இன்றைய அரசியல் என்பது, சில சுயநலவாதிகளின் வியாபாரமாகி விட்டது.

“நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணமொண என்று சொல்லு மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?” – இப்படிப் பாடியவர் சிவவாக்கியர். பதினெண் கீழ்கணக்குச் சித்தர்களுள் ஒருவர்.
‘உனக்குள்தானடா கடவுள் இருக்கிறார். அதை விட்டுவிட்டு வெளியில் ஏனடா தேடியலைகிறீர்கள்? அவையெல்லாம் நட்ட கல்லடா…கடவுள் அல்லடா…’ என வெளியில் இறை வழிபாடு செய்யும் அத்தனை பேரையும் சிறிதும் ஈவு இரக்கமில்லாமல் சாடுகிறார். அப்படியிருந்தும் ‘நாங்கள் வழிபடும் தெய்வத்தை நட்ட கல் என்று சொல்லி எங்கள் மனத்தைச் சிவவாக்கியர் புண்படுத்திவிட்டார்’ என்று எந்த பக்தரும் அவர்மீது வழக்குப் போட்டாரா எனத் தெரியவில்லை. காரணம், அன்றைக்கு ஆன்மிகம் என்பது கடவுளைக் கண்டடைவதற்கான ஒரு முயற்சியாகத்தான் பார்க்கப் பட்டது. அதனால்தான் எங்கிருந்து எந்தக் கருத்து வந்தாலும் அதை அலசிப் பார்த்து, ஒன்று கூடி விவாதித்து, அதிலிருக்கும் உண்மையை அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள்.
எப்போது ஆன்மிகத்தில் மதங்கள் விதைக்கப்பட்டு, முளை விட்டனவோ, அப்போதே பிரச்னைகளும் ஆரம்பமாகிவிட்டன. எல்லா மதங்களிலும் பின்பற்றுதல் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. விவாதங்களுக்கும் பகுத்தறிவுக்கும் இடமேயில்லை. இவற்றுக்கெல்லாம் இடம் கொடுத்தால், மதம் என்கிற கட்டமைக்கப்பட்ட பிம்பம் தகர்ந்து விடுமோ என்கிற பயம். அதனால்தான் உலக அளவில், நாடுகளுக்கிடையிலான போர்களால் மடிந்த உயிர்களைவிட, மதச் சண்டைகளால் மடிந்த உயிர்களே அதிகம் என்கிறார்கள்.
ஆன்மிகம் என்பது உண்மையைத் தேடும் ஒரு முயற்சி.
மதம் என்பது மக்களுக்கு ஊட்டப்படும் போதை. (அன்றே மார்க்ஸ் சொன்னதுதான்)
இன்றைய அரசியல் என்பது, சில சுயநலவாதிகளின் வியாபாரமாகி விட்டது. இந்தச் சுயநலவாதிகள்தான் தங்கள் அரசியல் வியாபாரத்தைப் பெருக்குவதற்காக மத போதையையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார்கள்.
இவற்றையெல்லாம் மக்களாகிய நாம்தான் சீர்தூக்கிப் பார்த்து, உண்மையை உணர்ந்து விழிப்படைய வேண்டும்.