, கோபம் ஏற்படும்போது நடுக்கம் அதிகரிக்கும். இதெல்லாம் நடுக்குவாத நோயின் அறிகுறிகளாகும்.

கைகளில் ஏற்படும் நடுக்கம்தான் பார்க்கின்சன் நோயை வெளிக்காட்டும் முக்கிய அறிகுறி. இந்த நோயாளிகள் ஆரம்பத்தில் உள்ளங்கைக்குள் ஏதோ ஒரு பொருளை வைத்துக்கொண்டு எப்போதும் உருட்டிக்கொண்டு இருப்பதுபோல் செய்து கொண்டிருப்பார்கள். பிறகு கை விரல்கள் ஆடிக்கொண்டே இருக்கும். இந்த நடுக்கம் கொஞ்சம்கொஞ்சமாகக் காலுக்கும் தலைக்கும் பரவும்.

விநோதம் என்னவென்றால், ஓய்வாக இருக்கும்போதுதான் இந்த நடுக்கம் காணப்படும். ஏதாவது ஒரு வேலை செய்யத் தொடங்கிவிட்டால், நடுக்கம் நின்றுவிடும். உறக்கத்தில் நடுக்கம் இருக்காது. நடுக்கம் நாக்கையும் பாதிக்கும்போது பேச்சில் வேறுபாடு தெரியும். முணுமுணுப்பதுபோல் பேசுவார்கள். அந்தப் பேச்சு மற்றவர்களுக்குப் புரியவும் செய்யாது. கைகுலுக்குவதற்கும் கையெழுத்துப் போடுவதற்கும் சிரமப்பட வேண்டியிருக்கும்.

அடுத்ததாக, வாசனையை உணரமுடியாது. தசைகள் இறுகிவிடும். உடலியக்கங்கள் குறை யும். உதாரணமாக, ஓரிடத்தில் உட்கார்ந்தால், மணிக்கணக்கில் எந்தவித அசைவும் இல்லாமல் உட்கார்ந்திருப்பார்கள். நிற்க வைத்தாலும் நின்றுகொண்டே இருப்பார்கள். எழுந்து நிற்கும்போதும் நடக்கும்போதும் தள்ளாடு வார்கள். படுக்கையைவிட்டு எழும்போது குறு மயக்கம் ஏற்படும். அடிக்கடி விழுந்துவிடுவார்கள்.

செய்யும் வேலையைத் திடீரென்று பாதியில் நிறுத்திக்கொள்வார்கள். உண்ணும்போது, உடை உடுத்தும்போது, பொத்தான் மாட்டும்போது இம்மாதிரி நடக்கும். எப்போதும் எதையோ யோசித்துக்கொண்டிருப்பதுபோல் முகத்தில் எந்தவிதச் சலனமின்றி இருப்பார்கள். எதிலும் பற்றில்லாமல் இருப்பார்கள். எதிர்காலத்தை நினைத்துப் பயந்து, மனச்சோர்வுக்கு உள்ளாவார்கள். மன அழுத்தம் அதிகரிக்கும்.

உணவை விழுங்குவதற்குச் சிரமப்படுவார்கள். சாப்பிடும் நேரம் நீளும். சாப்பிடும்போது இருமல் இடைஞ்சலை ஏற்படுத்தும். சாப்பிடும் உணவின் அளவும் குறையும். உடல் எடை குறையும். மலச்சிக்கல் ஏற்படும்.

கழிப்பறை போவது, குளிப்பது, உடை உடுத்துவது, ‘ஏ.டி.எம்.’மில் பணம் எடுப்பது உள்ளிட்ட ஏற்கெனவே பழக்கப்பட்ட வேலைகளைக்கூடச் செய்யமுடியாமல் திணறுவார் கள். அடுத்தவர்களின் உதவி யைத் தேடுவார்கள். ஞாபக மறதி கைகோக்கும். இரவில் காலை ஆட்டிக்கொண்டே இருப்பார்கள். கால் வலிக்கும். பாலுறவு பாதிக்கப்படும். சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்படும். இரவில் அடிக்கடி சிறுநீர் போகத் தோன்றும். இதனால் உறக்கம் மட்டுப்படும். பகலில் சோர்வாக இருப்பார்கள்.

தமிழ்நாட்டில் நடுக்குவாத நோயின் தாக்கம் இப்போது அதிகமாக இருக்கிறது. நரம்பு சம்பந்தப்பட்ட நோய் அறிகுறிகளோடு 10 நோயாளிகள் ஒரு நாளைக்கு அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். அவர்களில் 2 பேர் நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். நடுக்குவாதம் பற்றிய விழிப்புணர்வு மேலை நாடுகளில் 18-ம் நூற்றாண்டிலேயே ஏற்பட்டுவிட்டது. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை இன்னும் பலருக்கு நடுக்குவாதம் பற்றி தெரியவில்லை.

நடுக்குவாதம் என்பது நீரிழிவு, ரத்த அழுத்தம் போல வாழ்நாள் முழுவதும் சிகிச்சையும், கவனிப்பும் தேவைப்படும் நோயாகும். எனவே, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்தைத் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். அப்போதுதான் இயல்பான வாழ்க்கையை மேற்கொள்ள முடியும். மருந்து உட்கொள்வதைத் தவிர்த்தால் நோயின் தீவிரம் அதிகரிக்கும்.

நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களை வெளி இடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது அவர்கள் மேல் முக்கிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அதனால் திருவிழாக்கள், இல்லத்தில் நடைபெறும் விசேஷங்கள் போன்றவற்றில் அவர்களைத் தவிர்க்கக் கூடாது. நடுக்குவாதம் உள்ளவர்கள் வெளியூர்களுக்கு பயணம் செய்ய வேண்டி இருந்தால், அவர்களைப் பாதுகாப்பாக கூடுதல் கவனம் எடுத்து அழைத்துச் செல்ல வேண்டும்.

முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பார்க்கின்சன் நோயைப் பொறுத்தவரை எல்லோருக்குமான பொதுவான சிகிச்சை பலன் தருவதில்லை. ஒருவருக்குப் பலன் தரும் சிகிச்சை அடுத்தவருக்குப் பலன் தரும் என்று எதிர்பார்க்க முடியாது. அவரவர் உடல் தன்மை, நோயின் தன்மையைப் பொறுத்து த்தான் சிகிச்சைக்கான பலன் கிடைக்கும். இந்த நோயை முழுவதுமாகக் குணப்படுத்த முடியாது. நோய் தீவிரமாவதைத் தடுக்க முடியாது. இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால், நோய் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தலாம்.

பார்க்கின்சன் நோய்க்கு நரம்புநல சிறப்பு மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். அறிதிறன் நரம்புசார் மனநலப் பயிற்சியாளர் (Cognitive neuropsychologist), பேச்சுப் பயிற்சியாளர், இயன்முறைப் பயிற்சியாளர், உணவியலாளர் ஆகியோரின் உதவியும் தேவைப்படும்.

error: Content is protected !!