தேசிய விளையாட்டுப் போட்டிகளில், தமிழ்நாடு மொத்தம் 38 பதக்கங்களுடன் 5 வது இடம் பிடித்தது!
இந்தியாவின் ஒலிம்பிக் என்று அழைக்கப்படும் தேசிய விளையாட்டுப் போட்டிகள் 1924 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 36-வது தேசிய விளையாட்டுப் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் ஆகிய நகரங்களில் செப்டம்பர் 29 ந்தேதி தொடங்கி அக்டோபர் 12 ந்தேதி வரையில் நடந்து வருகிறது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், ராணுவத்தின் சர்வீசஸ் அணி ஆகிய அணிகளைச் சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் நீச்சல், தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஆக்கி, கைப்பந்து உள்பட 36 விளையாட்டுகளில் ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது. கோகோ, யோகா, மல்லர் கம்பம் ஆகியவை அறிமுக போட்டியாக இதில் இடம் பெற்றுள்ளனது.
இந்த போட்டிகளில் இந்திய ராணுவத்தின் சர்வீசஸ் அணி 32 தங்கம், 18 வெள்ளி, 18 வெங்கலம் என மொத்தம் 68 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள அரியாணா மாநிலம் 28 தங்கம், 20 வெள்ளி, 15 வெங்கலம் என மொத்தம் 58 பதக்கங்கள் வென்றுள்ளது. 3 வது இடத்தில் 60 பதக்கங்களுடன் மகாராஷ்டிரா இடம் பிடித்துள்ளது. அந்த மாநிலம் 14 தங்கம், 15 வெள்ளி, 31 வெங்கலப் பதக்கங்களை பெற்றுள்ளது. உத்தரபிரதேசம் 14 தங்கம், 12 வெள்ளி, 9 வெங்கலம் என மொத்தம் 35 பதக்கங்களை பெற்று 4 வது இடம் பிடித்துள்ளது.
தமிழ்நாடு சார்பாக சென்ற வீரர்கள் நேற்று வரையில் 38 பதக்கங்களை வென்று 5 வது இடத்தை பிடித்துள்ளனர். இதில் 12 தங்கம் 12 வெள்ளி, 14 வெங்கலப் பதக்கங்களை தமிழ்நாட்டு வீரர்கள் வென்றுள்ளனர்.