சர்வதேச அனிமேஷன் தினமின்று!

சர்வதேச அனிமேஷன் தினமின்று!

க்டோபர் 28 ஆம் தேதி, உலகம் முழுவதும் சர்வதேச அனிமேஷன் தினம் ( International Animation Day) கொண்டாடப்படுகிறது. அனிமேஷன் தொழில்நுட்பத்தில் உருவாகும் திரைப்படங்கள் மற்றும் இத்துறையில் பணியாற்றும் ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

வரலாற்றுப் பின்னணி:

1892 ஆம் ஆண்டு அக்டோபர் 28 அன்று, சார்லஸ் எமிலி ரெனால்ட் என்பவர் முதன்முதலாக பாரிஸில் உள்ள கிரெவின் மியூசியத்தில் தனது அனிமேஷன் திரைப்படத்தை திரையிட்டார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை நினைவுகூரும் விதமாக, சர்வதேச அனிமேஷன் திரைப்பட சங்கம் (International Animated Film Association – ASIFA), 2002 ஆம் ஆண்டு முதல் இந்நாளை ‘சர்வதேச அனிமேஷன் தினம்’ என அறிவித்து, உலகெங்கிலும் கொண்டாட வழிவகுத்தது.

அனிமேஷன் – பொழுதுபோக்கைத் தாண்டி:

அனிமேஷன் என்றவுடன் பொதுவாகக் குழந்தைகளுக்கான கார்ட்டூன் மற்றும் திரைப்படங்கள்தாம் நினைவுக்கு வரும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் அனிமேஷனின் பயன்பாடு வெகுவாக விரிவடைந்துள்ளது. பொழுதுபோக்குத் துறையைத் தாண்டி, விளையாட்டு (கேமிங்), விளம்பரம், கல்வி, வணிகம், மருத்துவம் எனப் பல்வேறு துறைகளிலும் அனிமேஷன் மற்றும் அதைச் சார்ந்த கிராஃபிக்ஸ் தொழில்நுட்பங்கள் அத்தியாவசியமாகியிருக்கின்றன.

இந்தியாவில் அனிமேஷனின் தொடக்கம்:

இந்தியாவில் குகை ஓவியங்கள், தோல் பாவைக் கூத்து போன்ற பாரம்பரிய கலை வடிவங்களே அனிமேஷனுக்கான அடிப்படை என்று கருதப்படுகிறது.

  • இந்திய சினிமாவுக்கு அனிமேஷனை அறிமுகப்படுத்தியவர் தாதா சாகேப் பால்கே.
  • 1937 இல் ஒலியுடன் கூடிய முதல் இந்திய அனிமேஷன் படம் கொல்கத்தாவில் தயாரிக்கப்பட்டது.
  • 1947 இல், சென்னை ஜெமினி ஸ்டுடியோவில் தென்னிந்தியாவின் முதல் அனிமேஷன் படம் தயாரானது.
  • இந்தியத் திரைப்படப் பிரிவின் (Film Division of India) கீழ், 1950களில் டிஸ்னி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, இந்தியாவில் அனிமேஷன் பயிற்சி வழங்கப்பட்டது.
  • இந்தியா அனிமேஷன் யூனிட்டின் முதல் திரைப்படமான ‘தி பான்யன் டீர்’ (The Banyan Deer) 1957 ஆம் ஆண்டு வெளியானது. இதுவே இந்தியாவில் அனிமேஷன் வளர்ச்சிக்கான முக்கியப் படியாகக் கருதப்படுகிறது.

கோலிவுட்டில் கிராஃபிக்ஸ் புரட்சி:

இந்தியாவில் அனிமேஷன் கலைஞர்கள் ஆரம்பத்தில் ஏர் இந்தியாவின் ‘மகாராஜா’, அமுல் ‘சிறுமி’ போன்ற விளம்பரப் பிரிவுகளில் தனித்துவமான முத்திரை முகங்களை வடிவமைத்தனர்.

  • 1990களில் இயக்குநர் ஷங்கர் தனது திரைப்படங்களான ‘காதலன்’, ‘இந்தியன்’, ‘ஜீன்ஸ்’, ‘முதல்வன்’ ஆகியவற்றின் மூலம் அனிமேஷன் கிராஃபிக்ஸை அதிக அளவில் பயன்படுத்தி, அதை வெகுமக்களிடம் பரவலாக்கினார்.
  • ‘காதலன்’ திரைப்படத்தில் வரும் ‘என்னவளே அடி என்னவளே’ பாடலில் பிரபுதேவாவும் நக்மாவும் டேக் ஆஃப் ஆகும் காட்சி அனிமேஷன் தொழில்நுட்பத்தின் குறிப்பிடத்தக்க ஆரம்பப் பயன்பாடாகும்.
  • கமல் ஹாசன் தனது ‘ஆளவந்தான்’ (2001) திரைப்படம் மூலம், சண்டைக் காட்சிகளுக்கும் அனிமேஷன் கிராஃபிக்ஸை (மோஷன் கேப்சர் நுட்பம்) பயன்படுத்தலாம் என்கிற புதுமையைப் புகுத்தினார்.
  • நடிகர் விஜயகாந்த் நடித்த ‘ராஜா சின்ன ரோஜா’ திரைப்படத்தில், ‘ராஜா சின்ன ரோஜாவுடன் காட்டுப் பக்கம் வந்தாராம்’ என்னும் பாடலில் லைவ் ஆக்‌ஷன் நடிகர்களுடன் அனிமேஷன் செய்யப்பட்ட விலங்குகள் நடித்திருக்கும். தமிழில் லைவ் ஆக்‌ஷன் உருவத்துடன் நடிகர்கள் இணைந்து நடித்த முதல் படம் இதுவே.

அனிமேஷனின் அதிகரித்துவரும் பரிணாமங்கள்:

2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு அனிமேஷன் துறையின் தேவை மேலும் அதிகரித்தது.

  1. கேமிங் துறை: கடந்த 15 ஆண்டுகளில் கேமிங் துறை எதிர்பாராத வளர்ச்சியை எட்டியுள்ளது. கணினி மற்றும் திறன்பேசிகள் மூலம் பரவலாக்கப்பட்ட இணையவழி விளையாட்டுகளுக்கு அனிமேஷனின் பங்கு அளப்பரியது.
  2. விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX) மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் (SFX): திரைப்படக் காட்சிகளை மெருகேற்றவும், கற்பனைக் கதாபாத்திரங்களை உருவாக்கவும் இந்த நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஹாலிவுட் படங்களுக்கான (எ.கா: அவதார்) அனிமேஷன் பணிகள் கூடச் செலவு குறைவு என்பதால் இந்தியா போன்ற நாடுகளில், குறிப்பாக சென்னை, மும்பை, பெங்களூரு நகரங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.
  3. மெய்நிகர்த் தொழில்நுட்பங்கள்: வெர்ச்சுவல் ரியாலிட்டி (VR), ஆக்மென்டட் ரியாலிட்டி (AR), மெட்டாவெர்ஸ் போன்ற மெய்நிகர்த் தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு அனிமேஷன் தான் அடிப்படை. வீட்டு மனை விற்பனை போன்ற வணிக விளம்பரங்களில் வாடிக்கையாளர் இருக்கும் இடத்தில் இருந்தே வாங்க நினைக்கும் வீட்டை நேரில் பார்ப்பது போன்ற அனுபவத்தைப் பெற இந்தத் தொழில்நுட்பம் உதவுகிறது.

பெருகும் வேலைவாய்ப்புகள்:

அனிமேஷன் என்பது வரைதல், லே-அவுட் அமைத்தல், வண்ணம் தீட்டுதல், பேக்கிரவுண்ட் அமைத்தல், மாடலிங், ஒலி-ஒளி சேர்ப்பு, படத்தொகுப்பு எனப் பல நிபுணர்களின் பங்களிப்போடு மேற்கொள்ளப்படும் ஒரு கூட்டு வேலைப்பாடு ஆகும். காட்சிமயமாகிப் போன இன்றைய உலகில், அனிமேஷன் மற்றும் கிராஃபிக்ஸ் வேலைப்பாடுகளுக்கான தேவை பலமடங்கு பெருகியுள்ளது.

இத்துறையில் ஆர்வம் உள்ள இளைஞர்கள், ‘மாயா’, ‘பிளெண்டர்’ போன்ற மென்பொருள்களைக் கற்றுக்கொள்வதுடன், குறுகிய காலப் படிப்புகள் மற்றும் பயிலரங்குகளில் பயிற்சி பெற்று, அனிமேஷன், கேமிங், வி.எஃப்.எக்ஸ், விளம்பரம் போன்ற துறைகளில் நிச்சயம் ஜொலிக்கலாம். அன்று எட்டாத அதிசயமாகப் பார்க்கப்பட்ட அனிமேஷன் இன்று அனைவராலும் அணுகக்கூடிய, அதிக வாய்ப்புகளைக் கொண்ட ஒரு துறையாக வளர்ந்துள்ளது.

சிவராமகிருஷ்ணன்

Related Posts

error: Content is protected !!