சர்வதேச சைகை மொழி தினமின்று!

வாய் பேச முடியாத மற்றும் காது கேளாதோர் சமூகத்தில் ஒற்றுமையை வளர்க்கும் நோக்கத்தில் சைகை மொழி தினம் 1958 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் உலகளாவிய இயக்கமாக இது உருவானது. காது கேளாத நபர்களின் மனித உரிமைகளை முழுமையாக உணர்ந்து கொள்வதை உறுதி செய்வதில் சைகை மொழியின் முக்கிய பங்கு பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை (UNGA) செப்டம்பர் 23 ம் தேதியை சர்வதேச சைகை மொழிகள் தினமாக (IDSL) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. உலக காது கேளாதோர் கூட்டமைப்பு ஆய்வரிக்கையின்படி,1.8 பில்லியன் மக்கள் செவித்திறன் குறைபாட்டுடன் வாழ்கின்றனர். அவர்களில் சுமார் 480 மில்லியன் மக்கள் தங்கள் காது கேளாமையைச் சரி செய்வதற்கான சேவைகளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். 2050 ஆம் ஆண்டில் செவித்திறன் குறைபாடுடையவர்களின் எண்ணிக்கை 2.5 பில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உயர்வின் மூலம், உலகளவில் 700 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு செவிப்புலன் மறுவாழ்வு தேவைப்படும் என்ற எச்சரிக்கையை சொல்லும் தினமிது என்பது குறிப்பிடத்தக்கது.
மனித இனம் எப்போது தோன்றியதோ அப்போதே சைகை மொழிகள் உருவாகி விட்டன. மொழி தெரியாத நாடுகள், மாநிலங்களுக்குச் சென்றாலும் நமது மொழிகளைத் தாண்டி உடல்மொழியால் நமது உணர்வுகளை வெளிப்படுத்த முடியும். முதன் முதலில் தோன்றிய மொழிகள் என்றால் அது சைகை மொழியாகத்தான் இருக்கும். காலப்போக்கில் மொழிகள் உருவாகி பேசத் தொடங்கிவிட்டோம். ஆனாலும் இயற்கையால் சில குறைபாடுடன் பிறக்கும் தனி மனிதர்களுக்கு ஆதிகால மொழியான இந்த சைகை மொழி தான் உதவுகிறது.
வாய்ப் பேச முடியாமை மற்றும் காது கேளாத தனி மனிதர்களின் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் சைகை மொழியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் செப்டம்பர் 23ஆம் தேதி ‘சர்வதேச சைகை மொழிகள் தினம்’ அனுசரிக்கப்பட்டது. காதுகேளாத நபர்களின் தனிப்பட்ட கல்வி, வேலை, பொருளாதார வளர்ச்சி, மேம்பாட்டிற்கும் சைகை மொழி மற்றும் சைகை மொழி தொடர்பான பல்வேறு சேவைகளை செய்வதற்கு இந்த சிறப்பு நாள் கோடிட்டுக் காட்டுகிறது.இந்த நபர்களின் முன்னேற்றம் மற்றும் வாழ்வாதாரம் ஆகியவை இந்த நாள் கொண்டாட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் இந்த நாள் சைகை மொழியை பயன்படுத்துபவர்களின் மொழியியல் அடையாளம் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மைக்கான ஆதரவளிப்பதற்கு பாதுகாப்பதற்கும் ஒரு வாய்ப்பைக் கொடுக்கிறது. இதன் மூலம் பல்வேறு இடங்களில் இருக்கும் சைகை மொழி பேசும் திறமையான நபர்களை அடையாளம் கண்டு ஒன்றினைக்கிறது. பேச முடியாமல் இருப்பது இது ஒன்றும் பெரிய குறைபாடு இல்லை. சராசரி மனிதர்கள் போல் அவர்களும் வாழ முடியும் என்று இதன்மூலம் ஊக்குவிக்கப்படுகின்றனர்.தட்டம்மை, சளி, ரூபெல்லா, மூளைக்காய்ச்சல் மற்றும் காது தொற்று போன்ற நோய்களால் குழந்தைகளில் 30% பேருக்குக் காது கேளாமை ஏற்படுகிறது.
தற்போதைய நிலையில், ஒவ்வொரு 1000 குழந்தைகளில் ஐந்து பேர் வரை காது கேளாமையுடன் பிறக்கிறார்கள் அல்லது பிறந்த உடனேயேக் காது கேளாத நிலையை அடைகிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. காது கேளாமை, குழந்தையின் வளர்ச்சி மற்றும் கல்வி சாதனைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இத்தகைய செவித்திறன் இழப்பை முன்கூட்டியேக் கண்டறிதல் மற்றும் உடனடியாகச் சிகிச்சை அளித்தல் போன்றவைகளின் வழியாக, காது கேளாமை மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகள் சமூகத்தில் சம வாய்ப்புகளைப் பெற உதவிட வேண்டும்.
இதே போன்று, 60 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு 4 பேருக்கு ஒருவர் செவித்திறன் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்குச் சிகிச்சையளிக்கப்படாமல் இருந்தால், காது கேளாமை தகவல் தொடர்பிலிருந்து அவர்களை விலக்குவதற்கு வழி வகுக்கும், இதனால் தனிமை, விரக்தி மற்றும் சமூகத் தனிமை உணர்வுகள் அவர்களிடம் அதிகமாகத் தோன்றும்.
அதே சமயம் சைகை மொழிக்கான கல்வி நிறுவனங்கள் கேரளாவிலும், டெல்லியிலும் மட்டுமே செயல்படுவதால் இங்கு சென்று படிப்பதற்கு ஆகும் பணச் செலவு மற்றும் பயண தூரம் அதிகம் என்பதால் யாரும் முன்வருவதில்லை. விளைவு, காதுகேளாத வாய்பேச முடியாதவர்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்வது என்று பலருக்கும் இங்கு தெரிவதில்லை. இதனால் பெரும்பாலான காதுகேளாதவர் புறக்கணிக்கப்படுகிறார்கள். அல்லது கேலிக்கு உள்ளாகிறார்கள்.சைகை மொழி குறித்த விழிப்புணர்வு நமது நாட்டில் சுத்தமாகவே இல்லை என்பதுதான் சோகம்.
நிலவளம் ரெங்கராஜன்