பன்னாட்டு ஈகை நாள்: செப்டம்பர் 5 – அன்பின் கரங்கள் இணையும் நாள்!
மனிதநேயம், இரக்கம், பகிர்வு ஆகிய உயர் பண்புகளைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் நாள் பன்னாட்டு ஈகை நாள் (International Day of Charity) கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாள், வறுமையைப் போக்கவும், சமூக ஒற்றுமையை வலுப்படுத்தவும், மனிதர்களுக்குள் இருக்கும் அன்பைப் பரப்பவும் ஒரு முக்கியக் கருவியாக விளங்குகிறது.மனிதர்களின் அடிப்படைத் தேவை உணவு, உடை, இருப்பிடம் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் இவற்றை எதுவும் இல்லாமல் துன்பப்படும் மனிதர்களை ஆதரிக்க அடிப்படையாகத் தேவைப்படுவது அன்புதான். உற்றார், உறவினர், நண்பர் என்ற எவ்வித தொடர்பும் இன்றி கண்ணில் பார்க்கும் ஏதோ ஒரு கஷ்டப்படும் நபருக்கு நம்மால் முடிந்த உதவியைச் செய்தால் அதுதான் மனிதாபிமானம்.. அதுதான் இறைத்தன்மை.. அதுதான் சேவை., அதுதான் ஈகை.
ஈகை: பொருள் நிறைந்த ஒரு சொல்
‘ஈகை’ என்ற சொல் வெறுமனே பொருளைக் கொடுப்பதைக் குறிப்பதல்ல. அது உள்ளத்தால் சுரக்கும் கருணையின் வெளிப்பாடு. பசியோடு இருப்பவனுக்கு உணவு தருவது, படிப்பறிவில்லாதவனுக்கு கல்வி கற்றுக்கொடுப்பது, துன்பத்தில் இருப்பவனுக்கு ஆறுதல் சொல்வது, இவை அனைத்தும் ஈகையின் வெவ்வேறு வடிவங்கள். மனிதனின் தேவையை உணர்ந்து, தன் வலிமையையும் அன்பையும் கொண்டு உதவுவதே உண்மையான ஈகையாகும். வள்ளுவர் கூறுவது போல, “வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்றெல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து” – அதாவது, ஏழைகளுக்குக் கொடுப்பதே உண்மையான கொடை, மற்றவை எல்லாம் ஏதோ ஒரு பலனை எதிர்பார்த்துக் கொடுப்பவை.

செப்டம்பர் 5-ஐ தேர்ந்தெடுத்ததன் காரணம்
இந்த நாள், நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா அவர்களின் நினைவு நாளாகும். கல்கத்தாவின் சேரிகளில் வாடிய மக்களுக்கு சேவை செய்வதையே தன் வாழ்நாள் இலக்காகக் கொண்டவர் அவர். அவர் செய்த தொண்டுகளுக்காக, அன்பின் தூதுவர் என உலக மக்களால் போற்றப்பட்டார். அவரின் தன்னலமற்ற சேவை, உலக மக்களுக்கு ஈகையின் மகத்துவத்தை உணர்த்தியது. எனவே, அன்னை தெரசாவின் நினைவாகவே இந்த நாள் ஈகை நாளாகக் கொண்டாடப்படுகிறது.
ஈகை நாள் உணர்த்தும் செய்தி
பன்னாட்டு ஈகை நாள் என்பது வெறும் சம்பிரதாயமான கொண்டாட்டம் அல்ல. அது ஒரு நினைவுபடுத்தல். பணம் படைத்தவர்கள் மட்டுமே ஈகை செய்ய முடியும் என்ற எண்ணம் தேவையில்லை. ஒரு சிறு உதவி, ஒரு புன்னகை, ஒரு நல்ல வார்த்தை, ஒரு ஆறுதலான தொடுதல் என எளிய செயல்கள் கூட ஈகையின் அடையாளம்தான்.
இந்த நாளில், நாம் ஒவ்வொருவரும் நம்மைச் சுற்றிலும் உள்ளவர்களின் தேவைகளை உற்றுநோக்கி, இயன்றதைச் செய்ய உறுதி பூணலாம். பொருள் கொடுப்பதும், ரத்தம் தானம் செய்வதும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபடுவதும், கல்விக்கு உதவுவதும் எனப் பல்வேறு வழிகளில் நாம் ஈகை குணம் கொண்டவர்களாக மாறலாம்.
அன்பும், இரக்கமும், மனிதநேயமும் நிறைந்த ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு ஈகை என்னும் பண்பு மிகவும் அவசியம். எனவே, ஈகை நாளில் மட்டும் அல்லாமல், ஒவ்வொரு நாளும் ஈகைக் குணத்துடன் வாழ்ந்து, உலகை இன்னும் அழகான இடமாக மாற்றுவோம்.
நிலவளம் ரெங்கராஜன்


