இந்தியாவின் கருணைக்கொலை தீர்ப்பும், ஹரிஷ் ராணாவின் முடிவுற்ற மரணமும்!

இந்தியாவின் கருணைக்கொலை தீர்ப்பும், ஹரிஷ் ராணாவின் முடிவுற்ற மரணமும்!

ந்தியாவில் சட்டப்பூர்வமாக ‘கருணைக்கொலை’ (Passive Euthanasia) அனுமதிக்கப்பட்ட முதல் நபரான ஹரிஷ் ராணா, 13 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு டெல்லி எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் காலமானார்.ஆம் இந்திய மருத்துவ மற்றும் சட்ட வரலாற்றில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படும் ஹரிஷ் ராணாவின் வாழ்க்கைப்பயணம்,  நேற்று மார்ச் 24, 2026 அன்று மாலை 4:10 மணியளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமைதியாக நிறைவுற்றது.

வாழ்க்கையை மாற்றிய அந்த விபத்து

2013-ஆம் ஆண்டு, பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பி.டெக் (B.Tech) இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்த ஹரிஷ் ராணா, தான் தங்கியிருந்த விடுதியின் நான்காவது மாடியிலிருந்து எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இந்த விபத்தில் அவரது மூளையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போதிருந்து கடந்த 13 ஆண்டுகளாக அவர் ‘Persistent Vegetative State’ எனப்படும் உணர்வற்ற நிலையில், படுக்கையிலேயே முடங்கிக் கிடந்தார்.

பெற்றோரின் நீண்டகாலப் போராட்டம்

ஹரிஷின் தந்தை அசோக் ராணா மற்றும் தாய் நிர்மலா தேவி ஆகியோர் தங்களது மகனை மீட்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர். இதற்காக அவர்கள் தங்களது வீட்டையும் விற்றுப் பல மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தனர். ஆனால், ஹரிஷின் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. 100% ஊனமுற்ற நிலையில், ஒரு குழாய் மூலம் உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டு அவர் செயற்கையாக உயிர் வாழ்ந்து வந்தார்.

சட்டப் போராட்டமும் உச்சநீதிமன்றத் தீர்ப்பும்

தனது மகனின் வேதனையைக் கண்டு சகிக்காத தந்தை, ஹரிஷுக்குக் ‘கருணைக்கொலை’ செய்ய அனுமதி கோரி நீதிமன்றத்தை அணுகினார்.

  • டெல்லி உயர்நீதிமன்றம்: முதலில் இந்த மனுவை நிராகரித்தது.

  • உச்சநீதிமன்றம்: மார்ச் 11, 2026 அன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியது. நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு, ஹரிஷின் உடல்நிலையை ஆய்வு செய்த மருத்துவக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், அவருக்கு “கண்ணியமாக மரணமடையும் உரிமை” (Right to die with dignity) உண்டு எனத் தெரிவித்து, செயற்கை உணவு மற்றும் நீர் வழங்குவதை நிறுத்த அனுமதி அளித்தது.

மறைவும் உடல் உறுப்பு தானமும்

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, மார்ச் 14-ஆம் தேதி ஹரிஷ் எய்ம்ஸ் மருத்துவமனையின் ‘பேலியேட்டிவ் கேர்’ (Palliative Care) பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் அவருக்கு வழங்கப்பட்டு வந்த செயற்கை ஆதரவு முறையே நிறுத்தப்பட்டது. இறுதியாக, மார்ச் 24 அன்று அவர் இயற்கை எய்தினார்.

அவரது மறைவுக்குப் பின், அவரது குடும்பத்தினர் ஹரிஷின் கண்கருவிழி (Corneas) மற்றும் இதய வால்வுகளை (Heart valves) தானம் செய்து மற்றுமொரு முன்னுதாரணத்தைப் படைத்துள்ளனர்.

Related Posts