காடுகளையும், அங்கு வாழும் அரிய வகை உயிரினங்களையும், நமது கலாச்சாரப் பொக்கிஷங்களையும் காப்பதற்காகத் தங்களின் இன்னுயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றும் வனப்பாதுகாவலர்கள் எனப்படும் ‘ரேஞ்சர்களை’க் கெளரவிக்கும் நாளே சர்வதேச வனப்பாதுகாவலர் தினம். பணியின் போது மரணமடைந்த அல்லது படுகாயமடைந்த வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்வதோடு, காடுகளைக் காக்க இரவு பகலாக உழைக்கும் அவர்களின் சேவையை உலகிற்குப் பறைசாற்றுவது இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.
இருபதாண்டுப் பயணம் மற்றும் 2026-ஆம் ஆண்டின் சிறப்புத் தீம்
சர்வதேச வனப்பாதுகாவலர் கூட்டமைப்பு (International Ranger Federation – IRF) சார்பில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 31 அன்று உலக வனப்பாதுகாவலர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது 2026-இல் தனது 20-ஆவது ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்கிறது.

இந்த முக்கிய மைல்கல் ஆண்டை முன்னிட்டு, IRF அமைப்பு “Rangers: Guardians of a Changing Planet” (மாறுபடும் கோளின் காவலர்கள்: பாதுகாப்பு, தைரியம் மற்றும் சேவையின் 20 ஆண்டுகள்) என்ற பிரத்யேகத் கருப்பொருளை (Theme) அறிவித்துள்ளது. காலநிலை மாற்றம் தீவிரமடைந்து வரும் இக்காலக்கட்டத்தில், மாறுபடும் புவியின் சூழலியல் சமநிலையைக் காப்பதில் ரேஞ்சர்களின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை இந்தத் தலைப்பு உணர்த்துகிறது.
ரேஞ்சர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் ஆபத்துகளும்
ஒரு ரேஞ்சரின் வாழ்க்கை என்பது சாதாரணமான பணி அல்ல. வேட்டைக்காரர்களின் நடமாட்டம், காடழிப்பு, வனவிலங்கு கடத்தல் போன்ற குற்றங்களைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் காட்டுத்தீ, வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சி போன்ற இயற்கைச் சீற்றங்களையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
மேலும், வனப் பகுதிகளை ஒட்டிய கிராமங்களில் அதிகரிக்கும் மனித-விலங்கு மோதல்களைத் தடுத்து, பொதுமக்களையும் வனவிலங்குகளையும் பாதுகாக்கும் இக்கட்டான சூழலில் அவர்கள் பணியாற்றுகின்றனர். கடத்தல்காரர்களின் துப்பாக்கிச் சூடு, விலங்குகளின் தாக்குதல் மற்றும் கடுமையான காலநிலை காரணமாக ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள் தங்களின் உயிரைத் தியாகம் செய்கின்றனர்.

பல்லுயிர் பெருக்கமும் இயற்கைச் சமநிலையும்
நமது பூமியின் பல்லுயிர் பெருக்கம் (Biodiversity) அழியாமல் இருப்பதற்கும், அரியவகைத் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் அடுத்த தலைமுறைக்குச் சென்று சேர்வதற்கும் ரேஞ்சர்களின் கண்காணிப்பு மிக அவசியமானது. காடுகளின் எல்லைகளைப் பாதுகாப்பது மட்டுமின்றி, கலாச்சாரப் பாரம்பரியமிக்க வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் மற்றும் தேசியப் பூங்காக்களையும் சிதையாமல் பேணிப் பாதுகாப்பதில் இவர்களின் பணி மகத்தானது.
மாறுபடும் உலகிற்கு ஏற்ப, நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வனக் குற்றங்களைக் குறைப்பதிலும், உள்ளூர் பழங்குடியின மக்களுடன் இணைந்து காடுகளைப் பாதுகாப்பதிலும் வனப்பாதுகாவலர்கள் புதிய சகாப்தத்தைப் படைத்து வருகின்றனர். காடுகளின் அமைதியையும், பூமியின் உயிர்ப்பையும் தங்கள் உழைப்பால் நிலைநிறுத்தும் இந்த உண்மையான கதாநாயகர்களின் தியாகத்தையும் தைரியத்தையும் இந்நாளில் போற்றி மதிப்போம்!
நிலவளம் ரெங்கராஜன்

