தமிழ் குரல் / AI Voice
திரிவேணி சங்கமத்தில் வரும் 26ம் தேதி நான்கு சங்கராச்சார்யார்கள் மற்றும் 13 அகாரா அமைப்பின் தலைவர்கள் கூடி, சனாதன வாரியம் அமைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளனர். இந்த தீர்மானம் இந்துக்களின் சார்பில், மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டு சனாதன வாரியத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்க நெருக்கடி தர திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் சனாதன தர்மத்தைக் காக்கவும், இந்து கோயில்கள், நிலங்களை மீட்கவும் சனாதன வாரியம் அவசியம் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது.

நாட்டிலுள்ள மற்ற சிறுபான்மை மதங்களான ஜெயின், புத்தமதம், சீக்கிய மற்றும் கிறிஸ்தவ மதங்களுக்கு இல்லாத உரிமை வக்பு வாரியம் மூலம் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு தனி சட்டதிட்டங்களுடன் இயங்கி வருகிறார்கள். அந்த வக்பு வாரியம் 1913-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் உருவாக்கப்பட்டது, பின்னர் 1923-ம் ஆண்டு முசல்மான் வக்ப் சட்டம் கொண்டு வரப்பட்டது.சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியில் 1954 மற்றும் 1995-ம் ஆண்டுகளிலும் சட்டம் திருத்தப்பட்டு, சகல மாநிலங்களிலும் வக்பு வாரியம் இயங்கி வருகிறது. இது மதச்சார்பின்மைக்கு எதிரானது என்ற வாதத்தை ஒரு தரப்பினர் முன் வைக்கின்றனர்.வக்பு வாரியத்தை நீக்க வேண்டும் அல்லது சனாதன வாரியத்தை சட்டப்பூர்வமாக கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
சனாதன வாரியத்தின் மூலம் இந்துக்களின் கோயில்களை அரசின் பிடியிலிருந்து விடுவித்து இந்துக்களே நிர்வகிக்கப்போகிறோம் என்று மத தலைவர்கள் அறிவிப்பது இந்துக்கள் மத்தியில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். மத விவகாரங்கள் எப்போதுமே எளிதில் சர்ச்சையை உருவாக்குபவை. அதுவும் இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் சிறுசலசலப்புகூட புயலைக் கிளப்பிவிடும் .அதிலும் மத்தியில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்துவரும் நிலையில், இந்துமத துறவிகள் மற்றும் மடாதிபதிகளின் நெருக்கடி மத்திய அரசுக்கு தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. சனாதன வாரியம் என்று ஒன்றை உருவாக்கி விட்டால்தான் வக்பு வாரியம் பற்றிய கேள்வி எழாது என மத்திய அரசு நினைக்க வாய்ப்பு உள்ளது என்பதே நிதர்சனம்
