அதிக குடிப்பழக்கத்தால் பாதிப்புக்குள்ளான மூளை சேதத்தை சரிசெய்ய எவ்வளவு காலம் ஆகும்? ஆய்வு முடிவு!
போதை… இதற்கு சிறியவர், பெரியவர் பாகுபாடில்லை. யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வசியப்படுத்திவிடும் ஆற்றல் இதற்கு உண்டு. ஒருவருக்கு போதை பழக்கம் ஏற்பட பல காரணிகள் உள்ளன. வாழ்க்கை சூழல், பொருளாதாரம், நண்பர்கள், இருப்பிடம் என சொல்லிக் கொண்டே போகலாம். பொதுவாக எதை ஒன்றையும் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் அதற்கு நாம் அடிமையாகி விட்டோம் என்று அர்த்தம்.இதன்பால் ஈர்க்கப் படுபவர்களின் உடல் நலனையும், வாழ்க்கையையும், மகிழ்ச்சியையும் தொலைத்துக் கட்டிவிடும். அதோடு பலரை கடனாளியாக மாற்றி தெருவிலும், நோயாளியாக மாற்றி மருத்துவமனையிலும் அலைய வைத்து விடும். இந்தப் பழக்கம் அதிகமானால் உயிருக்குக்கூட உத்தரவாதமில்லை.நண்பர்களுடன் விளையாட்டாகவும், திரைப்படத்தை பார்த்தும், தெரிந்த நபரின் தூண்டுதலாலும், தாக்கத்தாலும் பரிட்சயம் ஆகும் மது பழக்கமானது சிறிது காலத்தில் அதிலிருந்து மீள முடியாத அளவிற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது. மது ஒரு அமைதியூட்டி, என்று நம்புவது அறியாமை. அது அடிமைப்படுத்தும் தன்மையுடையது மதுப்பழக்கத்தால் மனநோய் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியம் அதிகம் உண்டு.
இந்நிலையில் இந்த மதுப் பழக்கத்திலிருந்து மீண்டு வருபவர்களும் இருக்கிறார்கள். இப்படி குடிப்பழக்கத்தினை நிறுத்தியவுடன் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு அதிலிருந்து மீண்டு வருகின்றனர் என்பதை விளக்கும் ஆய்வாக ஒரு சோதனை நடந்தது. இதில் மனித மூளையில் பேச்சு, செயல்பாடுகள், தீர்மானமெடுத்தல் ஆகியவற்றை நிகழ்த்துகிற பகுதிகள் மதுவால் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. ஒருவர் எப்போதாவதுதான் குடிக்கிறார் என்றால், அவருடைய மூளை மதுவின் தாக்கத்திலிருந்து விடுபட்டு இயல்பாக இயங்கத்தொடங்குகிறது. ஆனால், அவர் மதுவைச்சார்ந்து வாழ்கிறார், அடிக்கடி குடித்துக்கொண்டே இருக்கிறார் என்றால், மூளையால் அந்தத் தாக்கத்திலிருந்து விடுபட இயலுவதில்லை. சிறிதுநேரத்தில் அவரது உடல் தெளிவாகிவிடலாம், ஆனால், மூளை இன்னும் பாதிப்பிலேயே இருக்கிறது.
அது தெரிந்ததை அடுத்து குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு ஆல்கஹால் யூஸ் டிஸாடர் AUD என்னும் மூளையின் கார்டெக்ஸ் அடுக்கு மெலிந்தும் சுருங்கும் பாதிப்பானது ஏற்படுவதும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. எனவே இதனை அடிப்படையாக வைத்து ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனநல மருத்துவர் மற்றும் நடத்தையியல் நிபுணரான டிமோதி டுராஸ்ஸோ தலைமையிலான அமெரிக்க விஞ்ஞானிகள் குழு இந்த புதிய ஆய்வை நடத்தியது. இதன் முலம் மது அருந்துவதை நிறுத்திய பிறகு 7.3 மாதங்களில் மூளையானது அதனால் மூளையில் ஏற்பட்ட எல்லா பாதிப்பினையும் விரைவாக தானாக சரிசெய்கிறது என்று இவ்வாய்வானது சுட்டி காட்டுகிறது.
இதற்கு முந்தைய ஆய்வானது குடிப்பழக்கத்தை நிறுத்திய பிறகு பாதிக்கப்பட்ட சில பகுதிகள் குணமடைகிறது என்று முந்தைய தெரிவிக்கிறது. ஆனால் எவ்வளவு காலங்களில் அது சரி செய்யப்படுகிறது என்பது குறித்து தெளிவாக விளக்கவில்லை. ஆனால் இவ்வாய்வில் குணமடையும் காலம் என்பது சரியாக கணிக்கப்பட்டுள்ளது.
ஆய்வின் விவரம்:
அமெரிக்காவில் சுமார் 16 மில்லியன் மக்கள் AUD நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இது ஒரு பொது நல பிரச்னையாக பார்க்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூளையின் முடிவெடுக்கும் மற்றும் திட்டமிடும் திறன் பாதிப்படைகிறது. எனவே இவ்வாய்விற்காக AUD ஆல் பாதிக்கப்பட்ட 88 பேர் கலந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். சுமார் 1 வாரம், 1 மாதம், 7.3 வது மாதங்களில் AUD ஆல் பாதிக்கப்பட்ட இவர்களின் மூளையானது ஸ்கேன் செய்யப்படுகிறது. ஆனால் 23 நபர்கள் 1 வாரத்திற்கு எந்த வித ஸ்கேனையும் எடுக்கவில்லை. கலந்துகொண்ட 88 பேரில் 40 பேர் மட்டுமே முழு மாதத்திற்கும் மது அருந்தாமல் வைக்கப்படுகிறார்கள்,
இதனையடுத்து AUD ஆல் பாதிக்கப்படாத 45 பேர் இதில் கலந்து கொள்கின்றனர். இவர்களின் கார்டெக்ஸ் பகுதியின் தடிமனும் 9 மாதம் கழித்து ஸ்கேன் செய்து சோதனை செய்யப்படுகிறது. அதில் கார்டெக்ஸ் பகுதியானது 9 மாதங்களுக்கு முன்பு எப்படி இருந்ததோ அவ்வாறே 9 மாதங்களுக்கு பிறகும் இருந்தது என்பது இதன் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இப்படி AUD ஆல் பாதிக்கப்பட்டவர்கள் 7.3 மாதத்தில் மது அருந்துவதை கைவிட்டவர்களின் மூளையானது இயல் நிலையை அடைகிறது” என்று இவ்வாய்வானது தெரிவிக்கிறது.
மதுவுக்கு அடிமையாதல்: சில உண்மைகள்
இரண்டு பேர் மது அருந்துகிறார்கள் என்றால், அவர்களில் ஒருவர் தீவிர மதுப்பழக்கத்துக்கு ஆளாகும் வாய்ப்புகள் உள்ளன என்கிறது உலகச் சுகாதார அமைப்பு (WHO).
மது அருந்தாதவர்களுடன் ஒப்பிடும்போது, மது அருந்துகிறவர்களுக்குக் குறிப்பிடத்தக்க உடல்நலப் பிரச்னைகள் வருகிற வாய்ப்புகள் மூன்று மடங்கு அதிகம்.
இந்தியாவில் உடல்நலம் கெட்டுப்போய் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறவர்களில் ஐந்தில் ஒருவர் மதுப்பழக்கத்தால்தான் அந்த நிலைக்கு ஆளாகியுள்ளார்.
காயம் காரணமாக மருத்துவமனைக்கு வருகிறவர்களைக் கவனித்தால், அவர்களில் மூன்றில் இரண்டு பேருக்குக் காயம் ஏற்பட்ட காரணம் மதுவாகவே உள்ளது, அதேபோல், மூளை அதிர்ச்சிக் காயத்தால் மருத்துவமனைக்கு வருகிறவர்களில் ஐந்தில் ஒருவர் மதுப் பிரச்னையாலேயே அந்த நிலைக்கு ஆளாகியுள்ளார்கள்.
மது அருந்துவோர் வன்முறையில் ஈடுபடும் வாய்ப்பு அதிகம், குறிப்பாக, அவர்கள் தங்களுடைய துணைவர்களிடம் வன்முறையாக நடந்துகொள்ளக்கூடும். இங்கே வன்முறை என்பது, உடல்சார்ந்த, பாலியல்சார்ந்த, உணர்வுசார்ந்த, பொருளாதாரம்சார்ந்த வன்முறையாக இருக்கலாம்.
மது அருந்துவோர் தற்கொலை செய்து கொள்கிற வாய்ப்பு அதிகம், அவர்கள் ஆபத்தான பாலியல் பழக்கங்களில் ஈடுபடுகிற வாய்ப்பு அதிகம், அவர்களுக்கு HIV நோய்த்தொற்று, TB, உணவுக்குழாய்ப் புற்றுநோய், கல்லீரல் நோய் மற்றும் சிறுகுடல் புண் ஆகியவை வருகிற வாய்ப்பு அதிகம்.
தச்சை குமார்