விமர்சனம்: க்ராணி (Granny)-பிஞ்சு இதயங்களைத் தேடும் பேய் பாட்டி!
பொதுவாக ‘பாட்டி’ என்றாலே நம் நினைவுக்கு வருவது அன்பும், வடை சுட்ட கதைகளும்தான். ஆனால், ஆங்கிலத்தில் ‘Granny’ என்று அழைக்கப்படும் பாட்டியை ஒரு ரத்தவெறி பிடித்த அரக்கியாகச் சித்தரித்திருக்கிறது இந்தத் திரைப்படம். அமானுஷ்யமும், அதீத கற்பனையும் கலந்த இந்த ‘க்ராணி’ ரசிகர்களை ஈர்த்ததா? பார்ப்போமா?.
கதைக்களம்:
ஐடி துறையில் இயந்திரத்தனமான வாழ்க்கையை வெறுக்கும் நாயகன் ஆனந்த் நாக், அமைதியைத் தேடித் தனது முன்னோர்கள் வாழ்ந்த காட்டுப் பகுதிக்குக் குடிபெயர்கிறார். மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஒரு பழைய பங்களாவில் விவசாயம் செய்யலாம் என அவர் போட்ட கணக்கு தப்பாகிறது.
அந்தப் பங்களாவிற்குள் நுழையும்போதே ஏதோ ஒரு அமானுஷ்யம் நிழலாடுகிறது. அங்கு ஒரு திகிலூட்டும் உருவமாக வந்து சேர்கிறார் வடிவுக்கரசி. அந்த ஊரில் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிறு குழந்தைகள் மர்மமான முறையில் கொல்லப்படுவதும், அவர்களின் இதயம் காணாமல் போவதும் தொடர்கதையாக இருக்கிறது. ஆனந்த் நாக்கின் குழந்தைகளுக்கும் அந்த ஆபத்து நெருங்க, அதன் பின்னணியில் இருக்கும் ரத்த சரித்திரம் வெளிச்சத்திற்கு வருகிறது.
ரத்தமும்… இளமையும்… (பிளாஷ் பேக்):
நித்திய இளமையுடன் வாழ வேண்டும் என்ற பேராசையில், 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் ஒரு அரிய மலரைக் கொண்டு கஷாயம் தயாரித்து, அதனுடன் குழந்தைகளின் இதயத்தைச் சேர்த்து உட்கொள்ளும் ஒரு பயங்கரக் கும்பலைப் பற்றியதுதான் இந்த படத்தின் மையக்கரு. முன்பு இதைப் பின்பற்றிய வடிவுக்கரசியின் கணவன் ஊராரால் எரிக்கப்பட, இப்போது அதே கொடூரத்தை வடிவுக்கரசி கையில் எடுக்கிறார்.
நடிகர்களின் பங்களிப்பு:
-
வடிவுக்கரசி: ‘அழகுக்கு அரசி’ என்று பெயர் பெற்றவரை, இவ்வளவு கோரமாகக் காட்ட இயக்குநருக்கு எப்படி மனது வந்ததோ தெரியவில்லை. ஆனால், அந்த மேக்கப்பில் தியேட்டரையே அலற விடுகிறார். குழந்தைகளின் இதயத்தைத் தடவிப் பார்க்கும் அந்தச் காட்சிகள் பார்ப்பவர் நரம்புகளைத் தளுதளுக்க வைக்கின்றன.
-
ஆனந்த் நாக் & திலீபன்: நாயகன் மற்றும் இன்ஸ்பெக்டராக வரும் திலீபன் ஆகிய இருவருமே கிழவியின் கொடூரத்திற்கு முன்னால் பலவீனமாகச் சித்தரிக்கப்பட்டது சற்றே அதிர்ச்சி.
-
சிங்கம்புலி: வெறும் காமெடிக்கு மட்டும் என நினைத்தால், கிளைமாக்ஸில் அதிரடி காட்டி கதையை முடித்து வைக்கிறார்.
-
குழந்தைகள்: படத்தில் வரும் சிறப்புக் குழந்தைககளின் நடிப்பு எதார்த்தம்.
தொழில்நுட்பம்:
மணிகண்டனின் ஒளிப்பதிவு படத்திற்குப் பெரும் பலம். குறிப்பாக கிழவியின் கோணத்தில் (Point of View) கேமராவைக் கையாண்ட விதம் திகிலைக் கூட்டுகிறது. செல்லியா பாண்டியனின் பின்னணி இசை நீளமான காட்சிகளுக்கு உயிர் கொடுக்கிறது.
ஆந்தை ரிப்போர்ட்டர் அலசல்:
இயக்குநர் விஜயகுமாரன் ஒரு ‘அம்புலிமாமா’ பாணி கதையை ஹாரர் வடிவில் கொடுக்க முயன்றுள்ளார். ஆனால், குழந்தைகளின் இதயத்தைத் தின்னும் பாட்டி என்ற கற்பனை சற்றே முகம் சுளிக்க வைக்கிறது. கஜராஜ் போன்ற கதாபாத்திரங்கள் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை.
பிளஸ்:
-
வடிவுக்கரசியின் மிரட்டலான நடிப்பு.
-
ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை.
மைனஸ்:
-
அதீத வன்முறை மற்றும் பலவீனமான திரைக்கதை.
-
சில தேவையற்ற கதாபாத்திரங்கள்.
மொத்தத்தில்: இந்த ‘க்ராணி’ – அச்சம் தருவதாக நினைத்துக் கொண்டு அயர்ச்சியைத் தருகிறாள்!
மார்க்: 2.25/5


