ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி – இன்று தொடக்கம்!

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி – இன்று தொடக்கம்!

கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவான ஐசிசி 13வது ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. இதற்கு முன்பு 1987, 1996 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் உலகக் கோப்பையை இந்தியா நடத்தியது. இருப்பினும், அந்த தொடர் மற்ற நாடுகளுடன் இணைந்து நடத்தப்பட்டது. ஆனால் இப்போது நடத்தப்படும் ஐசிசி ஒருநாள் உலக கோப்பை தொடர் இந்தியா முதல் முறையாக தனியாக நடத்துகிறது. நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறும் போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.

இன்று மதியம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 2019 இறுதிப் போட்டியாளர்களான இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையேயான நடைபெறும் மோதலுடன் ஐசிசி உலக கோப்பை 2023 அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது. . இந்த மைதானத்தில் சுமார் 1.30 லட்சம் பேர் அமர்ந்து போட்டியை கண்டுகளிக்கலாம். கடந்தமுறை இறுதிப் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை சிறந்த முறையில் தொடங்குவதில் கேன்வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணி கவனம் செலுத்தக்கூடும்.

முதல் அரையிறுதிப் போட்டி நவம்பர்15-ம் தேதி மும்பையிலும் 2-வது அரையிறுதிப் போட்டி நவம்பர் 16-ல் கொல்கத்தாவிலும் நடைபெற உள்ளது. நவம்பர் 19-ம் தேதி அகமதாபாத்தில் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 8-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.

உலகக் கோப்பை தொடரில் கடைசியாக நடைபெற்ற 3 பதிப்புகளிலும் போட்டியை நடத்திய நாடுகளே கோப்பையை வென்றுள்ளன. இந்த வகையில் 2011-ம்ஆண்டு இந்தியாவும், 2015-ம் ஆண்டுஆஸ்திரேலியாவும், 2019-ம் ஆண்டு இங்கிலாந்தும் வாகை சூடின. இதனால் சொந்த மண் சாதகங்களுடன் களமிறங்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. மேலும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில்சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.33 கோடி பரிசாக வழங்கப்பட உள்ளது. 2-வது இடத்தை பெறும் அணிக்குரூ.16.50 கோடியும், அரையிறுதியில் தோல்வியடையும் அணிகளுக்கு தலா ரூ.6.50 கோடியும் பரிசாக வழங்கப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ICC ODI உலகக் கோப்பை 2023-ன் நேரடி ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது. எனவே, போட்டியின் அனைத்து விளையாட்டுகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் நேரடியாகக் கிடைக்கும். பகல் நேர ஆட்டங்கள் இந்திய நேரப்படி காலை 10:30 மணிக்கும், பகல்-இரவு போட்டிகள் இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கும் தொடங்கும்.

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையேயான உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹிந்தி, ஸ்டார் ஸ்போர்ட் 1 எச்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஆகியவற்றில் நேரடியாக ஒளிபரப்பப்படும். ஹிந்தி எச்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தெலுங்கு மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 கன்னடம் ஆகிய சேனல்களில் பார்க்கலாம்.

செயலியில் பார்ப்பவர்கள், 2023 ODI உலகக் கோப்பையின் நேரடி ஸ்ட்ரீமிங் இந்தியாவில் Disney + Hotstar ஆப்ஸ் மற்றும் இணையதளத்தில் கண்டு ரசிக்கலாம். அனைத்து போட்டிகளும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் செயலியில் இலவசமாக நேரடியாக ஒளிபரப்பப்படும்.

error: Content is protected !!