புத்தாண்டு தினத்தன்று அதிகமான குழந்தைகள் பிறந்த நாடுகளில் இப்போதும் இந்தியாவே முதலிடம்!

புத்தாண்டு தினத்தன்று அதிகமான குழந்தைகள் பிறந்த நாடுகளில் இப்போதும் இந்தியாவே முதலிடம்!

புத்தாண்டு அன்று வாட்ஸ் அப்-பில் அதிகமானோர் வாழ்த்து அனுப்பியர்கள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்தது ,, புத்தாண்டு அன்று நடந்த கொண்டாட்டத்தில் அதிகமானோர் பலி ஆனது இந்தியாவில் அதிகம் என்றெல்லாம் இது நாள் வரை வந்த செய்திகளை பின்னுக்கு தள்ளி விட்டு 2019-ம் புத்தாண்டு தினத்தன்று அதிகமான குழந்தைகள் பிறந்த நாடுகளில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டும் புத்தாண்டு அன்று அதிகமான குழந்தைகள் பிறந்த நாடுகளில் இந்தியாவே முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

நடந்து முடிந்த புத்தாண்டில் உலக அளவில் குழந்தைகள் பிறப்பு குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளுக்கான நல  அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2019-ம் ஆண்டு பிறந்தவுடன் உலக அளவில் 3 லட்சத்து 95 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளதாகக் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள், இந்தியா, சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா, வங்கதேச நாடுகளில் பிறந்துள்ளன. இந்தியாவில் அதிகபட்சமாக 69 ஆயிரத்து 944 குழந்தைகள் பிறந்துள்ளன. அதைத் தொடர்ந்து சீனாவில் 44 ஆயிரத்து 940 குழந்தைகளும், நைஜீரியாவில் 25ஆயிரத்து 685 குழந்தைகளும் பிறந்துள்ளன.

பாகிஸ்தானில் 15 ஆயிரத்து 112 குழந்தைகளும், இந்தோனேசியாவில் 13 ஆயிரத்து 256 மழலை களும், அமெரிக்காவில் 11 ஆயிரத்து 86, காங்கோவில் 10 ஆயிரத்து 53, வங்கதேசத்தில் 8 ஆயிரத்து 428 குழந்தைகளும் பிறந்துள்ளன.

சரியாக 12 மணியை அடைந்தவுடன் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் மட்டும் 168 குழந்தைகள் பிறந்துள்ளன. டோக்கியாவில் 310 குழந்தைகளும், பெய்ஜிங்கில் 605 குழந்தைகளும், மாட்ரிட்டில் 166 குழந்தைகளும், நியூயார்க்கில் 317 குழந்தைகளும் பிறந்துள்ளன. புத்தாண்டு பிறந்தவுடன் உலகிலேயே முதல் குழந்தை பசிபிக்கில் உள்ள பிஜி நகரில் பிறந்தன” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் யுனிசெப் அமைப்பின் துணை நிர்வாக இயக்குநர் சார்லோட்டி பெட்ரி கோரிநிட்கா கூறுகை யில், “ உலகில் உள்ள பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் வாழ்வதற்குரிய உரிமையை அனைத்து நாடுகளும் உறுதி செய்ய வேண்டும். ஆனால், உலகில் பல நாடுகளில் பிறக்கும் குழந்தைகள் தங்கள் முதல் நாளை நிறைவு செய்யமுடியாமல் கூட இறக்கின்றன. யுனிசெப் கணக்கின்படி கடந்த 2017-ம் ஆண்டில், உலக அளவில் 10 லட்சம் குழந்தைகள் பிறந்த அன்றே இறந்துள்ளன. 25 லட்சம் குழந்தைகள் ஒருமாதத்தில் இறந்துள்ளன.

பெரும்பாலான குழந்தைகள் இறப்பு என்பது குறைப்பிரசவத்தாலும், பிரசவத்தின் போது ஏற்படும் சிக்கல்கள், நிமோனியா போன்ற தொற்றுகளாலும் இறக்கின்றன. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள உள்ளூர் சுகாதாரப் பணியாளர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க நாம் முதலீடு செய்தால், நாம் இன்னும் லட்சக்கணக்கான குழந்தைகளின் உயிரைக் காக்கலாம் “ எனத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!