சென்னை மெரினாவில் லூப் சாலை – மத்திய அரசுக்கு நோட்டீஸ்!

சென்னை மெரினாவில் லூப் சாலை – மத்திய அரசுக்கு நோட்டீஸ்!

தற்போது சென்னை மக்களின் ஒரே இலவச பொழுது போக்கு ஸ்தலமான “மெரினா பீச்” இருக்கும் இடத்தில் ஆரம்பத்தில் கடற்கரை எதுவும் இல்லை. இன்றைய தமிழ்நாடு சட்டமன்றம் இயங்கும் “செயின்ட் ஜார்ஜ் கோட்டை” கட்டும்போது வங்கக் கடல் மிக அருகில் இருந்திருக்கிறது. சில சமயங்களில் அலைகள் கோட்டைச் சுவரை மோதும். சென்னையில் 1875இல் முதன்முலாக துறைமுகம் கட்ட ஆரம்பித்தபோது கடலைத் தடுத்து தென்பக்கமாக சுவர் எழுப்பி உள்ளனர்.

பொதுவாக, வங்காள விரிகுடாவில் கலக்கும் கோதாவரி, கிருஷ்ணா உள்ளிட்ட நதிகளில் இருந்து வரும் மணல் சுழற்சியால் தென்பக்கமாகச் செல்லும். அப்படி வரும் மணல் மட்டும் எட்டாயிரம் கியூபிக் மீட்டர்! அந்த வகையில் துறைமுகத்துக்காக இந்த மணல் தடுக்கப்பட, ஒரே ஆண்டில் 40 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு குவிந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் கடல் பின்னுக்குச் சென்று மணல் மட்டும் சேர்ந்துள்ளது. இப்படி ஒவ்வொரு வருடமும் 40 சதுர கிலோ மீட்டர் மணல் அதிகரிக்க, பீச் நீளமாகியிருக்கிறது.

1881இல் மதராஸ் மாகாண கவர்னராக இருந்த மவுண்ட் ஸ்டுவர்ட் என்பின்ஸ்டன் கிராண்ட்டஃப் துறைமுகம் தாண்டி மணல் சேர்வதை பார்த்துள்ளார். “ஏழரை மைல் நீளத்துக்கு ஒரு கடற்கரை. பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு. ஏன் இதில் உலவும் சாலை அமைக்கக் கூடாது?’’ என்று கேள்வி அவர் மனதில் உதிக்க, உடனே உருவாகியிருக்கிறது பாதை. ஒரு காலத்தில் பெசன்ட் நகரின் எலியட்ஸ் பீச் வரை இந்தப் பாதை இருந்துள்ளது.

இத்தாலியில் பால்மரோ கடற்கரை மிக பிரபலம். அதற்கு ‘மெரினா’ என்று பெயர். அந்த ஞாபகத்தில் கவர்னர் மவுண்ட் ஸ்டூவர்ட்தான் 1884இல் ‘மெட்ராஸ் மெரினா’ என பெயர் வைத்தார். இத்தாலி மொழியில் மெரினா என்றால் கடல் சார்ந்தது என்று பொருள். இதிலிருந்து வந்த வார்த்தைதான் மெரினா. இந்த மெரினா கடற்கரையில், தற்போது கலங்கரை விளக்கம் முதல் பட்டினம்பாக்கம் லூப் சாலை வரை நடைபாதை அமைப்பது தொடர்பான விண்ணப்பம் குறித்து, 6 வார காலத்திற்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது, நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. ஏற்கனவே இந்த வழக்கில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 27.04 கோடி ரூபாய் செலவில், 900 தள்ளுவண்டி கடைகளை மாநகராட்சியே அமைத்துக் கொடுக்க இருப்பதாகவும் பிப்ரவரி முதல் வாரத்தில், தள்ளுவண்டி கடைகள் கொள்முதல் செய்வதற்காக டெண்டர் கோரப்பட உள்ளதாகவும், கலங்கரை விளக்கம் அருகில் ரூபாய் 66 லட்சம் செலவில் 300 தற்காலிக மீன் விற்பனை கடைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள், நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மாநில கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் ஆஜரான அதன் உறுப்பினர் செயலர், டாக்டர்.ஜெயந்தி, கலங்கரை விளக்கம் முதல் பட்டினம்பாக்கம் வரை லூப் சாலையில் நடைபாதை அமைக்கும் திட்டம் தொடர்பான சென்னை மாநகராட்சியின் விண்ணப்பம், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து, சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறி ஞர் எஸ்.ஆர் ராஜகோபால், மெரினாவில் வியாபாரிகளுக்கு வழங்குவதற்காகத் தள்ளுவண்டி கடைகள் கொள்முதலுக்கான டெண்டர் மற்றும் கடைகள் வாடகை நிர்ணயம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமெனக் கோரினார்.

மெரினாவை உலகத்தர கடற்கரையாக மாற்றுவதே தங்கள் நோக்கம் எனவும், எந்த வகையிலும் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாது எனவும் தெரிவித்த நீதிபதிகள், லூப் சாலை யில் நடைபாதை அமைப்பது தொடர்பாக மாநில கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரை மீது 6 வார காலத்திற்குள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தன் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டனர். அதுபோல, மீன் பிடி தடைக் காலத்தின்போது கொடுக்கப் படும் மானியத் தொகையை அதிகரிக்கக் கோரிய பிரதான வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 4- ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Related Posts