இணையுலக தாதா கூகுள் நிறுவனத்திலிருந்து சென் குப்தா ராஜினாமா!

உலகின் பிரமாண்ட வலைத் தேடல் பொறியான கூகுள், “எங்கள் நிறுவனத்தில் 15 ஆண்டுகள் பணியாற்றிய சென்குப்தா, குரோம், நெக்ஸ்ட் பில்லியன் யூஸா்ஸ், கூகுள் பே போன்றவற்றை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தவா். தற்போது கூகுள் நிறுவனத்தைவிட்டு விலகுவதாக அவா் தனிப்பட்ட முடிவை எடுத்துள்ளாா். அவா் அடுத்து உருவாக்கப்போவது என்ன என்பதை அறிய ஆவலுடன் உள்ளோம். அவரது புதிய பயணத்துக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளது.
இன்றைய காலக் கட்டத்தில் தவிர்க்க இயலாததாகி விட்ட இணைய உலகில் காலூன்றி மிரட்டிய ஏகப்பட்ட நிறுவனங்கள் சரிந்து காணாமல் போயிருக்கின்றன. அதே சமயம் விதையாய் புதைந்து ஆல மரமாகி போன நிறுவனங்களும் உண்டு. இவற்றுக்கு மத்தியில், தேடியந்திர நிறுவனமான கூகுள் 23 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இந்த கூகுள் நிறுவனத்தின் கூகுள் பே, நெக்ஸ்ட் பில்லியன் யூஸா்ஸ் ஆகியவற்றின் உதவித் தலைவராகவும், பொது மேலாளராகவும் பணியாற்றி வந்தவா் கெய்சா் சென்குப்தா. அவா் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
தனது ராஜினாமா குறித்து சென் குப்தா தன் லிங்க்டின் பேஜில், ’எனது முடிவு உங்களில் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடும் என்பதை நான் அறிவேன். இதனால் ஏற்படக்கூடிய எந்தவொரு வலி அல்லது ஏமாற்றத்திற்கும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் பூமியில் நம்முடைய நேரம் எங்கள் மிக அருமையான வளமாகும் என்று நான் அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். அதில் எனது தாக்கத்தை ஏற்படுத்த ஒரு புதிய வழியைக் கண்டு பிடிப்பதற்காக, நான் வெளியேறுகிறேன்.
என் இதயம் நன்றியும் மகிழ்ச்சியும் நிறைந்தது, கூகுள் மற்றும் நீங்கள் அனைவரும் எனக்குக் கொடுத்த பல அழகான தருணங்களைக் கொண்டாடுகிறது மேலும், என்னை உசுப்பேற்றி ஒரு பந்தயத்தில் ஈடுபடுத்தியதற்காக கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைக்கும் நன்றி’ என்று தெரிவித்தார்.