மாஞ்சோலை சர்ச்சை : ஐகோர்ட் புது ஆறுதல் உத்தரவு!

மாஞ்சோலை சர்ச்சை : ஐகோர்ட் புது ஆறுதல் உத்தரவு!

நெல்லை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது மாஞ்சோலை தேயிலைத் தோட்டம். இந்தத் தேயிலைத் தோட்டத்தை வாடியா குழுமத்திற்குச் சொந்தமான ‘பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட்’ (பி.பி.டி.சி.எல்) என்ற நிறுவனம் நடத்தி வருகிறது.இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக இந்தத் தோட்டம் அமைந்திருக்கும் வனப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீன்தாரிடமிருந்து 99 வருட குத்தகைக்கு எடுத்த பி.பி.டி.சி.எல், இப்பகுதியில் தேயிலை, ஏலக்காய், கொய்னா, மிளகு தோட்டங்களை உருவாக்கியது.

சிங்கம்பட்டி ஜமீனுடனான குத்தகை, 1929-ஆம் ஆண்டு துவங்கியதால், 2028-ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது. அதற்குப் பிறகு, இந்த வனப்பகுதி தமிழ்நாடு அரசின் வசம் சென்றுவிடும். இந்த எஸ்டேட்டைச் சுற்றியுள்ள பல பகுதிகளை காப்புக்காடுகளாக அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்தப் பகுதியையும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்படவுள்ளது. 2028-க்குள் நிலத்தை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதால், இதில் பணியாற்றிவந்த 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வுக்கான நோட்டீஸ் வழங்கப்பட்டுவிட்டது. விருப்ப ஓய்வுத் திட்டத்தை ஏற்பவர்களுக்கு அவர்களது வயதைப் பொறுத்து, ஒன்றே முக்கால் லட்சம் முதல் மூன்று லட்சம் வரை இழப்பீட்டுத் தொகையாகக் கிடைக்கும். ஜூன் 14-ஆம் தேதி கடைசி வேலை நாளாகாவும் அறிவிக்கப்பட்டுவிட்டது.

மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் என பேச்சு வழக்கில் குறிப்பிடப்படும் ‘சிங்கம்பட்டி எஸ்டேட் தேயிலைத் தோட்டம்’, ஆரம்பத்தில் காக்கச்சி, ஊத்து, குதிரைவெட்டி, நாலுமுக்கு ஆகிய ஐந்து ஊர்களைக் குறிப்பிடுகிறது. குதிரைவெட்டி, காக்காச்சி ஆகிய இடங்களில் இருந்த தோட்டங்கள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்ட நிலையில், தற்போது மீதமுள்ள ஊர்களில் உள்ள தேயிலைத் தோட்டங்களும் மூடப்படுகின்றன. இதனால், தலைமுறை, தலைமுறையாக இங்கு வசித்தவர்கள் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர்.

இந்நிலையில் இப்பிரச்னை குறித்து மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா என்றப் பெண் ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல மனுத்தாக்கல்  செய்தார்.

அம் மனுவில்,“நான்கு தலைமுறைகளாக மாஞ்சோலை பகுதியில் 700 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த தேயிலை தோட்டத்திற்கான குத்தகை காலம் 2028-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது. ஆனால் குத்தகை காலம் நிறைவடைவதற்கு முன்பாகவே பி.பி.டி.சி என்ற தனியார் நிறுவனம், தேயிலை தோட்ட தொழிலாளர்களை ஆகஸ்ட் 7-ம் தேதிக்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நான்கு தலைமுறைகளாக இதே பகுதியில் வசித்து வரும் சூழலில், தற்போது வெளியேற சொல்வதால் செய்வதறியாது தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.

எனவே மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடு வசதி போன்றவற்றை செய்து தர வேண்டும். தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கன்னியாகுமரி அரசு ரப்பர் தோட்டக்கழகம், களக்காடு முண்டந்துறை சரணாலய பகுதிகள், அங்கன்வாடிகள் போன்றவைகளில் பணி வழங்க வேண்டும். மேலும் மறுவாழ்வு ஏற்படுத்தும் வகையில், மறுப்பணி வாய்ப்பு வழங்கும் வரை ஒரு குடும்பத்தினருக்கு மாதம் ரூ.10,000 வழங்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, மறுவாழ்வு வசதிகளை செய்து தரும் வரை அங்கிருந்து, அவர்களை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. மத்திய, மாநில அரசு தரப்பில் வெள்ளிக்கிழமை உரிய விளக்கம் அளிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டு, இந்த வழக்கு விசாரணையை ஜூன் 21-ம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கின்றனர்.

நிலவளம் ரெங்கராஜன்

error: Content is protected !!