மகளிர் உரிமைத் தொகை வந்துடுச்சுய்யா.. வந்துடுச்சு!. வரலைன்னா..?

மகளிர் உரிமைத் தொகை வந்துடுச்சுய்யா.. வந்துடுச்சு!. வரலைன்னா..?

திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தமிழக அரசால் இந்த மாதம் முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்ற பெயரில் நாளை காஞ்சிபுரத்தில் நடைபெறும் விழாவில் இந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வை2க்க இருக்கும் நிலையில் இன்றே பயனாளர்களின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கும் வேலையை தமிழக அரசு தொடங்கி விட்டது.

முன்னதாக இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு அறிக்கையில் கூறியிருப்பதாவது: குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகையாக வழங்கிட தமிழக அரசால் ‘கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பெற கடந்த ஜூலை 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை முதல் கட்டமாகவும், ஆக.5ம் தேதி முதல் ஆக.14ம் தேதி வரை இரண்டாவது கட்டமாகவும், விடுபட்டவர்களுக்கு ஆக.18ம் தேதி முதல் ஆக.20ம் தேதி வரை சிறப்பு முகாம் வழியாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டன. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டு1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகைதிட்ட விண்ணப்பதார்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை.

அதன்படி, விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு வரும் 18ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும்.

அதேபோல, வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு அலுவலராகச் செயல்படுவார். இணையதளம் மூலம் செய்யப்படும் மேல்முறையீடுகள், அரசு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டு, வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும். வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு விண்ணப்பங்களைத் தீர்வு செய்ய கள ஆய்வு தேவைப்படும் நேர்வுகளில், சம்பந்தப்பட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர்கள் வழி கள ஆய்வு அறிக்கையினைப் பெற்று விசாரணை செய்வார். இந்த மேல்முறையீடு நடைமுறைகள் அனைத்தும் இணையதளம் வழியாக மட்டுமே செய்யப்படும். மேலும், வருவாய் கோட்டாட்சியர் பயனாளிகளின் தகுதி மற்றும் தகுதியின்மைகள் தொடர்பாக தனி நபர்களின் மூலம் வரப்பெறும் புகார்கள் குறித்த விசாரணை அலுவலராக செயல்படுவார். இணையதளம் வழியாக பெறப்படும் புகார்கள் மேல் முறையீட்டு மனுக்களுக்கு பின்பற்றப்படும் நடைமுறைகளை பின்பற்றி விசாரிக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் 1.06 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது. மகளிரின் வங்கிக் கணக்கில் இந்த தொகை வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான மெசேஜ் வங்கியில் இருந்தும் அரசு தரப்பில் இருந்தும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாளை மாலைக்குள் அனைவருக்கும் மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.1000 முழுவதுமாக வழங்கப்பட வேண்டும் என்ற முதல்வரின் அறிவுறுத்தலை அடுத்து இன்று முதலே அந்த பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். தங்கள் வங்கிக் கணக்கில் பணம் ஆயிரம் வரவு வைக்கப்பட்டுள்ளது. தங்கள் வங்கிக் கணக்கில் ரூபாய் ஆயிரம் வரவு வைக்கப்பட்டுள்ள விஷயத்தை சக பெண்களிடம் கூறி இல்லத்தரசிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும்  மகளிர் உரிமை தொகைக்காக கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்கியுள்ள பயனாளர்களுக்கு பிரத்யேக ஏடிஎம் கார்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளது. பெண்களின் புகைப்படத்துடன் வலதுபுறம் திட்டத்தின் பெயரும், இடதுபுறம் கூட்டுறவு வங்கியின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. மற்றபடி ஏடிஎம் கார்டுகளில் உள்ள அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ஏடிஎம் கார்டுகள் சரிபார்க்கப்பட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் பயனாளர்களுக்கு படிப்படியாக அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!