‘குற்றம் தவிர் ‘பட ஆடியோ& டிரைலர் லாஞ்ச் ஈவன்ட்ஸ் ஹைலைட்ஸ்!

‘குற்றம் தவிர் ‘பட ஆடியோ& டிரைலர் லாஞ்ச் ஈவன்ட்ஸ் ஹைலைட்ஸ்!

ஸ்ரீசாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில் பாண்டுரங்கன் தயாரிப்பில், கஜேந்திரா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘குற்றம் தவிர்’.இப்படத்தில்  ரிஷி ரித்விக் நாயகனாகவும் ஆராதியா நாயகியாகவும் நடிக்க,சித்தப்பு சரவணன், வினோதினி, ஆனந்த் பாபு,செண்ட்ராயன், ஜார்ஜ் விஜய்,சாய்தீனா , மீசை ராஜேந்திரன் ,ராணுவ வீரர் காமராஜ்,குழந்தை சாய் சைந்தவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ரோவின் பாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.எடிட்டிங் ரஞ்சித். பாடல்கள் கு.கார்த்திக்.இந்த ‘குற்றம் தவிர் ‘படத்தின் முன்னோட்டம், பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.’குற்றம் தவிர் ‘ படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்களை கங்கை அமரன் வெளியிட்டார். விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அதிமுக கட்சியை சேர்ந்த ஈ. . புகழேந்தி, ஆன்மீகவாதி ஜெய்பிரகாஷ் குருஜி,தொழிலதிபர் பிரகாஷ் பழனி ,இயக்குநர்கள் ஆர்.அரவிந்தராஜ், பேரரசு,பவித்ரன், ராஜகுமாரன், நடிகர் சித்தப்பு சரவணன் மற்றும் படக்குழுவினர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

படத்தின் தயாரிப்பாளர் பாண்டுரங்கன் அனைவரையும் வரவேற்றுப் பேசும்போது.””நாங்கள் பெங்களூரில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்திருந்தாலும் படப்பிடிப்புகள் பெரும்பாலும் அங்கே நடந்திருந்தாலும் தமிழ்நாட்டு நடிகர்களையே முழுதாகப் பயன்படுத்திப் படம் எடுத்து இருக்கிறோம். ஒரு திரைப்படத்தின் மூலம் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்க முடிகிறது .அவர்கள் குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடிகிறது .இந்தப் படத்தை வெற்றி பெற வைத்தால் மீண்டும் படமெடுப்பேன். அதேபோல் நான் பலருக்கும் வேலை வாய்ப்பு கொடுப்பேன்.எனவே இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

முன்னோட்டம் மற்றும் பாடல்களை வெளியிட்டு இயக்குநர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் கங்கை அமரன் பேசும்போது, “முதலில் கர்நாடகத்திலிருந்து படம் எடுக்க வந்துள்ள இவர்களை வரவேற்கிறேன்.இங்கே கதாநாயகன் நாயகி தோன்றிய காட்சிகளைப் பார்த்தேன்.பொதுவாக இதுபோல வெளியீட்டு நிகழ்ச்சிகளில் படத்தின் பாடல்களைப் போடுகிறார்கள், சண்டைக் காட்சிகளைப் போடுகிறார்கள். ஆனால், சென்டிமெண்ட் காட்சிகளையோ நகைச்சுவைக் காட்சிகளையோ போடுவதில்லை .இனி அதையும் போட்டுக் காட்ட வேண்டும் . அதையும் சேர்த்துக் காட்டுங்கப்பா .அதைப் பார்க்கும் போது தான் நடிகர்களுக்கு நடிப்புக்கான மதிப்பெண் கொடுக்க முடியும். இது ஒரு அறிவுரை என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்.எப்போதும் நான் வெளிப்படையாகப் பேசுவேன். ஏதாவது குறை இருந்தாலும் சொல்வேன். எனக்கு மனதில் தோன்றியதைச் சொன்னேன் .அந்தச் சுவைகளுடன் இந்தச் சுவைகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா நன்றாக இசையமைத்துள்ளார் .அவர் எனது உறவினர் தான். நம்ம வீட்டுப் பிள்ளை. இந்தப் படத்தின் தயாரிப்பாளரின் நண்பர் சுவாமிஜி இங்கே வந்திருக்கிறார். அவருக்கும் எனக்கும் நல்ல பழக்கம். என்னை அழைத்து அங்கே பெரிய மரியாதை எல்லாம் செய்தார்கள்.இங்கே செண்ட்ராயன் வந்திருக்கிறார் அவர் எங்கள் பக்கத்து ஊர்க்காரர் தான். அவர் பிக் பாஸ் ரகசியங்களை இங்கே சொல்ல வேண்டும்.பெங்களூரில் இருந்து படம் எடுக்க இங்கே வந்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்”என்றவர் ‘மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே ‘என்ற மூகாம்பிகைப் பாடலை முழுதாகப் பாடி முடித்துப் படக் குழுவினரை வாழ்த்தினார்.

இயக்குநர் கஜேந்திரா பேசும்போது,”இது எங்களுக்கு முதல் படம்.நாங்கள் புதிதாகப் படம் எடுக்க வந்திருக்கிறோம் அனைத்து நடிகர்களையும் சென்னையில் இருந்து வரவழைத்து ஒரு தமிழ்ப் படத்தை எடுத்திருக்கிறோம். இதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் .தயாரிப்பாளர் இல்லாமல் திரைப்படம் எடுக்க முடியாது. படப்பிடிப்பில் எந்தக் குறையும் இல்லாமல் அவர் எங்கள் அனைவரையும் நன்றாகப் பார்த்துக் கொண்டார்” என்றார்.

கதாநாயகனாக நடிக்கும் ரிஷி ரித்விக் பேசும்போது,” நான் வில்லனாக நடித்து வந்தேன் .இப்போது இதில் கதாநாயகனாக நடிக்க வைத்திருக்கிறார்கள். பெங்களூரிலிருந்து படம் எடுக்க வந்திருக்கிறார்கள் என்ற போது நான் முதலில் யோசித்தேன். ஆனால் தயாரிப்பாளர் உடனே ஒரு லட்ச ரூபாய் எனக்கு அட்வான்ஸ் கொடுத்து புக் செய்தார்கள். எந்தப் பிரச்சினையும் இல்லாமல் படப்பிடிப்பு மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது .உடன் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. பருத்திவீரன் படத்தில் பார்த்து நான் வியந்த சரவணன் சார் இப்படத்தில் நடித்தது பெருமையாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் பாஸ்கர், எடிட்டர் ரஞ்சித் போன்றவர்களின் ஈடுபாடும் உழைப்பும் சாதாரணமானதல்ல.அனைவரும் சேர்ந்து விருப்பத்தோடு சிரமப்பட்டு எடுத்திருக்கிறோம்.
படம் ஒரு நல்ல கருத்தைப் பற்றிப் பேசுகிறது . இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றார்.

கதாநாயகி நடிகை ஆராதியா பேசும்போது,” ஒவ்வொரு படத்தையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைச் சிறப்பாகச் செய்யும் ஊடகங்களுக்கு நன்றி .இந்தப் படத்தையும் கொண்டு செல்லுங்கள் . ‘மதிமாறன்’ படத்தில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது .அதன் மூலம் என்னை அனைவருக்கும் தெரிய வைத்த இயக்குநர் மந்த்ரா சாருக்கு நன்றி .நான் இதுவரை 12 படங்கள் நடித்திருக்கிறேன். ஒன்றுதான் வெளியாகி இருக்கிறது. மற்றவை வெளிவர உள்ளன. இந்தப் படத்தில் தயாரிப்பாளர்,அவரது குழுவினர் எங்களை நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள்.முதன் முதலில் இதில் நடனமாடி நடித்திருக்கிறேன். அந்தக் காட்சியைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி “என்றார்.

பருத்திவீரன் சரவணன் பேசும் போது,”நான் இதில் வில்லனாக நடித்திருக்கிறேன்.இந்த படப்பிடிப்பு பெங்களூர், கர்நாடகா பகுதி என்று நடந்தது. தமிழ்நாட்டில் இருந்து படப்பிடிப்புக்காக அங்கே செல்கிறோம் எப்படி இருக்குமோ என்று தயங்கியபடியே சென்றேன். ஆனால் ஏர்போர்ட்டில் இறங்கியது முதல் அவர்கள் என்னை வரவேற்று அழைத்துச் சென்று தங்க வைத்து உபசரித்தது வரை மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.படப்பிடிப்பின் போதும் நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள்,இப்படிக் கடைசி வரை நடந்து கொண்டார்கள். அவர்களின் அந்த நல்ல மனதிற்காக இந்தப் படம் வெற்றி பெற வேண்டும். பாடல்கள் சிறப்பாக உள்ளன.தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்கள்” என்றார்

நடிகர் செண்ட்ராயன் பேசும்போது,”இந்தப் படத்தில் எனக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் நல்ல சம்பளம் கொடுத்தார் .பாக்கி வைக்காமல் அவ்வப்போது செட்டில் செய்து கொண்டே இருந்தார்கள்.நான் பெங்களூர் படப்பிடிப்பு என்றதும் கர்நாடகாவில் இருப்பவர்களுக்குத் தமிழ் தெரியாதே என்று சில கன்னட வார்த்தைகளை எல்லாம் கஷ்டப்பட்டுக் கற்றுக் கொண்டு போனேன். ஆனால் அங்கே போய்ப் பார்த்தால் எல்லாருமே தமிழ் பேசினார்கள். பெங்களூரில் உள்ளவர்கள் தமிழ், கன்னடம், இந்தி, தெலுங்கு எல்லாமும் பேசுகிறார்கள். அது ஒரு பேன் இந்தியா நகரமாகத் தோன்றியது .அனைவரும் ஒன்றாக இருக்கிறார்கள்”ன்றார்.

நடிகர் மீசை ராஜேந்திரன் பேசும்போது,”பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கிய சினிமா எத்தனையோ வளர்ச்சியைப் பெற்று இன்று வளர்ந்து இருக்கிறது. இந்தப் படத்தில் எனக்கு ஒரு நல்ல பாத்திரத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். பெரிய நட்சத்திரங்கள் இருந்தாலும் கதை இருந்தால் தான் படம் ஓடும் .இதில் கதையை நம்பி படம் எடுத்திருக்கிறார்கள்.இயக்குநர் தான் எதிர்பார்த்தது வரும் வரை விட மாட்டார் .அந்த அளவிற்கு மெனக்கெடுவார்.இந்தப் படத்தில் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம்” என்றார்.

நடிகர் சாய் தீனா பேசும்போது,” பொதுவாக படப்பிடிப்புகளில் பேச வேண்டிய வசனங்களை பேப்பரில் காண்பிப்பார்கள், தருவார்கள்.இந்த இயக்குநர் படப்பிடிப்பில் டயலாக் பேப்பரையே காட்டியதில்லை. அதை அவர் கையில் நான் பார்த்ததே கிடையாது .ஆனால் இப்படி இருந்தே ஒரு முழுப்படத்தையும் முடித்து விட்டார்”என்றார்.

நடிகை வினோதினி பேசும்போது,”இயக்குநருக்கு தமிழ் எழுதவே தெரியாது அதனால்தான் டயலாக் பேப்பர் எழுதவில்லை.இருந்தாலும் இந்தப் படத்தைச் சிறப்பாக முடித்தார். திரைப்படத்திற்கு தயாரிப்பாளர் தான் அடித்தளம் . முதலில் தயாரிப்பாளரைப் பார்த்தபோது இந்த படத்தை எப்படி எடுப்பாரோ? என்று நினைத்தேன் .இந்தப் படத்தை எப்படிக் கொண்டு போய் சேர்ப்பாரோ என்று கேள்வி இருந்தது. ஆனால் அவர் அனைத்தையும் தேர்ந்தெடுத்து தேர்ந்தெடுத்து, திட்டமிட்டுச் செய்தார் .அனைத்தையும் தொடர்ச்சியாகப் பின்பற்றி வந்தார். திட்டமிட்டுச் செயல்படுவதில் அவர் என்னை ஆச்சரியப்படுத்தினார். ஒரு திரைப்பட விழாவுக்கு இத்தனை பேர் வந்திருக்கிறார்கள் . அந்த அளவிற்கு அவர் உறவுகளைச் சேர்த்து வைத்துள்ளார் .இந்த உறவுகளே அவருக்கு வெற்றியைத் தேடித் தரும் .இந்தப் படத்தில் நான் ஒரு அம்மா பாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.பழம்பெரும் நடிகர் நாகேஷின் மகன் ஆனந்த் பாபு உடன் இணைந்து நடித்திருக்கிறேன்.அந்தக் குழந்தை சைந்தவி கூட நடித்தது மறக்க முடியாது. முதல் படம் போலவே தெரியவில்லை, சிறப்பாக நடித்தாள். நான் நடித்த அம்மா பாடல் சிறப்பாக வந்துள்ளது.அனைவருக்கும் நன்றி “என்றார்.

ராணுவ வீரரும் நடிகருமான காமராஜ் பேசும்போது,” இதுவரை தைரியம், ஐ, மெர்சல், சிங்கம் 3 ,சுல்தான் போன்ற படங்களில் நான் நடித்திருக்கிறேன் .,நான் இந்திய ராணுவத்தில் பணியாற்றுகிறேன் .எனது முகநூல் பார்த்து ஐ பட வாய்ப்பு கொடுத்த ஷங்கர் அவர்களை மறக்க முடியாது.இந்தப் படத்தில் நான் ஒரு பாத்திரத்தில் வருகிறேன்.சினிமா ஆர்வம்தான் என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. சினிமா அனைத்தையும் கற்றுக் கொடுக்கும் வாரம் ஒரு சினிமாவைக் குழந்தைகளுக்குக் காட்டுங்கள்” என்றார்.

நடிகர் ஜார்ஜ் விஜய் பேசும் போது, “இந்தப் படத்தின் போஸ்டர் ட்ரெண்டிங்கில் வந்தது. அதை வெளியிட வேண்டும் என்று முன்னணி நடிகர்களை அணுகிய போது யாருமே கண்டு கொள்ளவில்லை.ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டால் தான் சினிமா முன்னுக்கு வரும். நான் கவலையோடு இருந்த போது எனக்கு ஒரு வாசகம் வந்தது. ‘என் கிருபை உனக்குப் போதும்’ என்றது அப்படி பல பெரியவர்களின் கிருபை இங்கே இந்தப் படக் குழுவிற்கு வந்துள்ளது”என்றார்.

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசும்போது,”நான் ஒரு பாடல் காட்சியில் ஆடி நடித்தேன்.அதன் படப்பிடிப்பு இரவு 7 மணிக்கு தொடங்கி 10 மணி வரை சென்றது. ஒரு குடிசைப்பகுதியில் நடந்தது. சுற்றிலும் மக்கள் கூடி இருந்தார்கள்.பத்து மணிக்கு சாப்பாடு வந்திருந்தது.ஆடிய களைப்பு பசியாக இருந்தது.சாப்பிடலாம் என்று திரும்பிப் பார்த்தபோது சாப்பாடு எங்கள் கைக்கு வரவில்லை. தயாரிப்பாளர் பாண்டுரங்கன் அதை எல்லாம் கூடி இருந்த மக்களுக்குக் கொடுத்து விட்டார்.சில நிமிடங்கள் பொறுத்து இருங்கள் என்று எங்களுக்குப் புதிதாக வரவழைத்துக் கொடுத்தார்.அப்படிப்பட்ட நல்ல மனதுக்காரர் பாண்டுரங்கன்.இந்தப் படத்திற்காக சிவகாசி மாதிரி பாடல்களைக் கேட்டு வாங்கிக் கொண்டார்கள்.அந்த சிவகாசி வாய்ப்பை கொடுத்த பேரரசு சார் இங்கே வந்திருக்கிறார். என்னை விஜய் படம் கொடுத்துப் பெரிய ஆளாக்கி விட்டவர் அவர்.இந்தப் படத்தில் அப்பா பாடல் பாடியது சிறப்பானது. படம் வெற்றிபெறும் என்று வாழ்த்துகிறேன் “என்றார்.

விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கும் படக் குழுவினருக்கும் தயாரிப்பாளர் பாண்டுரங்கன் பொன்னாடை போர்த்தி வரவேற்று கர்நாடகத்துப் பாரம்பரிய முறையில் தலைப்பாகை அணிவித்து மரியாதை செய்தது,எந்தவொரு தமிழ் திரைப்பட திருவிழாவிலும் காண முடியாத பண்பாட்டுச் செயல் பாடாக இருந்தது.

error: Content is protected !!