உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி போதாது என்றால் தொகையை மேலும் அதிகரிக்க தயார்- அயோத்தி பரகாம்சா கொக்கரிப்பு

உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி போதாது என்றால் தொகையை மேலும் அதிகரிக்க தயார்- அயோத்தி பரகாம்சா கொக்கரிப்பு

புதுக்கோட்டையில் நடந்த மாவட்ட தி.மு.க இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டுப் பேசிய உதயநிதி ஸ்டாலின், “சமீபத்தில் மதுரையில் அ.தி.மு.க மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கட்சியின் வரலாறு பற்றி பேசவில்லை. தமிழகத்தின் பிரச்னையைப் பற்றி பேசவில்லை. ஆடல், பாடல் நிகழ்ச்சி, மிமிக்ரி நிகழ்ச்சி மட்டும்தான் நடத்தப்பட்டது. சென்னையில் 2 நாட்களுக்கு முன்பு ஒரு மாநாடு நடந்தது. அந்த மாநாட்டின் பெயரே சனாதன ஒழிப்பு மாநாடுதான். எப்படி மலேரியா, டெங்கு, காலரா, கொரோனா தொற்றினை ஒழித்தோமோ அதேபோல சனாதானத்தையும் அடியோடு ஒழிக்க வேண்டும் என்று கூறினேன்.

இதற்கு நிறைய பேர் வயிற்றெறிச்சல் படுவார்கள் என்று சொன்னேன். நான் சொன்னது நடந்தது. அமித் ஷா முதல் ஜே.பி.நட்டா வரை இன்று என்னைப் பற்றிதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சனாதனத்தைப் பற்றி நான் பேசியதில் தவறில்லை. நான் பேசியதில் தவறு இல்லாதபோது அமைச்சர் பதவியை எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும். என்னை பேசக் கூடாது என்றால் திரும்ப திரும்ப பேசுவேன். இந்திய முழுவதும் என்னைக் கைது செய்ய புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு சாமியார் என்னுடைய தலைக்கு ரூ.10 கோடி விலை வைத்திருக்கிறார். என் தலை மேல் உங்களுக்கு அப்படி என்ன ஆசை? அவர் ஒரு சாமியார், அவருக்கு எப்படி 10 கோடி ரூபாய் வந்தது? நீ உண்மையான சாமியாரா.. இல்லை டூப்ளிகேட் சாமியாரா..? பத்து ரூபாய் சீப்பு கொடுத்தால் நானே என் தலையை சீவி விடுவேன்.

அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் வரிசையில் தற்போது ஸ்டாலின் வரை சனாதானத்தை ஒழிக்கும் வரை ஓயப் போவதில்லை. சனாதானம் என்றால் யாரும் கேள்வி கேட்கக்கூடாது. எல்லாமே நிலையானது என்பது தான். 100 வருடத்திற்கு முன்னர் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றிருந்தது. 70 வருடத்திற்கு முன்பு பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்ற நிலை இருந்தது. பெண்கள் படிக்கக்கூடாது என்றனர். சனாதனத்தில் பெண்கள் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்தனர்.

இதை எல்லாம் உடைத்தது தான் தி.மு.க.,தான். தி.மு.கவின் பல்வேறு நலத்திட்டங்களினால் பயன்பெற்றவர்களில் 99 சதவீதம் பேர் இந்துக்கள்தான். நான் இனப் படுகொலையைத் தூண்டிவிடுவதாகச் சொல்கிறார்கள். உண்மையில் இனப் படுகொலையை தூண்டிவிடுவது மோடியும், அமித் ஷாவும்தான். மணிப்பூர் கடந்த 5 மாதங்களாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. பா.ஜ.க.,தான் குஜராத்திலும் மணிப்பூரிலும் இனப் படுகொலையை செய்து காட்டியது” என்று சொன்னார்.

இந்நிலையில் சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி தலைக்கு ரூ. 10 கோடி என அறிவித்திருந்த அயோத்தியைச் சேர்ந்த பரகாம்ச ஆச்சாரியா , ` உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி போதாது என்றால் தொகையை மேலும் அதிகரிக்க தயார் என்றும், நாட்டில் உள்ள 100 கோடி மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும், சனாதன தர்மத்தை இழிவுப்படுத்துவதை சகித்து கொள்ள முடியாது என்றும் சனாதன தர்மத்தால் தான் நாட்டில் வளர்ச்சி ஏற்பட்டது எனவும் பரகாம்ச ஆச்சாரியா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!