உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம்! -ஜுன் 26

உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம்! -ஜுன் 26

ண்டு தோறும் ஜூன் 26ம் தேதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினமாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்த சர்வதேச தினம் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிரான ஐ.நா-வின் சர்வதேச தினமாகும். இது கடந்த 1989-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜூன் 26 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாள் சீனாவின் குவாங்டாங்கில் உள்ள ஹுமேன், ஓபியம் வர்த்தகத்தை அகற்றுவதற்கான லின் ஜெக்ஸுவின் முயற்சிகளை நினைவுகூறும் விதமாகவும் அனுசரிக்கப்படுகிறது.

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமானது தனிநபர்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் டீனேஜ் வயதினரிடையே போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் சுகாதார தீமைகள் மற்றும் சமுதாய சீர்கேடு பற்றி பொறுப்புணர்வை ஏற்படுத்துகிறது. உலகெங்கிலும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பள்ளிகள், கல்லூரிகள், பணியிடங்கள் மற்றும் பொது இடங்களில் போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் அபாய விளைவுகள் குறித்து எடுத்து கூறும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.

சர்வதேச வர்த்தகத்தில் பெட்ரோல், ராணுவ தளவாடங்களுக்கு அடுத்து, மூன்றாவது இடத்தில் போதைப்பொருள் வியாபாரம் உள்ளது. ஓர் ஆண்டிற்கு 5 லட்சம் கோடி ரூபாய்க்கு போதைப்பொருள் வியாபாரம் நடக்கிறது. இதை ஒழிக்க, சட்டங்கள் மூலம் உலக நாடுகள் முயற்சிகள் எடுக்கின்றன. ஆனாலும் இதன் பயன்பாடு அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை. புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தியும் கடத்தல் நடக்கிறது

“போதை’ சமூகத்தை அழிக்கும் ஒரு “அரக்கன்’. போதைப்பொருளால், அவர் மட்டுமின்றி, அவரது குடும்பம் மற்றும் சமுதாயத்தையும் பாதிக்கிறது. இதுதான் அனைத்து வகையான நோய்களுக்கும் முன்னோடி. சிலர் இதற்கு அடிமையாகவே மாறிவிட்டனர். போதைப்பொருள் பயன்பாடு எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதோ, அதைவிட சட்டவிரோதமாக கடத்தி கோடிக்கணக்கில் பணம் ஈட்டப்படுவதாலும் பாதிப்பு ஏற்படுகிறது.
போதை என்றாலே, பெரும்பாலானோர் மது மற்றும் சிகரட்டை மட்டுமே நினைக்கின்றனர். இதையும் தாண்டி, உலகம் முழுவதும் மற்ற போதை பொருட்களின் உற்பத்தி, கடத்தல் அமோகமாக நடக்கிறது. நம்ம ஊர் “டாஸ்மாக்’ விற்பனையை “தூக்கி சாப்பிடும்’ அளவுக்கு, இதன் வர்த்தக மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய்.கஞ்சா, கொகைன், பிரவுன் சுகர், ஹெராயின், அபின் , புகையிலை, மது , ஊக்க மருந்து, ஒயிட்னர் மற்றும் சில மருந்துகள், இளைஞர்களிடம் வேகமாக பரவும் பழக்கங்கள். உடலை மட்டுமின்றி, மனதையும் சிதைத்து, குடும்ப வாழ்க்கையையும் அழித்து, முடிவில் மரணத்துக்கே அழைத்து செல்பவை இவை. மூலப்பொருட்களை பயிரிடுதலில் துவங்கி, வளர்ப்பு, விளைச்சல், உற்பத்தி, ஏற்றுமதி என பல கட்டங்களாக இதன் வர்த்தகம் நடக்கிறது. போதைக்கு அடிமையானவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கி, மறுவாழ்வு அளிக்க வேண்டும். விற்பனை மற்றும் உற்பத்தியை முற்றிலும் தடை செய்தால் மட்டுமே இதனை தடுக்க முடியும்.

சட்டம் சொல்வது என்ன?

இந்தியாவின் போதைப்பொருள் தடுப்பு சட்டம் 1985ன் படி, போதைப்பொருள் தடுப்பு ஆணையம், 1986, மார்ச் 17ம் தேதி, தொடங்கப்பட்டது. இது போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை கண்காணிக்கிறது. இதன் தலைமையகம் டில்லி. மண்டல அலுவலகங்கள் சென்னை, பெங்களூரு, கோல்கட்டா உள்ளிட்ட 12 நகரங்களில் செயல்படுகிறது. மருத்துவ விதிமுறைகளுக்கு உட்படாத போதைப்பொருட்களை உற்பத்தி செய்தல், விற்பனை, பயன்படுத்துதல் மற்றும் சட்டவிரோதமாக கடத்துதல், பதுக்குதல் ஆகியவை குற்றம் என இந்த சட்டம் சொல்கிறது. இதனை மீறுபவர்களுக்கு 10 முதல் 30 வருட சிறை தண்டனை மற்றும் அபராத தொகை விதிக்கப்படுகிறது. குற்றங்களின் தன்மையை பொறுத்து மரண தண்டனையும் வழங்கப்படுகிறது.

ஆனாலும் உலகளவில் போதை பொருட்களின் பயன்பாடு, போதை பொருள் கடத்தல், போதைப் பொருள் விற்பனை மிகப்பெரிய முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதை அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால் உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 30 கோடிக்கும் மேற்பட்டோர் போதை பொருட்களுக்கு அடிமையாக இருக்கின்றனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமான ஜூன் 26 போதைப்பொருள் துஷ்பிரயோகத்தை அகற்றவும், சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தைத் தூண்டும் கட்டமைப்பு காரணங்களை அகற்ற விழிப்புணர்வை தூண்டவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருளை பயன்படுத்தும் நபர்கள் ஒரு கட்டத்தில் அதனலாலேயே பலியாகின்றனர். ஆனால் தேவையான விழிப்புணர்வு இல்லாததால் அவர்களை மீட்பது கடினமாகிறது. போதை பொருள் பயன்படுத்துபவர்களில் மூன்றில் ஒருவர் பெண் என்பது மற்றொரு அதிர்ச்சி தகவல்.

Related Posts