நெல்லையில் பிரம்மாண்ட ‘பொருநை அருங்காட்சியகம்’ திறப்பு!
தமிழ்நாட்டின் தொன்மையை உலகறியச் செய்யும் வகையில், நெல்லை அருகே 13 ஏக்கர் பரப்பளவில், ரூ.56.36 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள உலகத்தரம் வாய்ந்த ‘பொருநை அருங்காட்சியகத்தை’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பொருநை ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, துலுக்கர்பட்டி ஆகிய இடங்களில் கிடைத்த அரிய பொக்கிஷங்களின் சங்கமமாக இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

கட்டடக்கலையும் வசதிகளும்:
சுமார் 54,296 சதுர அடியில் அமைந்துள்ள இந்த வளாகம், உள்ளூர் கட்டடக்கலையைப் பிரதிபலிக்கும் வகையில் முற்றம் மற்றும் தாழ்வாரங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
-
அமைப்பு: அறிமுகக் கூடம் மற்றும் நான்கு தொல்லியல் தளங்களுக்கெனத் தனித்தனி கட்டடத் தொகுதிகள். தமிழ்நாட்டின் தொன்மை மற்றும் வரலாற்றினையும் சிவகளை, ஆதிச்சநல்லூர், துலுக்கர்பட்டி மற்றும் கொற்கை ஆகிய பகுதிகளின் முக்கியத்துவத்தையும் உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டும் வகையில் 15 நிமிட ஒளி-ஒலிக் காட்சி குளிரூட்டப்பட்ட அரங்கில் காட்சிப்படுத்தப்படுகிறது.
-
வசதிகள்: கண்கவர் நீர்த்தடாகம், திறந்தவெளி அரங்கம், தொல்லியல் மாதிரி விற்பனையகம், குழந்தைகள் பூங்கா மற்றும் முதியோர்களுக்கான மின்கல வாகனங்கள் என அனைத்தும் உள்ளன.
1. சிவகளை: 3,200 ஆண்டு விவசாய வரலாறு! சிவகளையில் 2019-2022 காலகட்டத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில் ஈமத்தாழிகள் மற்றும் வெண்கலப் பொருட்கள் கிடைத்தன. இங்கு கிடைத்த ‘உமி நீங்கிய நெல்மணிகளை’ அமெரிக்காவின் பீட்டா அனலடிக் ஆய்வுக்கூடத்தில் சோதனை செய்ததில், அதன் காலம் கி.மு. 1155 என உறுதியானது.
-
சிறப்பு: இதன் மூலம், 3,200 ஆண்டுகளுக்கு முன்பே பொருநை நதிக்கரையில் தமிழர்கள் நெல் விவசாயம் செய்துள்ளது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
2. ஆதிச்சநல்லூர்: நீர் மேலாண்மையும் தங்கமும்! இரும்புக் கால மக்களின் வாழ்வியலைப் பறைசாற்றும் இடமாக ஆதிச்சநல்லூர் உள்ளது.
-
இங்கு 21 சுடுமண் உருளைக்குழாய்கள் கிடைத்துள்ளன. இது முன்னோர்களின் நீர் மேலாண்மை அறிவுக்குச் சான்று.
-
கிடைக்கப்பெற்ற உயர்தர வெண்கலம் மற்றும் தங்கப் பொருட்கள், அன்றைய தமிழ்ச் சமூகத்தின் பொருளாதார வளத்தைக் காட்டுகிறது.
-
நுண்கற்காலக் கருவிகள் மூலம், இங்கு இரும்புக் காலத்திற்கு முன்பே மக்கள் வாழ்ந்தது உறுதியாகியுள்ளது.
3. இரும்பின் பயன்பாட்டில் உலக சாதனை!
அறிவியல் காலக்கணிப்பின்படி, சிவகளையில் இரும்புப் பயன்பாடு கி.மு. 3300 வரையிலும், ஆதிச்சநல்லூரில் கி.மு. 2613 வரையிலும் செல்கிறது. ஆக, தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 5,300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
5300 ஆண்டுகளுக்கு முன்னர் உலையில் இட்டு இரும்பு உருக்கும் தொழில்நுட்பம் தமிழ் நிலப்பரப்பில் தோன்றியது என்பது அறிவியல் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது. இவற்றினை விளக்கும் வகையில் இரும்பு உருக்குதல் செயல்முறை நேரடிக் காட்சி மற்றும் மாதிரி வடிவில் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
சிந்துவெளிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையேயான தொடர்பை வெளிப்படுத்தும் குறியீடுகள், பண்பாட்டுக்கூறுகள், தமிழ் இலக்கியங்கள் காட்டும் காட்சிகள் ஆகியவை ஒப்பீட்டுடன் விளக்கப்பட்டுள்ளன.
கொற்கைத் துறைமுகத்தில் கடல்வழி வணிகம் சிறப்புற்றிருந்தது. அயல்நாட்டு வணிகர்களுடன் தமிழர்கள் மேற்கொண்ட ஏற்றுமதி–இறக்குமதி வணிகத்தின் சிறப்பைக் கண்முன்னே கொண்டு வரும்வகையில் இரண்டு கலன்களின் மாதிரிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
4. துலுக்கர்பட்டி: குறியீடுகளின் சுரங்கம்!
இங்கு வெள்ளி முத்திரை நாணயங்கள், தந்தப் பொருட்கள் மற்றும் அரிய கல்மணிகள் கிடைத்துள்ளன.
-
குறிப்பாக, 5,000-க்கும் மேற்பட்ட குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்திருப்பது ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
5. கொற்கை:
கடல்கடந்த வணிகம்! பாண்டியர்களின் துறைமுகத் தலைநகரான கொற்கையில், ரோம் நாட்டு மற்றும் சீன நாட்டு பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இது தமிழர்களின் பன்னாட்டு வணிகத் தொடர்புக்குச் சான்று. கொற்கை கி.மு. 8-ம் நூற்றாண்டிற்கு முன்பே ஒரு சுறுசுறுப்பான துறைமுகமாகச் செயல்பட்டது உறுதியாகியுள்ளது.
முத்தாய்ப்பு: இயற்கையோடு இணைந்து, தமிழின் பெருமையை அறிவியலோடு நிறுவும் இந்த ‘பொருநை அருங்காட்சியகம்’, வருங்காலத் தலைமுறைக்கு நம் வரலாற்றைக் கடத்தும் ஒரு காலப் பெட்டகம்!
தென்காசி தேவா


